பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமை

394

ஆமை

பரப்பு : 23,68,000 ச. மைல். இதில் ஒரு விநாடிக்கு 35 இலட்சம் கன அடி நீர் பாய்கிறது. இதன் வடிநிலத்தில் சில பகுதிகளை இன்னும் ஆராய்ந்தபாடில்லை.

மத்தியப் பெருவில் ஆண்டீஸ் மலைத்தொடரின் கீழ்ப்பகுதியிலுள்ள பனியாறுகள் உருகுவதால் தோன்றும் ஏரிகளிலிருந்து இது உற்பத்தியாகி, 27° தீர்க்கரேகைகள் தொலைவிற்குக் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. மாரனான் என்ற உபநதி கலந்த பிறகு, கீழ்ப் பாகத்தில் வெள்ளம் பெருகும் போது இது 15 மைல் அகலமும், மானாஸ் நகரின் கீழ்ப்பாகத்தில் 30 மைல் அகலமும் உள்ளது. வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பல உபநதிகள் இதை வந்தடைகின்றன. தெற்கிலுள்ள உபநதிகள் முக்கியமானவை. இவற்றுள் சிங்கு (Xingu), டபாஜஸ், மடைரா, புருஸ், ஜூருவா ஆகியவை முக்கியமானவை. ரையோ நீக்ரோ, யபுரா, இகா ஆகியவை வடக்கிலிருந்து வரும் உபநதிகளில் முக்கியமானவை. நீர் குறைவான காலத்தில் ஆமெசானின் ஆழம் 70-லிருந்து 90 அடிவரை இருக்கும். ஒபிடாஸ் என்னுமிடத்தில் இது மிகவும் குறுகி ஒரு மைல் அகலமுள்ளதாக இருக்கிறது. இங்கு இதன் ஆழம் 200 அடி. இப்படி ஆழமாக இருப்பதால் முகத்துவாரத்திலிருந்து 2,300 மைல் தொலை உள்ளே இருக்கும் இக்லிடாங் நகரம்வரை இதில் சமுத்திரக் கப்பல்கள் செல்லலாம்.

வடிநிலத்தின் பல பகுதிகளில் பருவத்தையொட்டி மழையின் அளவு வேறுபடுவதால் இதன் பரப்பு மாறுகிறது. பிரதம நதி பூமத்தியரேகைப் பகுதிகளில் ஓயாத மழையைப் பெறுகிறது. இது தெற்கிலிருந்து கோடை மழையினால் பெருகும் நீரையும், ஆண்டீஸ் பகுதிகளில் வெண்பனி உருகுவதால் தோன்றும் நீரையும் ஏராளமாகப் பெறுகிறது. ஆகையால் ஆமெசான் ஆற்றில் ஜனவரியிலிருந்து ஜூன்வரை வெள்ளப்பெருக்கு இருக்கும். கடலின் ஏற்றவற்ற விளைவுகள் 500 மைல் உள்ளே இருக்கும் ஒபிடாஸ்வரை தெரிகின்றன.

ஆமெசான் ஆற்றின் வடிநிலம் அடர்ந்த பூமத்திய ரேகைக் காடுகளையும், நீர் சரியாக வடியாத சதுப்பு நிலங்களையும் கொண்ட பெருஞ் சமவெளி. இது மிகவும் பிற்போக்கான பிரதேசம். ஜன நெருக்கம் குறைவான இப்பகுதியில் அங்கங்கே காட்டை அழித்து நாகரிகமற்ற மக்கள் வாழ்கிறார்கள். மகாகனி, எபனி, ஈட்டி முதலிய வெப்பநாட்டு மரவகைகள் இங்கு உள்ளன. ஆனால் இவை இங்குமங்கும் சிதறிக் கிடப்பதாலும், இவற்றைக் கொண்டுவருவதில் உள்ள தொல்லைகளாலும் இவை பயன்படத்தக்க நிலையில் இல்லை. மலேயா முதலிய நாடுகளில் தோட்டக்காலில் ரப்பர் பயிரிடுமுன் இங்குக் கிடைக்கும் ரப்பரைச் சேகரித்து வந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் இத்தொழில் நசித்துவிட்டது. பிரேசில் கொட்டைகள், பிசின்கள், மெழுகுகள், தோல் பதனிடுதலில் பயனாகும் பட்டைகள் ஆகிய பொருள்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இப்பகுதியில் நடைபெறும் வாணிபத்திற்கு மூன்று இடங்கள் முக்கியமானவை. இவற்றுள் முகத்துவாரத்திலுள்ள பாரா நகரம் பெரியது. ரையோ நீக்ரோவின் மேலுள்ள மானாஸ் வடிநிலத்தின் மத்தியப் பகுதியின் முக்கியமான நகரம். ஆற்றின் மேற்பகுதியில் ஈக்விடாஸ் முக்கியமான நகரம். இவ்வாற்றுப் பிரதேசத்தில் நடைபெறும் வாணிபம் மிகக் குறைவு. என். அ.

ஆமை முதுகெலும்புள்ள பிராணிகளில் ஊர்வன வகுப்பைச் சேர்ந்தது. இதன் உடம்பை மூடியிருக்கும் ஓடு மற்றெல்லாப் பிராணிகளிலிருந்தும் இதை எளிதாக வேறு பிரித்துக் காட்டிவிடும். ஓடு ஆமையின் வீடு போல இருக்கிறது. இந்த வீட்டை அது எங்குப் போனாலும் உடன் கொண்டு போகின்றது. முதுகெலும்புப் பிராணிகளிலே இத்துணைச் சிறந்த பாதுகாப்பு வேறு எதற்கும் இல்லையென்றே சொல்லலாம். ஆமைகள் சுமார் பதினேழு, பதினெட்டுக்கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றன. மேலைத் திரயாசிக் காலமுதல் இவற்றின் உடலின் பகுதிகள் பாசில்களாகக் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்திலே மிகப் பெரிய தினோசார் முதலிய எண்ணிறந்த உயிர்வகைகள் தோன்றி மறைந்தன. ஆயினும் ஆமை வகைகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.

ஆமை

ஆமைகளில் சுமார் 275 வகைகள் இருக்கின்றன. இவற்றுள் பல அயனமண்டலத்திலும் சமதட்ப வெப்ப வலயத்திலேயுள்ள வெப்பமான பகுதிகளிலும் வாழ்பவை. ஆமைகள் மிகக்குளிரான பருவங்களிலே நிலத்தினுள்ளோ, நீரினுள்ளோ ஒடுங்கி உறங்கிக் கிடக்கும். அவ்வாறே கோடையில் வற்றிப்போகும் நீர் நிலைகளில் வாழ்பவை சேற்றினுள்ளே புதைந்து வேனிலில் உறக்கம் கொண்டிருந்து, திரும்ப நீர் வரும்போது உறக்கம் நீங்கி வெளிவரும். சில ஆமைகள் நீரிலேயே வாழும். கடலாமைகள் அவ்வகையின. சில நிலத்தின் மேலே வாழும். பல நீரிலும் நிலத்திலும் வாழும். ஆமைகளில் பெரும்பாலானவை நன்னீரில் வாழ்வன.

ஆமையின் உடம்பு அகன்று, நீள்வட்ட அல்லது அண்ட வடிவமாக இருக்கும். இதன் தோலில் எலும்புத் தகடுகள் உண்டாகின்றன. இவை ஒழுங்கான வரிசைகளில் அமைந்திருக்கின்றன. இந்தத் தகடுகள் ஒன்று சேர்ந்து ஆமை ஓடாகின்றன. ஆமையோட்டில் மேலோடு ஒன்றும் கீழோடு ஒன்றும் உண்டு. மேலோட்டோடு முதுகெலும்பு முட்களும் பழுவெலும்புகளும் உறுதியாகக் கூடியிருக்கின்றன. ஆமைகளுக்கு மார்பெலும்பு இல்லை. ஆதலால் கீழோட்டிலே தோலிலிருந்து உண்டான எலும்புகள் மட்டுமே உண்டு. பல ஆமைகளில் மேலோட்டிலிருப்பது போலக் கீழோட்டிலுள்ள எலும்புகள் அடிப்பாகம் முழுவதையும் ஒரே ஓடாக மூடுவதில்லை. மேலோடு மிகவும் வளைந்தும் கீழோடு தட்டையாகவும் இருக்கும். தரை ஆமைகளின் முதுகு மேடாகக் காணும். நீராமைகள் நீரில் எளிதாகச் செல்வதற்கு ஏற்றவாறு அது சற்றுத் தட்டையாக இருக்கும்.

ஓடுகளுக்குப் புறம்பாகப் பெரும்பாலானவற்றில் மேல் தோலிலிருந்து கொம்புப் பொருளாலான கேடகங்கள் வளர்கின்றன. இவை மேலோடு, கீழோடு இரண்டுக்கும் அழுத்தமாகப் பொருந்தியிருக்கும். இவையும் எலும்புத் தகடுகளைப்போல ஒருவித ஒழுங்காக அமைந்திருக்கும். ஆயினும் எலும்புத் தகட்டின் பரப்பும் கேடகத்தின் பரப்பும் ஒன்றாக இருப்பதில்லை. சிலவகை ஆமைகளிலே கொம்பாலான இந்தப்புறவோடு மிகவும்