பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்சின்

299

ஆக்சிஜன்

மாற்றுவது இதற்கு உதாரணமாகும். அயக உப்பை அயச உப்பாக மாற்றுவதும் குறைத்தலேயாகும். இவ்வினையில் இரும்பின் நேர்வலுவெண் குறைகிறது. பொதுவாக ஒரு பொருளிலிருந்து எதிர்மின்சார அணுவை அகற்றும் வினையும், நேர்மின்சார அணுவைச் சேர்க்கும் வினையும் குறைத்தல் எனப்படும்.

சில வினைகளின்போது ஆக்சிகரணமும் குறைத்தலும் ஏககாலத்தில் நிகழும். உதாரணமாக, அயச சல்பேட்டும், பொட்டாசியம் பெர்மாங்கனேட்டும் வினைப்பட்டால் பொட்டாசியம் சல்பேட்டும், மாங்கனச சல்பேட்டும், அயக சல்பேட்டும் கிடைக்கின்றன. இதில் இரும்பின் வலுவெண் இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிப்பதால் இது ஆக்சிகரணமாகும். ஆனால் மாங்கனீசின் வலுவெண் ஏழிலிருந்து இரண்டாகக் குறைவதால் இது குறைத்தலுமாகும்.

ஆக்சின் (Auxin) தாவரங்களின் வளர்ச்சியை முறைப்படுத்தி நடத்தும் ஹார்மோன் கூட்டம். வளர்ச்சி விரைவாக நடக்கும், கரு குருத்து, மொக்கு, தளிர், தண்டின்முனை முதலிய இடங்களில் இந்த ஆக்சின்கள் உண்டாகின்றன. செடியின் பாகங்கள் வெளிச்சத்தை நாடி வளர்ந்துவரச் செய்பவை இவையே. வெளிச்சம் தண்டின் ஒரு பக்கத்தில் விழுந்தால் ஆக்சின்கள் வெளிச்சம்படாத நிழலான பக்கத்தில் போய்ச் சேர்ந்துகொள்வதைக் காணலாம். இவை நிழலான பாகத்தில் மிகுதியாகச் சேரவே, அந்தப் பாகத்திலுள்ள உயிர் அணுக்கள் அதிகமாக வளர்கின்றன. ஆகவே வெளிச்சம் விழும் பாகத்தைவிட, வெளிச்சம் விழாத பாகம் அதிகமாக வளர்வதால், தண்டானது வெளிச்சம் இருக்கும் பக்கமாக வளைகிறது.ஆக்சின்கள் 1918-ல் கண்டுபிடிக்கப்பட்டன. கிளைகளைத் துண்டித்து நட்டுச் செடிகளை வளர்க்கும்போது அவற்றில் வேர் விரைவாக உண்டாவதற்காகத் தோட்டவேலை செய்வோர் ஆக்சின்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றை இதற்காக விற்கிறார்கள். பார்க்க: ஹார்மோன்.

ஆக்சிஜன் (Oxygen) : (குறியீடு ◯; அணுவெண் 8; அணுநிறை 16·0000). உலகிலேயே மிக அதிகமாகக் காணப்படும் தனிமம் இதுதான். நிறையளவில் இது காற்றில் சுமார் 21% உள்ளது. இது அநேகமாக எல்லாத் தனிமங்களுடனும் கூடுவதால் இயற்கையில் பல கூட்டுக்களில் காணப்படுகிறது. நீரில் இது ஒன்பதில் எட்டு பங்கும் பாறைகளில் அரைப்பங்கும் உள்ளது. உயிர்ப் பொருள்களின் திசுக்களிலும் இது அதிகமான அளவு உள்ளது. உயிர்கள் மூச்சுவிடவும் பொருள்கள் எரியவும் உதவுவதால் ஆக்சிஜன் மிக முக்கியமான பொருளாக விளங்குகிறது.

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் தத்துவ அறிஞரொருவர் காற்றிலுள்ள வாயுக்கள் இருவகைப்படும் என்றும், அவற்றுள் ஒன்று வீரியமுடையதென்றும், பொருள்கள் எரியக் காரணமாகிறது என்றும் தெளிவாக்கி இருந்தார். காற்றிலுள்ள ஆக்சிஜனை முதன்முதல் 1772-ல் ஷீலேயும், 1774-ல் பிரீஸ்ட்லியும் தனியே பிரித்தார்கள்.

தயாரிப்பு: பொட்டாசியம் குளோரைடு போன்ற சில உப்புக்களைச் சூடேற்றி ஆக்சிஜனைப் பெறலாம். மெர்க்குரிக ஆக்சைடு போன்ற சில உலோக ஆக்சைடு களைச் சூடேற்றினாலும் ஆக்சிஜன் வெளிவரும். பொட் டாசியம் குளோரேட்டுடன் சிறிது மாங்கனீஸ் டையாக் சைடைச் சேர்த்தால் இன்னும் தாழ்ந்த வெப்பத்தி லேயே ஆக்சிஜன் வெளிவரும். சோதனைச் சாலையில் இந்த வாயுவைப் பெற இம்முறை பயனாகிறது.

தொழில் முறையில் ஆக்சிஜனைத் தயாரிக்க முன்னர்ப் பல முறைகள் வழங்கி வந்தன. ஆனால் தற்போது வேறு இரு முறைகள் முக்கியமானவையாக விளங்குகின்றன. நீரின் வழியே மின்சாரத்தைப் பாய்ச்சினால் நீரானது ஹைடிரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு வாயுக்களாகப் பிரிகிறது. இரும்புத் தொட்டியில் சோடாக்காரக் கரைவை இட்டு, அதற்குள் இரும்புத் தடிகளைத் தொங்கவிட்டு, இவற்றை மின் முனைகளாகக் கொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சினால் மின் பகுப்பு நிகழ்கிறது. தடிகளின்மேல் இரும்பினாலான மணிச்சாடிகள் கவிழ்க்கப் படுகின்றன. வெளிவரும் வாயுக்கள் மணிச்சாடிகளில் சேகரிக்கப்பட்டுக் குழல்களின் வழியே கடத்திச் செல்லப்படுகின்றன. ஆனால் இம்முறையில் மின்சாரச் செலவு அதிகம்.

ஆக்சிஜனைத் தயாரிக்க மற்றொரு முறை இதைவிட மலிவானது. இதில் காற்றைத் திரவமாகக் குளிர்வித்து, அத்திரவத்தை வாலைவடிவித்துப் பகுத்து, ஆக்சிஜனைத் தனியே பெறுகிறார்கள். காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடையும், நீராவியையும் அகற்றி, அதைக் குளிர்வித்து அழுத்தி அது விரியுமாறு செய்கிறார்கள். காற்று இந்த அகற்சியினால் குளிர்கிறது. இவ்வாறு அதைப் படிப்படியாகக் குளிர்வித்துத் திரவமாக்கலாம். திரவக் காற்றை ஒரு நீண்ட திருத்தும் தம்பத்தின் வழியே செலுத்தி, அதை ஆவியாக்கினால் நைட்ரஜனும், ஆக்சிஜனும் வெவ்வேறாகப் பிரிந்து வெளியேறும். கிளாடு (Claude) என்பவர் கண்டுபிடித்த முறையில் காற்றை இருபடிகளில் திரவமாக்கினால் இரு திரவங்கள் வெவ்வேறாகப் பெறப்படும். இவற்றுள் ஒன்றில் ஆக்சிஜனின் விகிதம் அதிகமாகவும், மற்றதில் நைட்ரஜனின் விகிதம் அதிகமாகவும் இருக்கும்.

ஆக்சிஜனை 120-150 காற்று மண்டல அழுத்தத்தில் எஃகு உருளைகளில் அடைத்து விற்கிறார்கள்.

பண்புகள்: ஆக்சிஜன் நிறமும், மணமும், சுவையும், நச்சுத் தன்மையும் அற்ற வாயு. இது காற்றைவிடக் கனமானது. இது நீரில் சிறிதளவே கரையும். நீர் நிலைகளில் கரைந்துள்ள ஆக்சிஜனை உட்கொண்டு மீன்போன்ற பிராணிகள் வாழ்வதால் இயற்கையில் இவ்வாறு கரைந்துள்ள ஆக்சிஜன் முக்கியமானது. ஆக்சிஜனை - 182·9°க்குக் குளிர்வித்தால், அது இலேசான நீல நிறத் திரவமாகிறது. இத்திரவம் காந்தத் தன்மையுள்ளது. இதைத் திரவ ஹைடிரஜனில் குளிர்வித்து நீலநிறமான திண்மத்தைப் பெறலாம். (உ.நி.- 219°). ஆக்சிஜன் வாயுவின் வழியே மின்சாரத்தைச்செலுத்தினால், அது ஓசோன் (த.க.) என்ற கூட்டாக மாறுகிறது. இது ஆக்சிஜனைவிட வினைமிக்கது. பொருள்கள் காற்றில் எரிவதைவிட ஆக்சிஜனில் நன்றாக எரிகின்றன. ஆக்சிஜனைக் கொண்ட கலத்தினுள் ஒரு குழலின் வழியே ஹைடிரஜனைச் செலுத்தி, அதை எரியவிட்டால், கலத்தில் நீர்த்துளிகள் தோன்றக் காணலாம். இருவாயுக்களும் கூடி நீரைத் தோற்றுவிக்கின்றன. மிக நுண்ணிய தூளாக உள்ள பல பொருள்கள் ஆக்சிஜனில் தாமாகப் பற்றி எரியும்.

பயன்கள்: உற்பத்தியாகும் ஆக்சிஜனில் சுமார் 85% வரை ஆக்சி-அசிடிலீன் அல்லது ஆக்சி-ஹைடிரஜன் ஊதுகுழலில் பயன்படுகிறது. தக்க விகிதத்தில் ஆக்சிஜனையும், அசிடிலீன் அல்லது ஹைடிரஜனையும் கலந்து எரித்தால் மிக உயர்ந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தில் உலோகங்கள் எளிதில் உருகுவதால் இந்த ஊதுகுழல் இணைத்தல் வேலையிலும் (த.க.)

உலோகத் தகடுகளை வெட்டவும் பயன்படுகிறது.