பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

174

அரசியற் கருத்துக்கள்

ஆணையாளர்கள் எதேச்சாதிகாரம் செலுத்துவதைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டுக் கொள்வதற்குக் காங்கிரசு ஸ்தாபனம் முதன் முதலில் ஏற்பட்டது. இந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்துவதற்கு ஹியூம், வெடர்பர்ன் முதலிய மேனாட்டார் சிலர் பெருமுயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் தேசிய காங்கிரசு கமிட்டி நாட்டாருடைய கருத்துக்களை எடுத்துப் பல ரறியக் கூறி, ஆட்சியாளருடைய குறைபாடுகளை அம்பலப்படுத்தும் தொழிலாற்றி வந்தது. அன்றியும் தாதாபாய் நௌரோஜி போன்ற சிலர் இங்கிலாந்திலேயே இருந்துகொண்டு, அங்குப் பார்லிமென்டு அங்கத்தினர் பதவியையும் பெற்று, இந்தியாவின் சார்பில் மிதமான கிளர்ச்சிகள் செய்து வந்தனர்.

இந்திய தேசிய காங்கிரசு முதல் உலக யுத்தம் தொடங்கும் வரையில் பெரும்பாலும் ஒரே கருத்துடைய மக்களது ஸ்தாபனமாக இருந்துவந்தது. சூரத் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகள் பிற்காலத்தில் அந்த ஸ்தாபனத்தில் ஏற்படவிருந்த பிளவுகளுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தன. அந்த ஸ்தாபனம் அழியாமல் அன்னியர் ஆட்சியை எதிர்த்து வந்தது பல திறப்பட்ட அரசியற் கருத்துக்களை யுடையவர்களுக்கும் காங்கிரசு இடங்கொடுத்தது என்பதைக் காட்டுகிறது.

கர்சன் பிரபு வைசிராயாக இருந்த காலத்தில் அவர் எதிர்பாராத விதத்தில் இந்தியாவில் தேசிய உணர்ச்சி வளர்வதற்கு உதவி புரிந்தார். அவருடைய சொற்பொழிவுகளும் அரசியற் செயல்களும் மக்களின் மனத்தை வருத்தும் முறையில் அமைந்தன. அவர் செய்துவைத்த வங்காளப் பிரிவினை வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கிற்று. ஆங்கிலேயர்கள் எல்லோரையும் கர்சன்களாகவே இந்தியர்கள் கருதும் நிலைமை வந்தது. வங்காளப் பிரிவினையால் ஏற்பட்ட மனக் கசப்பே ஆங்கில ஆட்சிக்கு முதற்பகை என்று கூறலாம். மேனாட்டார்களுடைய முறைகளில் நம்பிக்கை மறைந்து, தேசியம் தலையெடுக்கத் தொடங்கிய தருணத்தில் ஏற்பட்ட ரஷ்யா - ஜப்பான் யுத்தம் ஜப்பானுக்கு வெற்றியாக முடியவே, அந்நிகழ்ச்சி மேனாட்டார்கள் தோல்வியறியாதவர்கள் என்னும் ஐதிகத்தை மாற்றிவிட்டது. மேனாட்டாரை அவர்களுடைய ஆயுதங்களைக் கொண்டே வெல்ல முடியும் என்பது தெளிவானவுடன் பொதுவாகக் கீழ்நாட்டுப்பற்று மிகலாயிற்று.

அக்காலத்தில் அரவிந்தர் போன்ற அமிதவாதிகளுடைய, அதாவது புரட்சிக்காரர்களுடைய இயக்கங்களும், கோகலே போன்றவர்களுடைய மிதவாதச் சொற்பொழிவுகளுமே அரசியல் அரங்கில் தென்பட்டன. வங்காளத்தில் புரட்சி இயக்கம் ஓரளவு பரவியிருந்தது; ஹார்டிஞ்சு பிரபுவைக் கொல்ல எத்தனித்தது (1910) இவ்வியக்கத்தின் வேகத்தைக் காட்டும். 1916-ல் அன்னி பெசன்டம்மை ஆரம்பித்து நடத்திய ஹோம்ரூல் இயக்கம் சிறிது ஊக்கமாக நடந்ததாயினும் மக்களின் உள்ளத்தைப் பிணிக்காமல் விரைவில் தளர்ந்தது. பெரும்பான்மை மக்களுடைய ஆதரவின்மையால் அவ்வியக்கங்களும் கருத்துக்களும் எளிதில் அரசாங்கத்தால் அடக்கப்பட்டன.

யுத்தம் முடிந்த பிறகு அரசியல் துறையில் பல நன்மைகள் உண்டாகும் என்று கருதிய மக்கள் 1919 ஆம் ஆண்டு மான்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் ஏமாற்றமடைந்தனர். அப்போது ஏற்பட்ட கிலாபத் இயக்கமும் காந்திஜியின் புது அரசியல் கொள்கையைப் பரப்புவதற்கு வசதியளித்தது.

காந்திஜியின் அரசியல் கோட்பாடுகளுக்கும், அவருக்கு முன் அரசியல் துறையில் இந்தியாவில் இருந்தவர்களுடைய கோட்பாடுகளுக்கும் வேறுபாடு அடிப்படையானது, இந்திய அரசியலில் காந்திஜியின் கோட்பாடுகளுக்கு இருந்த ஆதரவு வேறு எந்தக் கோட்பாடுகளுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஏனெனில் காந்திஜி எடுத்து விளக்கிய சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை என்னும் எதிர்மறை இயக்கம் முதலியவையும், அவற்றை நடைமுறையில் கொண்டுவருவதற்கு அவர் கையாண்ட நெறிகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை யாவும் இந்தியப் பண்பாட்டிற்கும், இந்தியப் பொதுமக்களின் மனநிலைக்கும் ஏற்ப அமைந்திருந்தன. ஆகையால், பெரும்பான்மைப் பொது மக்களுடைய ஆதரவு அவருடைய இயக்கத்திற்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பரவியிருந்த லிபரல் கொள்கையை அந்நாட்டு நூல்களைப் படித்துக் கொள்கையளவில் ஆதரித்து வந்தவர்கள் ஆங்கிலப் படிப்புப் படித்த சிலர் மட்டுமே. ஆங்கில மொழியும், ஆணையாளர்களுடைய அரசியல் சமூகக் கோட்பாடுகளும் பொதுமக்கள் வாழ்க்கையில் கலக்கவில்லையாதலின் ஆங்கிலக் கல்வி கற்று, நாட்டுப் பண்பாட்டை மறந்தவர்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் தொடர்பற்றுப் போயிற்று. இது இவ்வாறாக, காந்திஜி நாட்டு மக்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்நிலையில் மற்றக் கோட்பாடுகள் எல்லாம் மறைந்து, காந்திஜியின் செல்வாக்கு அரசியலில் ஓங்கியது இயற்கையே. எளிய வாழ்க்கை, கதர்த்திட்டம், கிராம முன்னேற்ற இயக்கம், வார்தாக் கல்வி முறை, அஹிம்சை முதலியவை இந்தியாவிற்கு உகந்த திட்டங்கள் ; வரி கொடாமை, ஒத்துழையாமை, சட்ட மறுப்பு முதலிய இயக்கங்களிலும் மக்கள் சிறிதும் சலியாமல் அவரைப் பின்பற்றியது அவரிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கையினாலேயே. அவர் மேனாட்டுப் பிரசார முறையையும் இயக்க முறைகளையும் ஸ்தாபன முறைகளையும் கையாண்டு, ஜனநாயகம், சமத்துவம்,அரசியற் சுதந்திரம், தீண்டாமை யொழிப்பு குழந்தை மண ஒழிப்பு, கைம்பெண் மறுமணம் முதலிய பிற கருத்துக்களையும் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும்படி செய்தது அவரது வெற்றியின் காரணத்தை விளக்கும். சுருங்கக் கூறின், காந்திஜியின் இயக்கங்கள் மேனாட்டு முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட உண்மையான இந்திய இயக்கங்களாக அமைந்தன; சமூகத்தின் மேற்புறணியை மட்டும் கீறிவிடாமல், சமூகம் முழுவதிலும் அவர் கருத்துக்கள் பரவலாயின.

ஆயினும் இரண்டு உலக யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் காந்திஜியின் கருத்துக்களேயன்றி வேறு சில அரசியற் கோட்பாடுகளும் இந்திய அரசியலில் தோன்றின. ஆஸ்திரியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் பன்னாள் தங்கி, மார்க்ஸ் முதலிய ஆசிரியர்களுடைய தத்துவங்களில் ஈடுபட்டு நின்ற சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களுடைய மார்க்சிசக் கொள்கைகளும், ரஷ்யாவில் பன்னாள் வாழ்ந்துவந்த எம். என். ராயின் மார்க்சிசக் கொள்கைகளும் இந்திய அரசியலிற் புகுந்த காலம் அதுவே. வகுப்புவாதத்தின் மூலம் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் மரபு முஸ்லிம் லீக், இந்து மகாசபை முதலியவற்றின் தலைவர்களால் வலுப்பெற்றது. தென்னாட்டில் தோன்றித் தழைத்த பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு, சமூகச் சீர்திருத்தம் என்னும் நிலையில் இயங்கிற்றாயினும் அதுவும் வகுப்பு வாதத்தை முக்கியக் கருவியாகக் கொள்ளவேண்டி-