பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய விஞ்ஞானக் கழகம்

577

இந்தியா


இந்திய விஞ்ஞானக் கழகம் (Indian Academy of Sciences) 1934-ல் பெங்களூரில் சர் சீ. வீ. இராமன் முயற்சியால் நிறுவப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆவன செய்வதே இதன் நோக்கம். இதில் 208 உறுப்பினர்கள் உளர். உலகம் போற்றும் பெரிய விஞ்ஞானிகளுள் ஐம்பதின்மர் சிறப்பு உறுப்பினராக இருக்கிறார்கள். திங்கள்தோறும் விஞ்ஞானக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன. கழகத்தின் தலைவரும் வெளியீடுகளின் பதிப்பாசிரியரும் சர் சீ . வீ. இராமன் ஆவர். இங்கு அடிக்கடி விஞ்ஞானக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக் கழகம் ஆண்டுதோறும் டிசம்பரில் இந்திய நகரங்களில் மாநாடு கூட்டுகிறது; பெங்களூரில் இராமன் ஆராய்ச்சி நிலையம் என்பதை நடத்துகிறது. இது உலகத்திலுள்ள சிறந்த விஞ்ஞான நிலையங்கள் நூற்றைம்பதுடன் தொடர்புடையது.


இந்திய விஞ்ஞானக் காங்கிரசுச் சங்கம் (Indian Science Congress Association ) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சியாளரது முக்கியமான ஸ்தாபனம். இது 1914-ல் சர் அசுட்டோஷ் முக்கர்ஜியால் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இவரே அதன் முதல் தலைவராகவும் இருந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஊக்கமளிப்பதும், இதைச் சரியான வழியில் செலுத்த உதவுவதும், விஞ்ஞானக் கழகங்களையும் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்களையும் ஒன்று சேர்ப்பதும், விஞ்ஞானத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்துவதும், அதன் முன்னேற்றத்திற்கு நேரும் தடைகளை நீக்குவதும் இச்சங்கத்தின் நோக்கங்களாகும். இதில் கணிதம், பௌதிகம், ரசாயனம், மருத்துவம், உளவியல் முதலிய பதின்மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இச்சங்கம் ஒரு நகரத்தில் கூடும்போது ஒவ்வொரு பிரிவும் தனியே கூடுகிறது. இப்பிரிவுகளில் சொந்த ஆராய்ச்சிகள் பற்றிய கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. சில பொருள்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. இம்மாநாடுகளுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகளும் பிரதிநிதிகளாக வந்து இந்திய நாட்டு ஆராய்ச்சியாளருடன் அளவளாவுகின்றனர்.


இந்திய விஞ்ஞான நிலையம் (Indian Institute of Science, Bangalore) ஜே. என். டாட்டாவும் அவருடைய குமாரர்கள் சர் டோராப் டாட்டா, சர் ரத்தன் டாட்டா ஆகியவர்களும் கொடுத்த நன்கொடையாலும் இந்திய அரசாங்கமும் மைசூர் அரசாங்கமும் அளித்த ஆதரவாலும் 1911-ல் பெங்களூரில் நிறுவப்பெற்றது. இங்குள்ள சோதனைச் சாலைகள் பட்டதாரிகள் ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய வசதிகள் உடையன. பல விஞ்ஞானத் துறைகளில் பெரும்பட்டங்கள் பெறுவதற்குரிய கல்வியும் பயிற்சியும் அளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நூல் நிலையத்தில் 46,227 (1952) விஞ்ஞான நூல்களும் இதழ்களும் உண்டு. இங்கு நடைபெறும் ஆராய்ச்சி விவரங்களைக் கால் ஆண்டு இதழாக வெளியீடுகிறார்கள்.


இந்திய விஞ்ஞான வளர்ச்சிச் சங்கம் (Indian Association for the Cultivation of Science) டாக்டர் மகேந்திரலால் சர்க்காரால் 1876-ல் கல்கத்தாவில் நிறுவப்பெற்றது. தொடக்கத்தில் பௌதிகம், புவியியல், உயிரியல் ஆசியவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஸ்தாபனமாக இருந்து, பின்னர் 1907-ல் பேராசிரியர் சீ. வீ. இராமன் சேரவே, விஞ்ஞான ஆராய்ச்சி நிலையமாக ஆயிற்று. இவ்வாராய்ச்சி வேலையில் பேராசிரியர் இராமனுக்கு டாக்டர் கே. எஸ். கிருஷ்ணனும் மற்றும் பல ஆராய்ச்சியாளரும் துணை செய்தனர். 'மகேந்திரலால் சர்க்கார் பேராசிரியர்' என்ற பெயரால் முதன் முதலாக நியமிக்கப்பட்டவர் டாக்டர் கே. எஸ். கிருஷ்ணனாவார். தேவையான நூல்கள் நிறைந்த நூல் நிலையமும் துல்லியமான கருவிகள் கொண்ட தொழிற்கூடமும் இருக்கின்றன. இப்போது பட்டம் பெற்றவர்கள் செய்யும் ஆராய்ச்சிச் சாலையாக இருந்துவருகிறது.


இந்திய விமானப் படை : பார்க்க : விமானப்படை - இந்திய விமானப்படை.


இந்தியா: ஆசியாக் கண்டத்தின் தெற்கேயுள்ள மூன்று தீபகற்பங்களுள் நடுவிலுள்ளது. கண்டத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து வடக்கேயுள்ள மலைத் தொடர்கள் இதைப் பிரிக்கின்றன, இந் நிலப்பரப்பு இந்திய சமுத்திரத்தினுள் நீண்டிருப்பதால் இச்சமுத்திரத்தின் வழியே செல்லும் முக்கியமான கடல் மார்க்கங்களுக்குக் கேந்திரமாக உள்ளது. செழுமையும் நீர் வசதியும் மிக்க இதன் கடற்கரைச் சமவெளிகளும் ஆற்றுப் பள்ளத்தாக்குக்களும் ஆதியிலிருந்தே மக்கள் தொகையும் பண்பாடும் வளர உதவியுள்ளன. ஆகையால் சீனாவையும் மத்தியக் கிழக்கையும்போல் இந்தியாவும் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றன் இருப்பிடமாக இருந்துள்ளது.

நாட்டின் பெயர் : முதன் முதல் இந்நாட்டை அடைந்து தம் நூல்களில் இதைப்பற்றிக் குறிப்பிட்ட அயல்நாட்டினரான பாரசீகர்களும் கிரேக்கர்களும் சிந்துநதிப் பகுதியையே நன்கு அறிந்திருந்தார்கள். ஆகையால் இப்பிரதேசத்தைப் பாரசீக மொழியில் 'ஹிந்து' என்றும், கிரேக்க மொழியில் 'இந்தஸ்' என்றும் குறிப்பிட்டார்கள். இச்சொற்களே பின்னர் இந்தியா என மருவி இந்நாட்டின் பெயராயின. ஆனால் இந்நாட்டினர் இதைப் பாரதமென்றும் பரதகண்டமென்றும் குறித்தார்கள். சுதந்திர நாட்டின் அரசியலமைப்பில் பாரதம் என்ற பெயர் அதிகார பூர்வமானதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் பிரிவினை : ஒரே இயற்கை அமைப்பான இந்த உபகண்டம் முழுதும் 1947க்குமுன் அரசியல் முறையிலும் ஒரே அமைப்பாக இருந்தது. இதன் பரப்பு 15 இலட்சம் ச. மைலுக்குச் சற்று அதிகம். மக்கள் தொகை சு. 40 கோடி. ஆனால் பிரிவினையின் விளைவாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளம், அஸ்ஸாமில் ஒரு பிரிவு, பலூச்சிஸ்தானம், சிந்து, மேற்குப் பஞ்சாப், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகிய பகுதிகளும் இதையடுத்துள்ள சமஸ்தானங்களும் பாகிஸ்தான் என்ற தனி நாடாக்கப்பட்டன. பாகிஸ்தான் வடமேற்கிலும் வடகிழக்கிலும் இருபகுதிகளாக உள்ளது.

பரப்பு மக். (1951)
இந்திய யூனியன் 12,20,099 ச. மைல். 36.18 கோடி
மேற்குப் பாகிஸ்தான் 3,06,860 ச.மைல். 3.36 கோடி
கிழக்குப் பாகிஸ்தான் 52,920 ச.மைல். 4.21 கோடி

அரசியல் எல்லைகள் : பிரிவினையின் விளைவாகப் பஞ்சாபின் கிழக்குப் பகுதிகளான ஜல்லந்தர், அம்பாலா பிரிவுகளும், லாகூர் பிரிவில் அமிர்தசரஸ் மாவட்டமும் இந்தியன் யூனியனில் உள்ள பஞ்சாபைச் சேர்ந்தன. லாகூர், குருதாஸ்பூர் மாவட்டங்கள் இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேற்கு வங்காளத்தில் பர்த்து-