கலித்தொகை - பாலைக் கலி
87
தாம்பிரிந்து உறைதல் ஆற்றலர்;
பரிந்து எவன் செய்தி? வருகுவர் விரைந்தே.”
பாராட்டத்தக்க பெருமை வாய்ந்த கொம்பிலும் குளத்திலும் மலரும் மலர்களைத் தேடிப் பறிக்க வேண்டாதபடி தம்மைத் தாமே விரும்பிக் கொடுப்பது போல், மணம் வீசும் மலர்மாலை கட்டி மகிழும் மகளிர் இருக்கும் இடத்தில் வந்து, பூங்கொத்துக்கள் கொத்துக்கொத்தாகத் தாழ்ந்து, துறைகளை அழகு செய்ய, செம்மணிகளால் ஆன தலைக்கோலம் என்ற அணியை, அணிந்த தலைமயிர் போல், இடையிடையே செம்மணல் செறிந்து, அறல் பட்டுத் தோன்றும் வையையாற்றில், திருமகளின் மார்பில் அணிந்துள்ள முத்தாரம் போல், தெளிந்த நீரோடை வளைந்து வளைந்து செல்லும் வேனிற் காலத்தில் -
மலர்கள் மலர்ந்து கொண்டேயிருக்குமானால், குயில்கள் காதற் பெடையை அழைக்க, ஓயாது கூவுமானால், காதலர் நம்மைப் பிரிந்து, பின் நம்மை நினைக்கவுமாட்டாரானால், இவ்விளவேனிற் காலம் நம்மைப் பித்தேறச் செய்யுமானால், காதல் நினைவினால் வந்த நோயை இவன் தாங்கிக்கொள்வாள் என்று நினையாமல், இறந்து விடுவாள் என்று பிறர் எண்ணும்படி நீ வருந்த அக்காமநோய் பெருகுமானால், நம் தலைவர் நம்மிடத்தில் காட்டும் அன்பு என்ன பயனைத் தருமோ?
புதர்கள் தோறும் மலர்கள் மலருமாயின், பூஞ்சோலைகள் தோறும் வண்டுகள் வந்து மொய்க்குமாயின், நம் அயலில் வாழ்வார் அலர் கூறிப்பழிப்பதையே செய்வாராயின், அவர் நம்மைப் பிரிந்து நெஞ்சால் நினைப்பதும் செய்யாராயின் துயர் தீர்க்கும் துணையில்லாத நெஞ்சுடன் அவளும் துயர் தாங்கும் துணிவுடையள் அல்லள் என்று நினையாமல், நெற்றியில் பசலை படருமாயின், நம் தலைவர் நம் மீது காட்டும் அன்பு எத்தகையதோ!
கசிந்து வரும் நீர், மணலடியில் சென்று மறையும் வேனிற் காலமாயின், மரத்தில் வண்டுகள் வந்து மொய்க்குமாயின், மாமரம் தளிர் விடுமாயின், நம்மை மறந்துவிட்டுச் சென்ற காதலர் பின்னர் நினைப்பதும் செய்யாராயின், நீலமலர் போன்ற அழகை இழந்த நம் கண்கள் துயில்கொண்டு, துயரை மறக்காமல் தனிமையால் வரும் நோய் மிகுமாயின், நம்காதலர், நம்மீது காட்டும் அன்பு எத்தகையதோ!
- என்று, பயனிலாச் சொற்களை வழங்கிப் பழிக்காதே! காதலர்க்குத் துயர் நிலையைத் தெரிவிக்கத் தூது விடத் தேவை.