பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்கினேய புராணம்

298

ஆக்சிகரணமும், குறைத்தலும்


ஆக்கினேய புராணம் பதினெண் புராணங்களுள் ஒன்று, 8000 கிரந்தம் உடையது. சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விவரணம், அரச நீதி, சோதிடம், ஒளடதம் முதலியவற்றைச் சுருக்கிக் கூறும்.

ஆக்கூர்: தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்திலிருந்து கிழக்கே 10 மைலில் உள்ளது. கோயில் மாடக்கோயில். அதற்குத் தான்றோன்றி மாடம் என்று பெயர். சிறப்புலி நாயனார் ஊர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் இவ்வூருக்கு உண்டு. சுவாமி தான்தோன்றியப்பர். அம்மை வாள்நெடுங்கண்ணியம்மை.

ஆக்சஸ் ஆறு சோவியத் நடு ஆசியாவிலுள்ளது. அமுதாரியா என்றும் அழைக்கப் பெறும். பாமிர் பீடபூமியில் உற்பத்தியாகி ஆரல் கடலில் போய்ச் சேருகிறது; 1500 மைல் நீளமுடையது. பெரும்பாலும் ஆழம் குறைவு. பாசனக் கால்வாய்கள் பல வெட்டப்பட்டுள்ளன.

ஆக்சாலிக அமிலம் (Oxalic acid) : குறியீடு : (HOOC-COOH) இருமூலக் கரிம அமிலங்களில் எளிய அமைப்புள்ளது இதுவே. இதில் கார்பாக்சில் தொகுதிகள் நேரே இணைந்துள்ளன. இது பல தாவரப்பொருள்களில் காணக்கிடைக்கும். இதன் கால்ஷிய உப்பு உயிரணுக்களில் உள்ளது. சிறுநீரில் இது சிறிது அளவு இருக்கும். மரத்தூளைக் காரத்துடன் இளக்கி நீரிற் கழுவிக் கார ஆக்சலேட்டுகளாக இதைப் பெறலாம். சோடியம் பார்மேட்டை 200° வெப்பநிலையில் சூடேற்றி இது பெறப்படுகிறது. பட்டகவடிவான படிகங்களாக இதைப் பெறலாம். நீரிற் கரையும். அடர் கந்தகாமிலத்துடன் இதைச் சற்றுச் சூடேற்றினால் இது கார்பன் மானாக்சைடு, கார்பன் டையாக்சைடு நீர் ஆகிய பொருள்களாகச் சிதைகிறது. இதன் இரு கார்பாக்சில் தொகுதிகளும் மிக அருகில் இருப்பதால் இது எளிதில் கார்பன் டையாக்சைடை இழந்து, ஒரு மூல அமிலமான பார்மிக அமிலமாக மாறுகிறது. அமிலங்கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு இதை ஆக்சிகரணிக்கும். இவ்வினை ஆக்சாலிக அமிலத்தின் அளவறியப் பயன்படுகிறது.

பயன்கள்: ஆக்சாலிக அமிலம் தொழில்களில் பல வகைகளில் பயன்படுகிறது. இந்த அமிலமும், இதன் அலுமினிய உப்புக்களும், ஆன்டிமனி உப்புக்களும் நிறம் நிறுத்திகளாகப் பயன்படுகின்றன. அச்சுத் தொழிலிலும், தோல் பதனிடுதலிலும் இவை பயனாகின்றன. மைக்கறைகளை நீக்க ஆக்சாலிக அமிலம் பயன்படும்.

ஆக்சாலிக அமிலம் ஒரு நஞ்சு. சுண்ணாம்பும் சீமைச் சுண்ணாம்பும் இதற்கு மாற்றாகும். எஸ். எஸ். க.

ஆக்சலேட்டுகள்: ஆக்சாலிக அமிலத்தின் உப்புக்கள் ஆக்சலேட்டுகள் எனப்படும். கார ஆக்சலேட்டுகள் நீரிற் கரையுந் திறனுள்ளவை. கால்ஷியம் ஆக்சலேட்டு நீரிற் கரையாது. பொட்டாசியம்-அயச-ஆக்ச லேட்டு [Fe K2 (C2O2)2· H2O] மிக வலிவான குறைக்கும் பொருள். ஆகையால் போட்டோ உருத்துலக்கியாக இது பயன்படுகின்றது. பொட்டாசியம் அயக - ஆக்சலேட்டு சூரிய ஒளியால் சிதையும். ஆகையால் இது அச்சுத் தொழிலில் பயன்படுகிறது.

கரிம ஆக்சலேட்டுகளில், எதில் ஆக்சலேட்டு ஒரு திரவம். மெதில் ஆக்சலேட்டு ஒரு திண்மம். இவ்விரண்டும் நறுமணமுள்ளவை. மெதில் ஆக்சலேட்டிலிருந்து சுத்தமான மெதில் ஆல்கஹாலைத் தயாரிக்கலாம். ஆக்சாலிக அமிலத்தின் எஸ்டர்களை அம்மோனியாவால் வினைப்படுத்தினால் ஆக்சமைடு (Oxamide) என்ற கூட்டுக் கிடைக்கும். வெண்மையான தூளான இது பாஸ்வர பென்டாக்சைடுடன் வினைப்பட்டு சயனஜன் வாயுவை அளிக்கிறது.

ஆக்சி அசிடிலீன் ஊதுகுழல் (Oxy acetylene blowpipe) என்பது ஆக்சிஜனையும் அசிடிலீனையும் கலந்து ஒரு குழலில் செலுத்தி எரிக்கும் அமைப்பாகும். இந்த இரு வாயுக்களும் கலந்து எரிவதால் மிக அதிகமான வெப்பம் தோன்றுகிறது. இவ்வாறு பெறப்படும் சுடரின் உச்ச வெப்பம் சுமார் 4400°வரை இருக்கலாம். ஆகையால் இது உலோக வேலைகளுக்கு மிகவும் ஏற்றது. உலோகத் தகடுகளை வெட்டவும், உறுப்புக்களைச் செப்பனிட அவற்றைப் பிரித்தெடுக்கவும் உலோக இணைப்புக்களைச் செய்யவும் இது பெரிதும் பயனாகிறது. உலோக உறுப்புக்களை வளைக்கவோ, நிமிர்த்தவோ, இதைப் பயன்படுத்தலாம். கண்ணாடிப் பொருள்களைத் தயாரிக்கும்போது இதைக்கொண்டு கண்ணாடியை உருக்கலாம். இச்சுடரைக் கொண்டு உலோகங்களை வெட்டும்போது வெட்ட வேண்டிய இடத்தின்மீது படும்படி வேறொரு குழாயின் வழியே ஆக்சிஜன் அனுப்பப்பெறுகிறது. ஆக்சிஜன் படும் உலோகபாகம் எரிந்து ஆக்சிகரணமாகிறது. இவ்வாறு தோன்றும் ஆக்சைடு சுடரின் விசையினால் தகர்வதால் உலோகம் துண்டாகிறது.

அழுத்தமான நிலையில் உருளைகளில் அடைக்கப்பட்ட ஆக்சிஜனும் அசிடிலீனும் குழாய்களின் வழியே ஊதுகுழலுக்குள் அனுப்பப்பட்டு எரிக்கப்படுகின்றன. இந்த வாயுக்களின் அளவைத் திருத்தமாகக் கட்டுப்படுத்தலாம். ஊதுகுழலைக் கையில் பிடித்துக் கொண்டோ, எந்திரங்களைக்கொண்டோ வேலை செய்வார்கள்.

ஆக்சிகரணமும், குறைத்தலும் (Oxidation and Reduction) : ரசாயன மாறுதல்களில் முக்கியமான இருவகைகள் ஆக்சிகரணமும் குறைத்தலும் ஆகும். முதன்முதலில் ஆக்சிகரணம் என்ற சொல் ஒரு தனிமத்துடன் ஆக்சிஜனைக் கூட்டுவதைக் குறித்தது. உதாரணமாக, கந்தகம் காற்றில் எரிந்து, கந்தக டையாக்சைடாக மாறுவது ஆக்சிகரணம். பின்னர் இது வேறு சில வினைகளுக்கும் பொதுப்பெயராகிறது. ஹைடிரஜனைக் கொண்ட ஒரு கூட்டிலிருந்து அதன் விகிதத்தைக் குறைப்பதும் ஆக்சிகரணம் எனப்படும். உதாரணமாக, ஹைடிரஜன் சல்பைடு காற்றிலே எரிந்து நீராகவும், கந்தகமாகவும் மாறுவது ஆக்சிகரணம். இன்னும் சில வினைகளில் ஆக்சிஜன் ஈடுபடாவிட்டாலும் அவையும் ஆக்சிகரணம் என்றே அழைக்கப்படுகின்றன. ஒருவினையில் ஒரு தனிமத்தின் நேர் அணுவலுவெண் (த. க.) ரசாயன விளைவினால் அதிகமானால் அவ்வினை ஆக்சிகரணம் எனப்படும். உதாரணமாக, அயச குளோரைடு அயக உப்பாக மாறினால் இதுவும் ஆக்சிகரணமே யாகும். இவ்விரு கூட்டுக்களிலும் ஆக்சிஜனே இல்லை. ஆனால் இவ்வினையினால் இரும்பின் அணுவலுவெண் இரண்டிலிருந்து மூன்றாக உயர்கிறது. பொதுவாகக் கூறினால், நேர்மின்சார அணுவை அகற்றும் வினையும், எதிர்மின்சார அணுவைச் சேர்க்கும் வினையும் ஆக்சிகரணம் எனப்படும். இத்தகைய வினைகளுக்குக் காரணமான பொருள்கள் ஆக்சிகரணிகள் எனப்படும். இதற்கு நேர்மாறான வினை குறைத்தல். குறைத்தல் என்பது ஒரு பொருளில் ஆக்சிஜனின் விகிதத்தைக் குறைப்பதாகும். உலோக ஆக்சைடை உலோகமாக