பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலம்

332

ஆங்கிலம்

தாகூர். பிறவிக் கவியாகிய இவர் தம்முடைய தாய் மொழியாகிய வங்காளத்தில் எழுதியும், பின் ஆங்கிலத்தில் தாமே மொழிபெயர்த்தும் வெளியிட்டு இருபதாவது நூற்றாண்டு இலக்கிய உலகின்கண் இலங்கிய கவியரசுகளிடையே தனிப்பெருமை அடைந்து தோன்றினார். கீதாஞ்சலி, தோட்டக்காரன் (Gardener), பிறை மதி (Crescent Moon) முதலான பாடல்கள் தாகூருக்கு நோபெல் இலக்கியப்பரிசை வாங்கிக்கொடுத்தன. மேலும் இவர் உள்ளம் கவரும் சில அரிய நூல்களை உரைநடையில் எழுதி வெளியிட்டார். சாதனா, தேசியம் (Nationalism), ஆளுமை (Personality), மனிதன் மதம் (Religion of Man) இந்நூல்கள் முக்கியமானவை.

சரோஜினிதேவியும் அவருடைய சகோதரர் ஹரீந்திரநாத சட்டோபாத்யாயாவும் இந்தோ-ஆங்கிலக் கவியுலகில் உன்னத பதவி அடைந்தனர். சரோஜினி தேவி தங்க வாசல் (Golden Threshold), காலப் பறவை (The Bird of Time), ஒடிந்த சிறகு (The Broken Wing) முதலிய அரிய நூல்களை இளமையிலேயே வெளியிட்டுப் பெயர் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களால் புகழப்பெற்றார். இவர் நளினமான சொற்களால் காதுக்கினிமையான வழியில் கவிகள் அமைத்து, உள்ளங்கவரும்படி பாக்கள் பாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா இளமையின் விருந்து (Feast of Youth), மண்ணின் மணம் (The Perfume of Earth) முதலான பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.

பல ஆண்டுகள் மங்களூர்க் கல்லூரித் தலைவராக இருந்த ஜீ. கே. செட்டூரின் காதலின் வெற்றி (Triumph of Love), கோவிற் குளம் (The Temple Tank). கடவுளின் நிழல் (The Shadow of God) முதலியன ; பிரின்சிபால் சேஷாத்திரியின் பில்ஹணா, சண்பக இலைகள் (Champak Leaves), வீணான காலம் (Vanishing Hours) ; ஹுமாயூன் கபீரின் பத்மா, ஜஹாநரா முதலிய கவிகள்; அர்மாண்டோ மெனிசீஸின் நிதி (The Fund), குடியேறியோன் (Emigrant), கல்லூரித் தலைவர் ததானியின் கண்ணன் குழல் (Krishna's Flute), டெல்லியின் வெற்றி (Triumph of Delhi); கல்லூரித் தலைவர் சாரநாதய்யங்காரின் முதல்கற்றை (First Sheaves), பேராசிரியர் டி. பி. கிருஷ்ணசுவாமி முதலியார், பேராசிரியர் உமாமகேஷ்வர், பேராசிரியர் பூஷன், பேராசிரியர் டி. சி. தத்தா, இவர்களுடைய கவிதைகளும் கவனிக்கற்பாலன. பேராசிரியர்கள் தவிர ஆங்கிலக் கவி வரைவதில் புகழ்பெற்றவர்களுள் முக்கியமானவர் மஞ்சேரி ஈசுவரன், கே. டி. செத்னா, திலீப்குமார் ராய், நீலிமாதேவி,பாரதிசாராபாய், எஸ். ஆர். டோங்கர்கரி ஆவர்.

இந்தியர்கள் ஆங்கிலத்தில் இயற்றிய நாடக இலக்கியம் சிறிதளவே ஆகும். தாகூர், அரவிந்தர், ஹரீந்திரநாத் முதலானோர் இயற்றிய நாடகங்கள் அரங்கமேடையில் அதிகமாக நடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. சென்னை உயர்தர நீதிமன்ற நீதிபதியாக இருந்த வீ. வீ. ஸ்ரீநிவாசய்யங்கார் எழுதிய நாடகப் பொழுது போக்கு (Dramatic Divertisement) நகைச்சுவை, இலக்கியச்சுவை இரண்டும் ததும்பும் வண்ணம் சில சிறு நாடகங்களைக் கொண்டது. இந்தோ-ஆங்கில நாவல்களுள் கார்னீலியா சொராப்ஜியின் படுதாவுக்குப் பின் நிகழும் காதலும் வாழ்க்கையும் (Love and Life behind the Purdha), எஸ்.எம். மித்ராவின் ஹிந்துப்பூர் : அமைதியற்ற இந்திய வாழ்க்கையில் ஒரு பார்வை (Hind- pur: A Peep behind the Indian Unrest); ஜோகேந்திர சிங்கின் நூர்ஜஹான் ; எஸ். எம். பானர்ஜியின் வங்காளம் கதைகள் : ஏ. மாதவய்யாவின் தில்லை கோவிந்தன் என்னும் சிலவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு உலக யுத்தங்களுக்கிடையே பல நாவல்கள் வெளிவந்தன. வேங்கடரமணியின் முருகன் ஆகிய ஓர் உழவன் (Murugan the Tiller), தேசபக்தன் கந்தன் (Kandan the Patriot) இரு நாவல்கள்; சங்கரராமின் மண்ணாசை (Love of Dust); ஆர். கே. நாராயணனின் சுவாமியும் அவன் சிநேகிதர்களும் (Swamy and His Friends), பட்டதாரி (Bachelor of Arts), இருட்டறை (The Dark Room); குமரகுருவின் வாழ்க்கை நிழல்கள் (Life Shadows) ; தனகோபால் முக்கர்ஜியின் காரி என்னும் யானை (Cary the Elephant), என் சகோதரரின் முகம் (My Brother's Face); அஹம்மது அப்பாஸின் நாளை நம்முடையதே (Tomorrow is Ours); அஹம்மது அலியின் டெல்லியின் சந்தியா காலம் (Twilight in Delhi); நீதிபதி ஏ. எஸ். பி. ஐயரின் பாலாதித்யா, விதியின் மூவர் (Three Men of Destiny); சாந்தா சாடர்ஜியின் பொன் கூடு (The Cage of Gold); எஸ். கே. செட்டூரின் பம்பாய்க் கொலை (Bombay Murder) ; வீ.வீ. சிந்தாமணியின் வேதாந்தம்; எஸ். நாகராஜனின் அதாவர் ஹவுஸ்; ராஜாராவின் காந்தபுரம்; திவான் ஷாவின் காங்க் ஆப் சிவா என்பவை முக்கியமானவை.

நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சிறு கதைகள் பத்திரிகை வாயிலாக வெளிவந்திருக்கின்றன. இந்தியர்களால் எழுதப்பட்ட இச்சிறு கதைகளில் சில மேனாட்டுப் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. ரவீந்திரநாத் தாகூர், கே. எஸ். வேங்கட ரமணி, சங்கரராம், மஞ்சேரி ஈசுவரன், ஆர். கே. நாராயணன், முல்க்ராஜ் ஆனந்த் முதலானோர் பெயர்கள் சிறுகதை உலகில் விளங்குகின்றன. இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் சிலவே. பி. சீ. ரே. எழுதிய சீ. ஆர். தாஸின் வரலாறும், கர் தார் சிங்கின் குருகோவிந்த சிம்ஹனின் வாலாறும், சர்தார் பணிக்கரின் குலாப் சிங்கின் வரலாறும், யதுநாத் சர்க்காரின் இந்திய வரலாறு சம்பந்தமான சில வாழ்க்கை வரலாறுகளும். வீ. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரியின் கோபாலகிருஷ்ண கோகலே சரிதமும், கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங்காரின் அரவிந்த சரிதமும் நன்மதிப்புப் பெற்றன. ஆங்கில சுயசரிதைகளும் வெளிவந்திருக்கின்றன. பார்க்க : வாழ்க்கை வரலாற்று இலக்கியம்.

பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள் மகாத்மா காந்தி, லோகமான்ய பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபினசந்திர பாலர், சீ. ஒய். சிந்தாமணி, என். சீ. கேல்கர், கஸ்தூரி ரங்கய்யங்கார், அரங்கசாமி அய்யங்கார். தற்காலத்தில் போத்தன் ஜோசப், சலபதி ராவ், ஈச்வர் தத், நா. ரகுநாதன், டி. எப். காரகா முதலானோர் ஆங்கில மொழியை அழகாகக் கையாண்டு வருகின்றனர்.

இலக்கியத் திறனாய்வுத்துறையில் (Criticism) முன்னேற்றம் அதிகம் இல்லையென்றாலும் கீழே கண்ட இலக்கியங்கள் முன்னணி அடையும் விதமாக அமைந்திருக்கின்றன எனக்கொள்ளலாம். சித்தாந்தாவின் இந்தியாவின் வீரக் காலம் (Heroic Age of India), பண்டிட் அமரநாத் ஜாவின் ஷேக்ஸ்பியரின் இன்பவியல் நாடகம் (Shakespearian Comedy); டாக்டர் ஒய். கே. யாஜ்னிக்கின் இந்திய நாடக அரங்கு (Indian