பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

316

ஆங்கிலம்

லும் காணலாம். இவரது இடையனின் பஞ்சாங்கம் (Shepherd's Calendar) என்ற நூல் பொருளிலும் நடையிலும் புது சகாப்தத்தைத் துவக்கி வைத்தது. இவர் பழங் கதைக்குப் புது மெருகு கொடுத்து, எதுகையின் உதவியால் இசை நயம் மிக்க பாக்களை அமைத்துப் புதிய கவிதை வடிவைத் தோற்றுவித்தார். அரசியைப் புகழ்ந்து பாடப்பெற்ற மாப்பெருங் காவியமான தேவ அரசி (Faerie Queene) என்ற நூல் இவருடைய புகழுக்குக் காரணமாக விளங்குகிறது. இதில் காணப்படும் பாக்கள் கற்பனைத் திறனும், சொல் நயமும், வடிவழகும் நிறைந்துள்ளன. இக் காவியத்தின் கதைச்செறிவும், உள்ளுறை பொருளும் போற்றற்குரியன. இலக்கியப் புலமை மிக்க சர் பிலிப் சிட்னியும் புகழ் பெற்ற கவிவாணரில் ஒருவர். உலக வரலாற்றை எழுதப் புகுந்த சர் வால்டர் ராலே என்ற வீரரும் அக்காலத்திய இலக்கியக் கர்த்தாக்களில் ஒருவர். கவிதையின் வாயிலாகக் கதை சொல்லும் வழக்கம் அக்காலத்தில் பரவிவந்தது. கிரிஸ்டபர் மார்லோ என்ற நாடகாசிரியரும் ஷேக்ஸ்பியரும் இத்துறையில் நல்ல கவிதைக் கதைகளை இயற்றினார்கள். ஷேக்ஸ்பியரது பாக்களில் மலிந்திருக்கும் கற்பனைத்திறன் நம்மைத் திகைக்கவைக்கிறது. இவரது சானட்டுக்கள் (Sonnets) அழகும், தெளிவும், வேகமும் பொருந்தின.

ஆனால் ஆங்கில இலக்கிய வரலாற்றில் எலிசபெத் காலம் நாடக நூல்களுக்கே புகழ் பெற்று விளங்குகிறது. தங்குதடையின்றிப் பாயும் கவிதை நடையிலும், நகைச்சுவை ததும்பும் உரைநடையிலும் நாடகங்களை இயற்றும் ஆசிரியர் பலர் எலிசபெத் காலத்தில் தோன்றினர். ஆங்கில நாடகப் பரம்பரையைத் தோற்றுவித்த கிரிஸ்டபர் மார்லோ தமது இருபத்து எட்டாம் வயதில் இறப்பதற்கு முன்னரே இத்துறையில் பெரும் புரட்சி விளைவித்தார். டாம்பர்லேயின் (Tamburlaine), டாக்டர் பாஸ்டஸ் (Doctor Faustus), மால்ட்டா யூதன் (Jew of ·Malta), எட்வர்டு II போன்ற இவரது சிறந்த நாடகங்கள் இடியோசை போன்ற வலிமையும், முழுமதியைப் போன்ற அழகும் ஒருங்கே இணைந்த சிறப்பான நடையை உடையன. துன்பியல் நாடகங்களை எழுத இவர் பிற்காலத்தவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

இவரது வழியில் வந்த ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்று விளங்குகிறார். அக்காலத்திய நாடகக் கலை உச்சநிலையை அடைய இவர் காரணரானார். பிற நூல்களிலிருந்து கதைகளையும் கற்பனையையும் தயங்காது எடுத்தாண்டு, தமக்கே உரிய பாணியை இவர் அமைத்துக்கொண்டார். கருத்தை வெளியிடுவதில் இவருக்கிருந்த திறமையும், பாட்டியற்றுவதில் இவர் பெற்றிருந்த வன்மையும், மானிட உள்ளத்தையும், மானிடனது செயலையும் எல்லா நிலைகளிலும் ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் இவர் காட்டிய திறனும், இவரது கலைப்பண்பும் இவர் இன்றும் செலுத்தும் அரசிற்குக் காரணமாக விளங்குகின்றன.

ஷேக்ஸ்பியரின் நண்பரும், அவரைவிடக் கல்வியிற் சிறந்தவருமான பென் ஜான்சன் (Ben Jonson) 17ஆம் நூற்றாண்டில் பல நாடகங்களை எழுதினார். இவருக்குப்பின் நாடகக் கலை தனது சிறப்பை இழந்து பண்பாடற்ற இலக்கிய வடிவத்தை அடைந்து மெல்ல மறைந்துவிட்டது.

எலிசபெத் காலத்தின் இறுதியில் ஜான் மில்ட்டன் தோன்றினார். ஸ்பென்சரின் மாணவர் என இவர் தம்மைக் கருதினார். ஸ்பென்சரது கவிதையின் பெருந் தன்மையையும், பழங்கதையைப் பின்னணியாகக் கொண்டு கவிதை இயற்றும் திறமையையும் பெற்றிருந்தார். இளமையில் இவர் இயற்றிய நூல்களில் ல' அல்லிக்ரோ (L' Allegro). இல் பென்சிராசோ (II Penseroso) ஆகியவை புகழ் பெற்றவை. லிசிடாஸ் (Lycidas) என்ற இரங்கற் பாடலில் இவரது கவிதைத்திறன் நன்கு புலனாகிறது. இவரது புகழுக்கு இவர் முதுமையில் எழுதிய துறக்க நீக்கம் (Para- dise Lost), துறக்க மீட்சி (Paradise Regained) ஆகிய இருபெருங் காவியங்களும் காரணமாக உள்ளன. வாழ்க்கையில் இவர் பட்ட இன்னல்களும், மதக்கோட்பாடுகளைப்பற்றி அந்நாளில் இருந்த விவாதங்களும் இவரது பல உரைநடை நூல்களுக்குக் காரணமாயின.

அக்காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பியூரிட்டன் (Puritan) இனத்தவரின் சிறந்த பிரதிநிதியாக ஜான்பன்யன் விளங்கினார். உண்மையும் கற்பனையும் பிரிக்கமுடியாத வகையில் இவரது இரட்சணிய யாத்திரிகம் (Pilgrim's Progress) என்ற ஒட்டுவமைக் கதையில் காணப்படுகின்றன. ஆங்கிலக் குழந்தைகளுக்கு அற நூலாகவும், முதியோருக்கு வசன காவியமாகவும் அது விளங்குகிறது. விவிலிய நூலைப் பின்பற்றும் இவர் நடை சக்தி வாய்ந்தது.

மில்ட்டன், பன்யன் ஆகியவர்களைத் தவிர தாமஸ் பிரவுன், ஐசாக் வால்ட்டன் ஆகிய உரைநடை ஆசிரியர்களும் அக்காலத்தி லிருந்தார்கள். அரசியல் துறையில் அதிகாரச் செறிவு முறையை ஆதரித்த தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) என்ற தத்துவ ஞானி லெவையதன் (Leviathan) என்ற நூலை எழுதினார். உள் நாட்டுக் கலகத்தின் வரலாற்றை எழுதிய கிளாரண்டன் பிரபுவும் இங்குக் குறிப்பிடத் தக்கவர்.

பொற்காலம் (Augustan Age) : மில்ட்டனுக்குப்பின் சுமார் 100 ஆண்டுகள் பகுத்தறிவு மனப்பான்மை உச்சநிலையை அடைந்தது. ஜான் டிரைடன் (John Dryden) இக்காலத்தின் முதல்வர். ஹிரோயிக் ஈரடிச் செய்யுள், எளிய உரைநடை, வீராவேச நாடகம், இலக்கிய விமர்சனம், எள்ளித்திருத்தும் உரை, சிந்தனையைத் தூண்டும் கவிதை முதலிய பல துறைகளில் இவர் செய்த பணி நிலையானது. இவருடைய உரைநடை தெளிவும் திருத்தமும் உடையது. தற்கால உரைநடைக்கே இது வழிகாட்டியாக அமைந்தது.

அலெக்சாந்தர் போப் கவிதைத் துறையில் ஒரு தனி இயக்கத்தையே தொடங்கி வைத்தார் எனலாம். கணக்கியலில் கையாளும் திருத்தத்தை இவர் கவிதைகளில் காணலாம். தெளிவும் உறுதியும் நிறைந்த இவர் நடை தனிச் சிறப்புள்ளது. இவர் நூல்களிலுள்ள நூற்றுக்கணக்கான வரிகளும் வாக்கியங்களும் பாமரர் நாவிலும் பழமொழிகளாக இன்றும் உலவி வருகின்றன. இவர் முறையில் பாடும் கவிஞர்கள் ஏராளமாகத் தோன்றியது இவர் கவிதையை யந்திரத் தொழிலாக்கிவிட்டார் என்று குறை கூறுதலுக்குச் சான்றாகும். இயற்கையைப் பாடும் மரபைப் போக்கி, நாகரிக வாழ்வைப் பற்றிப் பாடும் வழக்கத்தைத் தோற்றுவித்தார். இவருக்குப்பின் வந்த ஜேம்ஸ் தாம்சன், காலின்ஸ், கிரே முதலியோர் இயற்கையழகையும், கவிதை யுணர்ச்சியையும் மீண்டும் ஆங்கிலக் கவிதையுள் சேர்க்க முயன்றனர்.

போப்பைப் பின்பற்றாத புலவருள் ஸ்விப்ட் (Swift), ஜான்சன், கோல்டுஸ்மித் முதலியோர் குறிப்பிடத் தகுந்தவர். பிரயரும் (Prior), கேயும் (Gay) சிறந்த உணர்ச்சிப் பாடல்களை இயற்றினர். ஜான்சன் தமது கம்பீரமான நடையில் லண்டன், மனித விருப்பங்களின் நிலையாமை (Vanity of Human Wishes)