பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

173

அரசியற் கருத்துக்கள்

இராச்சியத்தை எதிர்த்தார்கள் என்று கருத இடமில்லை. சிவாஜி இந்து மதத்தில் தீவிரமான பற்றுடையவர். இராமதாஸ் என்னும் அவருடைய குரு இந்து மதத்தைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கித் தம் நூல்களிற் கூறியுள்ளார். சிவாஜியின் சமயப்பற்றே அவரது அரசியல், போர்க்கள வெற்றிகளுக்கு அடிப்படை என்பது தெளிவு. சீக்கியர்கள் அரசியல் உலகில் முன்னேறியதும் அவர்களுடைய சமய அடிப்படையினாலேயாம்.

இந்தியப் பேரரசர்களில் தலைசிறந்தவர்கள் என்று கருதப்படுபவர்களில் அக்பர் நீங்கலாக அசோகர், ஔரங்கசீப், கிருஷ்ணதேவராயர், சிவாஜி ஆகிய பலரும் ஓரளவேனும் சமயச் சார்புடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். அரசி பேரறிக்கையோடு (1858) அம்மரபு மறைந்து, புதியதொரு இலௌகிக மரபு தோன்றிற்று.

தற்காலம் : அரசியற் கருத்துக்களை ஆராயுங்கால் தற்கால இந்தியா என்பது 1800 லிருந்து 1950 வரையுள்ள ஒன்றரை நூற்றாண்டுகளைக் குறிக்கும் என்று கொள்வோம். இக்காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான அரசியல் நிகழ்ச்சி ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் தங்கள் ஆட்சியை நன்கு நிலைப்படுத்திக் கொண்டதேயாகும். இந்த ஆட்சி தொடங்குவதற்கு முன்பு மொகலாயர் ஆட்சியும், அவர்கட்கும் முன்பு முகம்மதியர்கள் ஆட்சியும், அதற்கும் முன்பு இந்துக்களில் பலவகை உட்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆட்சியும் இந்தியாவில் நடைபெற்று வந்திருக்கின்றன. இவ்வாட்சி வேறுபாடுகள் எல்லாம் அரசாங்க நிலையில் மட்டும் நிகழ்ந்து வந்தனவேயன்றி மக்களுடைய வாழ்க்கை முறை ஏறத் தாழ ஒரே வகையாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் சமூக வாழ்க்கையும், மக்களுக்கு அரசாங்கத்தைப்பற்றிய கொள்கைகளும் ஆட்சிமுறை வேறுபாடுகளால் சிறிதும் மாறுபடவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி தொடங்கிய பிறகும் இந்தச் சமூக வாழ்க்கைமுறை மாறுபடாமல் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களுடைய சமூக சமயக் கோட்பாடுகளிலோ, பயிற்சிகளிலோ தலையிடுவதில்லை என்று 1858-ல் விக்டோரியா அரசியின் பேரறிக்கை கூறிற்று. அதனால் அரசாங்கம் தலையிடாமலே மக்கள் தங்கள் நாட்டுப் பழக்க வழக்கங்களினின்றும் வழுவாது வாழ்ந்துவர இயன்றது.

ஆயினும் ஆங்கில ஆட்சிக்கும் அவர்கட்கு முன்பு இந்தியாவில் நடந்த ஆட்சிக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அதாவது 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவுகள் ஆங்கிலேயர்களோடு இந்தியாவில் வந்தடைந்தன. தொழிற் புரட்சியினால், பொருளாதார நிலைமையும், கைத்தொழில் முன்னேற்றமும், வாழ்க்கைத் தரமும், ஒன்றை யொன்று ஒட்டி மாறுபடுவனவாகையால், இந்திய சமூக, சமய வாழ்க்கைகளில் மாறுபாடுகள் ஏற்படவில்லையாயினும் பொருளாதார அரசியல் நோக்கங்களும் கோட்பாடுகளும் இந்தியர்கள் அதுவரை யறிந்திராத புதுமுறையில் ஏற்படத் தொடங்கின. தங்களுடைய நன்மைக்காகத் துபாஷிகளைப் பயிற்சி செய்யும் நோக்கத்தோடு ஆங்கிலக் கல்வியை மேனாட்டு முறைகளில் இந்தியாவிற் புகுத்தத் தலைப்பட்ட ஆங்கிலேயர்கள் தாங்கள் எதிர்பாராத சில விளைவுகள் அக்கல்வியால் ஏற்படக்கூடும் என்று அறியவில்லைபோலும். இந்தியர் மேனாட்டு முறையில் குடிமை உரிமைகளையும் கடமைகளையும் ஆட்சித் தத்துவத்தையும் பற்றி ஆராயத் தலைப்பட்டனர். மேனாட்டுச் சமூக அமைப்பும், ஜனநாயகக் கருத்துக்களும், சமத்துவம், சுதந்திரம் முதலிய சொற்களின் உட்கோளும் இந்திய நாட்டு மக்களின் மனத்தில் பதியலாயின. இந்திய சமூக அமைப்பு, அதிலும் இந்து சமூக அமைப்பு, பிறப்பை யொட்டிய நால்வகைப் பாகுபாடாக இயங்குகின்றது. இவ்வமைப்பிற்கும் சமத்துவக் கொள்கைக்கும் தொடர்பில்லை. உண்மையில் ஆங்கில ஆட்சியுள்ளும் சமத்துவம் என்பது கொள்கையளவிற்கே யிருந்ததாயினும், பொதுமக்களுக்கு அக்கொள்கையே வாழ்க்கையின் விரும்பத்தகாத சில அமிசங்களை எதிர்க்கப் போதுமான கருவியாயிருந்தது. அரசியல் துறையில் ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் பெரிய அளவில் வேற்றுமையிருந்தது; சமத்துவத்திற்கு இடமில்லை; சுதந்திரம் அன்னியர் ஆட்சியில் இருக்க முடியாது. இக்கருத்துக்கள் மக்கள் மனத்தில் கிளர்ச்சியுண்டாக்கின.

மேனாட்டுக் கல்வியின் விளைவாக இந்தியாவில் பலர் சமூகச் சீர்திருத்தங்களை வேண்டுவராயினர். ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் இந்தியர்களுடைய முன்னேற்றம் ஆங்கிலக் கல்வியை ஏற்பதினாலேயே உண்டாகக்கூடும் என்று கருதினர். "வடமொழிக் கல்வியால் இந்தியர்களுக்கு அறியாமையும் குறுகிய நோக்கங்களும் வளரும்" என்று ராம்மோகன்ராய் போன்றவர்கள் கூறினர். இவர்கள் மேனாட்டார்களைக் காட்டிலும் ஒருபடி முன்னேறிச் சென்று, மேனாட்டுப் பழக்கவழக்கங்களையும் கருத்து முறைகளையும் போற்றினர். இவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பது இதன் பொருளன்று. ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலியவற்றை நிறுவியவர்கள் இக்கருத்தால் ஊக்கப்பட்டவர்களே. ஆங்கிலேயர்களும் தாங்கள் அறிந்த அரசியற் கருத்துக்களும் வாழ்க்கை முறைகளும் ஏனையவற்றைக் காட்டிலும் சிறந்தவை என்று கருதுமியல்பினர். தாமஸ் மன்ரோ என்பவர், "முஸ்லிம்கள் மத விஷயங்களில் எவ்வளவு பிடிவாதமுள்ளவர்களோ அவ்வளவு ஆங்லேயர்கள் அரசியல் விஷயத்தில் பிடிவாதமுள்ளவர்கள்" என்று கூறினார். இது பெரும்பாலும் உண்மையே. ஆங்கிலக் கல்வியும் ஆங்கில மரபும் புகுந்துதான் இந்தியாவை நன்னெறியில் செலுத்த முடியும் என்று அவர்கள் கருதினர். சமூகச் சீர்திருத்தம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் இருப்பதாக அவர்கள் கண்ட சில குறைபாடுகளை யகற்றுவதற்காகச் சிலர் மேற்கொண்ட முயற்சியே. ஆனால் விரைவில் இதனினும் பெரியதொரு இயக்கம் தோன்றலாயிற்று. அதுவே தேசிய இயக்கம்.

1857-ல் உண்டான சிப்பாய்க் கிளர்ச்சி யாதொரு பெரிய அரசியல் கோட்பாட்டினின்றும் எழுந்ததில்லையாயினும் நாட்டிற் சில பகுதியினர்க்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு அது வழிகாட்டிற்று. ஆயினும் 1858ஆம் ஆண்டுப் பேரறிக்கை, பொதுமக்களுக்கு ஆங்கில ஆட்சியில் நம்பிக்கை ஏற்படுத்திற்று. ஏராளமான மக்கள் வாழ்ந்துவரும் பெரிய நாட்டைச் சிலரைக் கொண்டு ஆளவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால், போக்குவரத்துச் சாதனங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு சாலை, ரெயில், தபால், தந்தி முதலியனவெல்லாம் ஏற்பட்டது இந்நாட்டு மக்களுக்கும் நன்மைசெய்வதாயிற்று. ஆதலால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி மக்களால் பொதுவாக விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றே கூறலாம்.

ஆயினும் சிறிய அளவில் தோன்ற ஆரம்பித்த தேசிய உணர்ச்சி விரைவில் பரவலாயிற்று. ஆட்சியில் நாட்டு மக்களையும் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றும்,