பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்பட்ராஸ்

436

ஆல்பர்ட்

இவையெல்லாம் ரோசேசீ என்னும் ரோஜாக் குடும்பத்தின.

ஆலு என்னும் வடசொல் உண்ணத்தக்க வேர்களையும் கிழங்குகளையும் பழங்களையும் குறிக்கும். புக்காராவில் விளைவதும், அப் பிரதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வரவழைப்பதுமான பழம் ஆலுபுக்காரா என்று பெயர் பெற்றுள்ளது. இந்தப் பெயர் தமிழில் ஆல்பகோடா என்று வழங்குகிறது.

ஆல்பகோடா மரம் சிறியது. இது ஐரோப்பாவின் தென்பகுதி, சைலீசியா, ஆர்மீனியா, காக்கசஸ் மலையின் தென்பாகம் முதலிய இடங்களில் நெடுகக் காட்டுச் செடியாக இருக்கிறது. மேற்கு இமயமலைப் பகுதிகளில் காச்மீரம் முதல் கார்வால் வரையில் 4000-7000 அடி வரையிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கிறது. நீலகிரியிலும் இது பயிராகிறது.

ஆல்பகோடாப் பழம் நல்ல மருந்து. பாரசீக மருத்துவர் இதை மிகக் கொண்டாடியிருக்கின்றனர். யூனானி முறையில் இதற்குப் பெருமை மிகுதி. இது மலத்தை இளக்கும். சூட்டைத் தணிக்கும். வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தத்தைப் போக்கும்; அழலையை அகற்றும். இதை வாயில் அடக்கி வைத்திருந்தால் காய்ச்சல்களில் உண்டாகும் நீர் வேட்கையையும் நாக்கு வறண்டு போவதையும் நீக்கும். சுரக் கஷாயங்களிலும் இது சேரும். பருப்பிலிருந்து எண்ணெயெடுத்து விளக்கெரிக்கிறார்கள்.

இது ப்ரூனஸ் கம்யூனிஸ் இனத்தைச் சேர்ந்த இன்ஸ்டிட்டிஷியா வகை என்பர். ப்ரூனஸ் இன்ஸ்டிட்டிஷியா என்றும் சொல்வதும் உண்டு.

ஆல்பட்ராஸ் (Albatross) மிகப்பெரிய கடற்பறவை. இதில் சில இனங்களுண்டு. வட அட்லான்டிக் தவிர மற்ற எல்லாச் சமுத்திரங்களிலும் இவை

ஆல்பட்ராஸ்

வாழ்கின்றன. அலையும் ஆல்பட்ராஸ் (Wandering A.) என்ற பெயருடன் தென் கடல்களிலுள்ளது மிகவும் பெயர் போனது. இது மிகவும் அழகான பறவை. இதன் உடல் வெண்ணிறம். சிறகுகளும் வாலும் கருநிறம். இரு சிறகுகளையும் நீட்டினால் முனையிலிருந்து முனைக்கு 9-12 அடி நீளமிருக்கும். ஆகாயத்தில் பறக்கும் பறவைகளிலெல்லாம் இந்த அளவே மிகப் பெரியது. அலகு கனமும், பலமும், ஆறங்குலத்துக்குமேல் நீளமும் உள்ளது; முனையில் வளைந்திருக்கும். அலகுக்கு இரு புறமும் குழாய்போன்ற மூக்குத் தொளையுண்டு. கால் விரல்கள் நீந்துவதற்கு ஏற்றவாறு சவ்வினால் சேர்க்கப்பட்டுள்ளன. ஆல்பட்ராஸ் பறப்பதில் பேராற்றல் உடையது. சிறகுகளையடிக்காமலே காற்று வீசும் திசைக்கு ஏற்ற கோணத்திலே அவற்றை விரித்து வைத்துக்கொண்டு நெடுநேரம் பறப்பது இதன் இயற்கை. சில சமயங்களில் பல நாட்களுக்குக் கப்பலைப் பின்தொடர்ந்து பறந்துகொண்டே வரும். எங்கும் இறங்குவதுமில்லை; இளைப்பாறுவதுமில்லை. இது மீனையும் கணவாயையும் பிடித்துத் தின்னும். கப்பலிலிருந்து எறியும் உணவுத் துணுக்குக்களையும் பொறுக்கும்.

ஆல்பட்ராஸ் முட்டையிடமட்டும் கடலைவிட்டுக் கரையை நாடும். ஒரு தனித்த தீவுக்கு அல்லது சஞ்சாரமில்லாத கடற்கரைக்கு வரும். இது கூடு கட்டுவதில்லை. வெறுந்தரையில் எங்காவது நினைத்தவிடத்தில் முட்டையிட்டுவிடும். வெண்மையான ஐந்தங்குல நீளமுள்ள ஒரே முட்டைதான் இடும். ஆணும் பெண்ணும் மாறிமாறி அவயங்காக்கும். நாற்பது நாள் சென்று முட்டை பொரிக்கும். குஞ்சின் உடம்பைக் கருமையான சிலும்பலான மெல்லிறகு மூடியிருக்கும். இதற்குச் சாதாரண இறகு முளைப்பதற்குப் பல மாதகாலம் செல்லும். அதுவரையில் தாயுந்தந்தையும் குஞ்சைப் பேணிவரும்.

கப்பலோட்டிகள் ஆல்பட்ராஸைப் பற்றிப் பலவித நம்பிக்கைகள் உள்ளவர்கள். அதற்குத் தீங்கு செய்யக்கூடாது, செய்தால் தமக்குத் துன்பம் நேரும் என்ற எண்ணம் அவர்களுக்குண்டு. சாதி: டயோமீடியா. பா. பா.

ஆல்பயெரி (Alfieri, 1749 - 1803) இத்தாலி நாட்டின் தலைசிறந்த நாடகக் கவிஞர். அவருடைய நாடகங்களுள் பல பகுதிகள் மிகுந்த எழில் வாய்ந்தவை. அவர் முன்னேற்றமான கொள்கைகள் உடையவர். அவர் இயற்றிய புரூட்டஸ், திமோபின், வர்ஜினியா போன்ற நாடகங்கள் நாட்டுப்பற்றை எழுப்பியதன் பயனாகப் பிளவுபட்டுக்கிடந்த இத்தாலி ஒன்றுபட்ட நாடாக ஆயிற்று. அவருடைய சால் என்னும் துன்ப நாடகம் புகழ் வாய்ந்ததாகும். சிலர் சால் என்பதையும் சிலர் மிர்ரா என்பதையும் அவருடைய தலைசிறந்த நாடகமாகக் கூறுவர்.

ஆல்பர்க் (Aalborg) டென்மார்க்கில் ஜட்லாந்து தீபகற்பத்தின் வடக்கிலுள்ள ஒரு பட்டினம். டென்மார்க்கின் பண்டைய நகரம். சிமென்டு செய்தல், புகையிலை தயாரித்தல், சாராயம் இறக்குதல், ரசாயனப் பண்டங்கள் செய்தல், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் முதலிய கைத்தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. மக்: 79,806(1950). கே. ஆர்.

ஆல்பர்ட் (1819-1861) ஜெர்மனியிலுள்ள கோபர்கில் பிறந்தவர். பிரிட்டிஷ் அரசியான விக்டோரியாவின் கணவர்; அவ்விருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். 1840-ல் அவர்களுக்கு மணமாயிற்று. அவர் பிரிட்டிஷ் அரசியலில் அதிகமாக முன்னணிக்கு வரவில்லையாயினும், பிரிட்டிஷ் சமூக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார். 1851-ல் இங்கிலாந்தில் நடந்த கண்காட்சியின் வெற்றிக்கு அவரே பெரும்பாலும் காரணம். 1857-ல் பிரின்ஸ் கான்சர்ட் என்னும் பதவி அளிக்கப்பெற்றார். அவர் அயலாராதலின் பிரிட்டிஷ் மக்கள் முதலில் அவரை அதிகமாக விரும்பவில்லை; அவருடைய அரிய பண்புகளை அறிந்தபின் பேரன்பு பாராட்டினர். அவர் 1861 டிசம்பர் 14-ல் தமது 42ஆம் வயதில் இறந்தார்.

ஆல்பர்ட் I (1248-1308): இவன் ஒரு ஜெர்மன் அரசன். I-ம் ரூடால்பின் மகன்; இவன் ஆட்சித் தொடக்கக் காலத்தில் உள்நாட்டுப் போரை எதிர்த்து, எதிரியான அடால்ப் என்பவனை வென்று மன்னனானவன். போப் VIII-ம் பானிபேசுக்கும் இவனுக்கும் முதலில் மனவேறுபாடு இருந்ததாயினும் பிறகு இத்தாலியைக் கைப்பற்றச் செல்லும் எண்ணத்தை விட்டுவிட்டதால் போப்போடு நட்பு முறையில் இருந்தான். 1308 மே 1-ல் இவன் ஜான் என்பவனால் கொலை செய்யப்பட்டான்.

ஆல்பர்ட் I (1875-1934) பெல்ஜிய மன்னன். முதல் உலக யுத்தத்தின்போது இவன் சேனாதிபதியாயிருந்து தன் நாட்டின் பாதுகாப்பை மேற்கொண்டான். பெல்ஜியத்தில் விஞ்ஞானக் கல்வியைப் பரப்பப் பலவகையிலும் முயன்றான். இவன் மகன் II -ம் லியபால்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரை எதிர்த்துப் பிறகு சரணடைந்தவன்.