உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மா. இராசமாணிக்கனார்


இல்லை. வேனிற் காலத்தில் பிரிந்து வாழ்வதால் உண்டாகும் துயரை நம்மைக் காட்டிலும் அவரால் தாங்கிக்கொள்வது ஆகாது; ஆகவே விரைந்து வந்து விடுவார். அவர் இயல்பு அறியாமல், வருந்தி நீ என்ன காரியம் செய்கின்றாய்?

சினைய சுனைய-கொம்புப்பூவும் நீர்ப்பூவும். நாடினர்-தேடிச்சென்று. நயந்து-விரும்பி. கண்ணி-தலைமாலை. தையுபு-கட்டி. தோடு உற-மிகவும். செய்யவள்-திருமகள். அகலம்-மார்பு. தொய்யகம்-தலைக்கோலம் என்னும் அணி. கதுப்பு-கூந்தல். துவர் மணல்-சிவந்த மணல். ஆனா-மேலும் மேலும் மலர. ஆலும்-கூவும். பேதுறூஉம்-மயக்கம் செய்யும். படர்-துன்பம். அவல நோய்-காமநோய். அளி-அருள். புதல்-புதர்கள். பொங்கர்-பூஞ்சோலை. மதலை-பற்றுக்கோடு. மதன்-ஆற்றல். புலம்பு-பிரிவுத்துயர். உறைதல்-வாழ்தல். பரிந்து-வருந்தி.


28. களைஞர் வந்தனர்!

வேனிற் பருவம் வரவும், கணவன் வாராதிருந்ததைக் கண்டு வருந்திய அவன் மனைவியைத் தோழி வருந்தாதே என்று கூறவும் கேளாமல் அவள் வருந்திக் கொண்டேயிருக்க, அந்நிலையில், வந்து சேர்ந்த அவன் வருகையைத் தோழி அவளுக்கு அறிவித்தது இது:

"தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கைபோல்,
பல்பயம் உதவிய பசுமைதீர் அகன்ஞாலம்
புல்லிய புனிறுஒரீஇப், புதுநலம் ஏர்தர
வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள 5

இளையவர் ஐம்பால்போல் எக்கர்போழ்ந்து அறல்வார,
மாஈன்ற தளிர்மிசை மாயவள் திதலைபோல்
ஆயிதழ்ப் பன்மலர் ஐயகொங்கு உறைத்தர,
மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்
சேயார்கண் சென்றஎன் நெஞ்சினைச், சின்மொழி! 10

நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன்; நிறைநீவி,
வாய்விரிபு, பனிஏற்ற, விரவுப்பன் மலர்தீண்டி
நோய்சேர்ந்த வைகலான் வாடைவந்து அலைத்தரூஉம்;
போழ்துஉள்ளார் துறந்தார்கண் புரிவாடும் கொள்கையைச்
சூழ்புஆங்கே, சுடரிழாய்! காப்பென்மன்; கைநீவி 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/89&oldid=1737265" இலிருந்து மீள்விக்கப்பட்டது