பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்க்கிமிடீஸ்

405

ஆர்க்கியாப்டெரிக்ஸ்

காளான்வேர் மட்கு மிகுந்த சதுப்பு, காடு, வெப்ப வலய மழைக்காடு இவற்றிலுள்ள ஆர்க்கிடுகளில் மிகுதியாக உண்டு. இலையும் பச்சையமும் இல்லாத ஆர்க்கிடுகளில் இந்தக் கூட்டுறவு சிறந்து காண்கிறது.

ஆர்க்கிடுகள் துருவப் பிரதேசம் தவிர மற்ற எல்லாத் தட்ப வெப்பப் பகுதிகளிலும் வளர்கின்றன. ஆயினும் அவை ஈரப்பதமிக்க வெப்ப வலயக்காடுகளில் வகையிலும் தொகையிலும் எண்ணிறந்து மலிந்திருக்கின்றன.

இந்தியாவில் பல ஆக்கிடுகள் இருக்கின்றன. சம பூமிகளில் தரையில் சில வகைகள் சாதாரணமாக வளர்கின்றன. ஆயினும் மலைகளிலும் காடுகளிலும் தான் ஏராளமான வகைகள் இருக்கின்றன. தரையில் சாதாரணமாக வளர்பவை சியூக்சின், யூலோபியா, ஹாபனேரியா என்னும் சாதிகளில் சில இனங்கள். தொற்றுச்செடிகளில் சில டென்ட்ரோபியம், சீலோகைனி, வாண்டா (நாக நல்லறு) என்பவை. இரண்டொன்று அழுகு பொருளில் வாழ்பவை. இவற்றிற்கு இலையுமில்லை; பச்சை நிறமுமில்லை. உதாரணம் எபிபோகம், நியோட்டியா.

ஆர்க்கிடுகளைப் பூவுக்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்கள். ஒரே ஒரு வகைதான் சற்று வாசனைப் பண்டமாக உபயோகப்படுகிறது. அது வானில்லா என்பது. அதன் கனிகளை உலர்த்தி மிட்டாய்க்கு வாசனையாக இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள். யூலோபியா, ஆர்க்கிஸ், ஹாபனேரியா முதலிய ஆர்க்கிடுகளின் கிழங்கு சாலேப்மிசிரி என்னும் உணவுப் பண்டமாகவும் காதுபுஷ்டிப் பொருளாகவும் விற்கப்படுகிறது.

ஆர்க்கிமிடீஸ் (Archimedes, கி. மு.287-212) கிரேக்கக் கணித அறிஞர். சிசிலியிலிருந்த இவர் சைரக்யூஸ் நகரில் வாழ்ந்தார். அந்நாட்டு மன்னனுக்கு உற்ற துணைவராக இருந்தார். அவனுக்குப் பல படைக் கலங்களைக் கண்டுபிடித்துத் தந்து, அவன் போரில் வெற்றி காண உதவினார்.

பௌதிகத்தில் இவர் பெயரால் வழங்கும் சித்தாந்தம் இவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது அரசனுக்குப் புதிதாகச் செய்யப்பட்ட மகுடத்தில் தங்கத்தைத் தவிர வேறு உலோகம் ஏதாவது கலந்திருக்கின்றதா என அறியும் முறையைக் கண்டுபிடிப்பதில் இவர் முனைந்திருந்தார். அதைப்பற்றி எண்ணிக்கொண்டே இவர் குளிக்குந் தொட்டியில் இறங்கினார். அப்போது அதிலிருந்து தண்ணீர் வழிவதைக் கண்டதும் தம்முள்ளத்தை வாட்டிய கேள்வியின் விடையை இவர் கண்டார். அந்த மகிழ்வில் இவர் ஆடையுமின்றி, “கண்டேன்! கண்டேன்!” எனக் கூவிய வண்ணம் வீதிகளில் ஓடத் தொடங்கிவிட்டாராம்.

நிலையான விசைகளையும், நெம்புகோல், உருளை முதலிய எளிய எந்திரங்களையும் இவர் விஞ்ஞான அடிப்படையாக ஆராய்ந்து பயன்படுத்தினார். நெம்புகோலைப் பற்றிக் கூறுகையில் இவர் “பூமிக்கு வெளியே இருக்க ஓரிடமிருப்பின் உலகையே அசைப்பேன்” என்றாராம். மிதக்கும் பொருள்களைப்பற்றிய விதிகளை இவர் கண்டுபிடித்தார். இவரது கணித நூலாராய்ச்சிகள் புகழ்பெற்றவை. உருளை, கோளம், வட்டம், சுருள் இவற்றைப்பற்றிப் பல கணித நூற்கொள்கைகளை இவர் வெளியிட்டார்.

சைரக்யூஸ் நகரம் பகைவர்களாற் பிடிபட்டபோது போர்வீரர்கள் இவர் இல்லத்திலும் நுழைந்தனர். அப்போதும் இவரது சிந்தனை கலையவில்லை. தரையில் வரைந்த வடிவங்களை நோக்கியவண்ணம் இருந்த இவ் அறிஞரை அறியாமையால் ஒரு போர்வீரன் கொன்று விட்டான்.

ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஆர்க்கியாப்டெரிக்ஸ் பதினைந்து கோடி ஆண்டுகட்கு முன் வாழ்ந்திருந்த பறவை. இதன் பாசில்களே இதுவரையிலும் அறிந்துள்ள பறவைகளின் பாசில்களிலெல்லாம் மிகப் பழையவை. ஜெர்மனியிலுள்ள பவேரியாவில் சோலென்ஹோபென் என்னும் ஊருக்கு அருகிலுள்ள லித்தொகிராபிக் சுண்ணக்கல் அடுக்குக்களில் அகப்பட்டவை. அடுக்குக்கள் மேலை ஜுராசிக் காலத்தவை. இதுவரையிலும் மூன்றே பாசில்கள் அகப்பட்டிருக்கின்றன. 1861-ல் ஓர் இறகின் அழகிய பதிவு கிடைத்தது. அதே ஆண்டில் தலையில்லாத எலும்புக் கூடு, இறக்கை யிறகுகள், வால் இறகுகளுடன் கிடைத்தது. 1877-ல் இன்னொன்று தலையோட்டுடன் கிடைத்தது. மிக நொய்ம்மையான களிமண் படிவாகையால் இப்பதிவுகளில் நுட்பமான அமைப்புக்கள்கூட நன்றாகக் காண்கின்றன. பின்சொன்ன இரண்டு பாசில்களும் இருவேறு இனங்கள் எனக் கருதுகின்றனர். முந்தினது ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றும், மற்றது ஆர்க்கியார்னிஸ் என்றும் பெயர் பெறும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் பாசில் பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலும், ஆர்க்கியார்னிஸ் பாசில் பெர்லின் பொருட்காட்சிச் சாலையிலும் இருக்கின்றன. இவை யிரண்டையும் பொதுவாக ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றே வழங்குவார்கள். ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றால் பழஞ் சிறகி யென்றும், ஆர்க்கியார்னிஸ் என்றால் பழம் பறவை என்றும் பொருள்படும்.

ஆர்க்கியார்னிஸ்
1. எலும்புச் சட்டகம் இவ்வாறிருந்திருக்கலாம். தலையெலும்புகள். கண்ணைச்சுற்றிச் சிறு எலும்புகள் வட்டமாக அமைந்திருக்கின்றன.

தாடையில் பற்கள் காண்கின்றன.

2. ஆர்க்கியார்னிஸ் பறவை இவ்வாறு இருந்திருக்கலாம்.

ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஒரு காகத்தின் அளவு உள்ளது. இதற்கு 20, 21 முள்ளெலும்புகளுள்ள நீண்ட வாலுண்டு. வால் நெடுகிலும் முள்ளெலும்புக்கு ஒரு ஜதையாக இறகுகள் உண்டு. வாலின் நுனியிலும் இறகுகள் காணப்படுகின்றன. காலில் பலமான விரல்கள் உண்டு. இவை மரக்கிளைகளைப் பற்றிக் கொண்டு உட்காருவதற்கும் தரையில் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவை. இறக்கைகளில் பெரிய இறகுகள் உண்டு. நன்றாகப் பதிந்துள்ள இறக்கை யிறகு 6 அங்குல நீளமும் 1 அங்குல அகலமுமுள்ளது. உடம்பின் பக்கங்களை மூடியிருக்கும் சிறிய உடலிறகுகளும் இருக்கின்றன.