பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிக் குடிகள்

369

ஆதிக் குடிகள்

அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதில்லை. இனப் பெண்ணை மணம் செய்துகொள்வதில்லை. (இந்திய நாட்டிலும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணத்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை). மேலும், பல இனத்தவர் தங்களுக்கென்று கட்டுப்பாடுகளையும்

அமெரிக்க இந்தியப் பெண்
உதவி : நெதர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி

(Taboos) வகுத்துக் கொண்டனர். “இதைச் செய்யக்கூடாது, இதைத் தொடலாகாது, இதனருகில் செல்லலாகாது” என்பனபோன்ற தடைகளிருந்தன. தலைவனும் இனப்பெரியவர்களும் இத்தகைய தடைகளைப் புகுத்தவும் விலக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். இவைகளை மீறுபவர்கள் கடவுளால் ஒறுக்கப்படுவார்களென்ற மனப்போக்குமிருந்தது. மதம் மற்றொரு வலிமை. அரசன் அல்லது தலைவன் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். சட்டதிட்டங்கள் கடவுளிடமிருந்து பிறந்தவை என்ற எண்ணமுமிருந்தது. இஸ்ரவேல் மக்கள் தொகுதியினர் தாங்கள் கடவுளின் தனிப்பட்ட அன்புக்குத் தகுதியானவர்கள் என்ற கருத்துடனிருந்தனர். அராபியர்களுக்குள்ளிருந்த கிலாபத்துப் (Khilafat) பற்று அவர்கள் தொகுதிகளை நெருக்கமாக இணைத்தது. நாட்கள் செல்லச்செல்ல அரசியலுணர்ச்சியும் மக்களிடைத் தோன்றி, அவர்களை நாகரிகப் பாதையில் முன்னேறச் செய்தது. மக்கள் தொகுதிகளுக்குள் சச்சரவு ஏற்பட்டு, வலுவுள்ள தொகுதி வலுக்குறைந்தவைகளைத் தன்னுள்ளடக்கியதாலும் சமூகங்கள் விரிவடைந்தன. இவ்வகையில் சொத்துள்ளவர் இல்லாதவர், பிரபுக்கள் பாமர மக்கள் என்ற ஏற்றத் தாழ்வுகளும் வேறுபாடுகளும் உண்டாயின.

ஐரோப்பிய வரலாற்றுத் தொடக்கத்து ஆட்சித்திட்டங்களிற் சில பொதுவான அமிசங்களைக் காணலாம். இவை பண்டைக்காலக் கிரேக்கர், ரோமானியர், பின்னர் ரோமானிய சாம்ராச்சியத்தைத் தகர்த்த ஜெர்மானியக் குடிமக்கள் ஆகிய இவர்களால் கைக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் தலைமையில் அரசன் அல்லது தலைவன் இருப்பான். அவனுக்கு ஆலோசனை கூறக் குடியின் பெரியோர்கள் கொண்ட ஒரு சபை இருக்கும். மேலும், மிகவும் முக்கியமான செய்திகளைக் கேட்டு இசைவதற்காக ஆண் மக்கள் அடங்கிய பொதுக்கூட்டமும் உண்டு. இத்தகைய நிலையங்கள் அநேகமாக எங்கும் அமைந்திருந்தன.

மேலே குறிப்பிட்ட மூன்று பண்டைக்காலக் குடிமக்களில் கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கும் காலத்திலிருந்த ஜெர்மானியரை ஆதிமக்களாக நாம் கருதலாம். எனினும், காலக்கிரமத்தில் ஆதியில் வந்தவர்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களின் ஆட்சி முறையைப் போலவே சுமார் கி. மு. 10ஆம் நூற்றாண்டில் ஹோமர் காலத்துக் கிரேக்கர்களும், கி. மு. 7ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களும் திட்டங்கள் வகுத்திருந்தனர். அதனால் கிரேக்க, ரோமானியத் திட்டங்கள் வளர்ச்சியில் ஜெர்மானியர் திட்டங்களைவிடச் சற்று மேலேறினவை எனக்கூற இடமிருக்கிறது.

தொடக்ககால ஜெர்மானியக் குடிகளின் ஆட்சி முறையைக் கி.மு.முதல் நூற்றாண்டில் வசித்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீசரும், கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த டாசிட்டஸ் (Tacitus) என்பவரும் தங்கள் நூல்களில் வருணித்திருக்கிறார்கள். சீசர் முதலில் எழுதியவர். அவர் நாட்களில் அரசியலதிகாரத்தில் தலைவன், பிரமுகர் சபை, பொதுமக்கள் கூட்டம் என்ற மூவகைப் பாகுபாடு அவ்வளவு தெளிவாக இல்லை. சண்டைக் காலங்களில் மக்கள் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டார்கள் என்றும், மற்றக் காலங்களில் பொதுக்கூட்டத்தின் அங்கத்தினர்களாகிய போர்வீரர்களே முழு அதிகாரம் பெற்றவர்களாயிருந்தார்கள் என்றும் சீசர் கருதுகிறார்.

டாசிட்டஸ் எழுதியதில் பாகுபாடு தெளிவாகிவிடுகிறது. சில தொகுதிகளுக்குத் தலைவனுமிருந்தான். எல்லாவற்றிற்குமே பொதுக்கூட்டமும் மேன்மக்கள் சபையுமாக இரண்டு குழுக்களுமிருந்தன.

இதற்கு 10 நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமர் காலத்திலிருந்த கிரேக்கச் சமுதாயங்களில் ஒவ்வொன்றுக்கும் தலைவனுண்டு. பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தினரிடமிருந்தது. இன்றியமையாத சில சமயங்களில் இதை மாற்றியும் விடலாம். மக்கள் கூட்டங்களுக்கும் அதிகாரமிருந்தது. ஆயினும் ஆட்சித் திட்டத்தில் ஜெர்மானியத் தொகுதிகளைக் காட்டிலும் தலைவனுக்குச் சிறப்பும், பொதுமக்களுக்குச் சற்றுத் தாழ்வும் தோன்றுகின்றன. உதாரணமாக, முறை வழங்குவது ஜெர்மானியர் பொதுக்கூட்டத்தின் உரிமை. ஆதிக் கிரேக்கர்களிடை இந்த உரிமை பொது மக்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

பண்டைய ரோமானியச் சமுதாயத்திலும் தலைவன், பிரமுகர் குழு, மக்கள் கூட்டம் மூன்றையும் பார்க்கிறோம். ஜெர்மானிய, கிரேக்கப் பொதுக்கூட்டங்களைப் போலவே இங்கும் மிகவும் முக்கியமான பொது விஷயங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் கூட்டம் பெரியோர் முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது தள்ளிவிடலாம். ஆனால் அவைகளை விவாதிப்பது கூடாது.