பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநிலையங்களும் நிபந்தங்களும்

254

அறநிலையங்களும் நிபந்தங்களும்

திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களாம். இக்கோயில்கள் பல நூற்றாண்டுகட்கு முன்னர்க் கட்டப்பெற்றவை யெனினும், இன்றும் சிற்பம், கட்டடச் சிற்பம் ஆகியவற்றின் வியத்தகு சிகரங்களாக இலங்குகின்றன. இக்கோயில்களும் ஆயிரக்கணக்கான வேறு கோயில்களும் நிபந்தங்களாகப் பெற்ற நிலமும் நகையும் ஏராளமாக உடையனவாகவும், மக்களால் பெரிதும் போற்றப்படுவனவாகவும் இருக்கின்றன.

இந்துமத நிபந்தங்கள், கோயில்களுக்கென்றும் மடங்களுக்கென்றும் இருவகைப்படும். மடங்கள் தோன்றுவதற்கு முன்னர்க் கோயில்கள் தோன்றியவை. வழிபாடும் செபமும் நடத்துவதற்காகக் கோயில்களும், ஆன்ம போதனை தருவதற்காக மடங்களும் உண்டாயின. கோவில் நிபந்தங்கள் இருவகைப்படும். ஒன்று கோவில் பூசையும் திருவிழாவும் நடைபெறுவதற்காக அமைவது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட பூசை, அபிஷேகம், விழாப் போன்றவற்றிற்காக அமைவது. இது கட்டளை என்றும் பெயர் பெறும்.

இந்து மதப் பிரிவுகளின் ஆசாரியர்கள் மத போதனை செய்வதற்காகவும், மத அறிவைப் பரப்புவதற்காக ஒரு நல்ல ஆசிரியப் பரம்பரையை உண்டாக்குவதற்காகவும் மடங்களை நிறுவினார்கள். சங்கராசாரியார் மடம், உடுப்பி மாத்துவ மடம், தருமபுர மடம், திருவாவடு துறை மடம், திருப்பனந்தாள் மடம், திருக்கண்ணன்குடி மடம், வானமாமலை மடம், அகோபில மடம் ஆகியவை சென்னை இராச்சியத்திலுள்ள மடங்களில் முக்கியமானவை. மடாதிபதிகள் சீடர்களுடைய அன்புக்கும் மக்களுடைய மதிப்புக்கும் பாத்திரமானவர்களாக, அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக இருந்தபடியாலும், அவர்கள் மக்களுக்குப் பலவித நன்மைகள் செய்துவந்தபடியாலும், அரசர்களும் சீடர்களும் ஏராளமான சொத்துக்களை நிபந்தங்களாகக் கொடுத்ததோடு பல கோயில்களை நடத்தும் பொறுப்பையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இந்த நிபந்தங்களின் உதவியைக் கொண்டு மடாதிபதிகள் மத அறிவைப் பரப்பி வந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற மடங்கள் தமிழ் இலக்கியத்துக்குச் செய்துள்ள சேவை பெரிதாகும். சென்னை இராச்சியத்திலுள்ள முக்கியமான மசூதிகள் நாகூர், திருப்பரங்குன்றம், கொள்ளிடம், பரங்கிப்பேட்டை, திருவல்லிக்கேணி, பல்லாவரம் முதலிய இடங்களிலுள்ளவை.

நிபந்தம் ஏற்படுத்தப் பத்திரம் வேண்டும் என்பதில்லை. நிபந்தம் ஏற்படுத்துகிறவர் தமக்கு அத்தகைய நோக்கம் இருப்பதாகத் தெரிவித்து நிபந்தம் ஏற்படுத்திவிட்டால் பின்னர் அதை மாற்ற முடியாது.

நிபந்தம் முழு நிபந்தமாகவும் இருக்கலாம், பகுதி நிபந்தமாகவும் இருக்கலாம். நிபந்தம் ஏற்படுத்துகிறவர் தரும் சொத்தில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாதவாறு ஏற்படுத்துவாரானால் அது முழு நிபந்தமாகும். அப்படிக்கின்றித் தமக்கோ, தம்முடைய சந்ததிகட்கோ அதிலிருந்து நன்மை பெறுவதற்காக, அதன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் தரும காரியத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவாரானால் அது பகுதி நிபந்தமாகும். அப்பொழுது அந்த நிபந்தப் பொருள் ஒருகிபந்தம் உடையதாகும். முழு நிபந்தத்தை ஏற்படுத்துறவர் அதன் சொத்தை ஸ்தாபனத்திடம் ஒப்படைத்துவிடலாம், அல்லது தாமும் தம்முடைய வாரிசுகளும் தருமகர்த்தர்களாக இருந்து பரிபாலித்து வரலாம்.

கோயில் நிபந்தங்களையும் கட்டளைகளையும் பரிபாலித்து வருபவர் தருமகர்த்தர் எனப்படுவர். அவர்களுக்கு நிபந்தத்திலோ அதன் வருமானத்திலோ எவ்விதச் சொந்த உரிமையும் இல்லை. அவர்கள் நிபந்தத்துக்குரிய நோக்கங்களுக்காக அதைப் பரிபாலிக்கும் பொறுப்பு மட்டுமே உடையவர்கள் ; அவர்களுக்கு அந்தப் பதவி வாரிசுபாத்தியமாயும் கிடைக்கலாம், அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு நியமனம் செய்யப்பட்டும் கிடைக்கலாம். மடாதிபதிகள் பரிபாலிக்கிறவர்கள் மட்டுமல்லர் ; நிபந்தச் சொத்தின் வருமானத்தை விருப்பம்போல் செலவு செய்வதற்கான அதிகாரம் உடையவர்களுமாவர். அவர்கள் மடத்தின் வழக்கத்தை ஒட்டி, முந்தின மடாதிபதியினாலோ அல்லது மடத்துச் சீடர்களினாலோ தேர்ந்தெடுக்கப்பெறுவார்கள்.

தரும நிபந்தங்கள் மத நிபந்தங்களைவிட எண்ணிக்கையிலும் அளவிலும் மிகக் குறைந்தவை. தரும நிபந்தங் களில் தலையாயவை, வடநாட்டு யாத்திரிகர்களுக்காக இராமேசுவரம்வரை சாலைகள் அமைத்த தஞ்சை மகாராஷ்டிர அரசர்கள் ஏற்படுத்திய தஞ்சைச் சத்திர நிபந்தங்களாகும்.

சென்னை இராச்சியத்தில் சுமார் இருபதாயிரம் கோயில்களும் மடங்களும் இருக்கின்றன. அவற்றுள் பாதி ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் இருநூறு ரூபாய்க்கு அதிகமான வருமானம் உடையவை.

பிரிட்டிஷார் வருவதற்குமுன், மத நிபந்தங்களும் தரும நிபந்தங்களும் அரசர்களுடைய மேற்பார்வையில் இருந்து வந்தன. பிரிட்டிஷாரும் அதுபோலவே செய்தார்கள். வருமானத்தைச் செலவு செய்வதற்கும், பாலங்கள், சத்திரங்கள் போன்ற பொதுநலப் பணிகள் செய்வதற்கும் வேண்டிய விதிகளை இயற்றினார்கள். சென்னை இராச்சியத்தில் செய்த இத்தகைய விதித் தொகுதி 1817ஆம் ஆண்டின் ஏழாம் தொகுதி என்பதாகும். இது மத நிபந்தங்களையும் தரும நிபந்தங்களையும் ரெவினியூ போர்டார் மூலம் நிருவகிப்பதற்காக ஏற்பட்டது. அதனால் நிருவாகம் திறமையாக நடந்தது ; ஸ்தாபனங்கள் பயன் அடைந்தன. இந்து, முஸ்லிம் நிபந்தங்கள் விஷயத்தில் தலையிடுவது கிறிஸ்தவ அரசியலார்க்கு அடுக்காத செயல் என்று கிறிஸ்தவப் பாதிரிமார் கிளர்ச்சி செய்ததின் பயனாக, அரசியலார் 1842ஆம் ஆண்டில் தாங்கள் கண்காணித்து வந்ததை விட்டுவிட்டார்கள். அரசியலார் கண்காணிப்பு நீங்கவே, மத நிபந்தங்களின் நிருவாகம் தவறாக நடக்கவும், முறை பிறழவும் தொடங்கிற்று. ரெவினியூ போர்டார்க்குப் பல்வேறு அலுவல்கள் இருந்தபடியால் அவர்களால் தரும நிபந்தங்களைக் கண்காணிக்க முடியாமற் போகவே அவற்றின் நிருவாகமும் சீர்கேடு அடைந்தது.

அரசியலார் 1863ஆம் ஆண்டில் கோயில் நிபந்தங்கள் சம்பந்தமாக 'மத நிபந்தச் சட்டம்' ஒன்றை இயற்றினார்கள். ஆனால் அச்சட்டத்தில் குறைபாடுகள் இருந்தமையாலும், பெரும்பாலான கோயில்கள் அச்சட்டத்தின் அமலுக்கு உட்பட்டனவாக இல்லாதிருந்தமையாலும், அந்தச் சட்டம் பயனற்றதாக ஆயிற்று. அதன்பின் பல முயற்சிகள் செய்து, இறுதியில் 1923-ல் சென்னைச் சட்ட சபையார் மடங்களுக்கும் பொருந்தும்படியாகச் சென்னை இந்துமத நிபந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இச்சட்டம் பின்னர்ச் சில சந்தர்ப்பங்களில் திருத்தப்பெற்றது. 1951ஆம் ஆண்டில் இது ரத்துச் செய்யப்பெற்றுச் சென்னை இந்துமத தரும நிபந்தச் சட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது எல்லாப் பொது மதநிபந்தங்களையும் அரசியலாரே தனி இலாகா அமைத்து நிருவகிக்குமாறு செய்திருக்கின்றது. இச் சட்டம் தரும நிபந்தங்களுக்கும் பொருந்துமாறு செய்வ-