பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

588

இந்தியா

யூரென்ஸ்,) டில்லீனியா இந்திக்கா, லீயா, மகிழ் சாதி (மிமுசாப்ஸ்), இலுப்பைச் சாதி (பாசியா), ராக்ஸ் பர்ஜியா முதலிய வகைகள் காணப்படுகின்றன. உள் நாட்டிலுள்ள மலைக் காடுகள் வறண்டவை. அவற்றின் இடையிடையே அடர்த்தியில்லாத பள்ளத்தாக்குக்கள் உண்டு. இந்தப் பள்ளத்தாக்குக்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. இந்த மலைகளின் வடக்கு, கிழக்குச் சரிவுகளில் உள்ள காடுகள் கிழக்கு மலைத்தொடரில் உள்ளவற்றைப்போல இருக்கின்றன. சந்தனவேம்பு அல்லது தேவதாரம் (செட்ரெலா டூனா), வெள்ளைப்பயின் (வாட்டிக்கா ரொபஸ்ட்டா), காட்டுமா அல்லது சாரை (புக்கனானியா), சேங்கொட்டை (செமகார்ப்பஸ் அனக்கார்டியம்), புரசு (பூட்டியா பார்விபுளோரா) முதலிய வகைகள் மிகுதியாகவும் வடக்குப் பாகங்களில் தணக்கு அல்லது கொங்கிலவு (காக்லோஸ்பெர்மம்), பஞ்சு (காசிப்பியம்), சிக்ரேசியா டாபுளாரிஸ், ஸ்வீடீட்னியா பெப்ரிபூஜா, பாஸ்வெல்லியா தூரிபெரா, ஹார்ட் விக்கியாபைனேட்டா, பாசியாலாட்டி போலியாமுதலிய வகைகள் ஓரளவிலும் காணப்படுகின்றன. பீனிக்ஸ் அக்காலிஸ் என்ற ஈச்சமரம் தவிர வேறு பனைவகைகள் இந்தப் பகுதிக்கு இயற்கையாக உரியவையல்ல. பொ. து. வ.

விலங்குகள்

இந்தியாவில் பிராணிகளுக்குக் குறைவில்லை. அதிகமாகவும் நானாவிதமாகவும், நாட்டுக்கு நாடு வேறுபட்டும் இருக்கின்றன. மலையாளக் கரையில் பெருங் காடுகள் அடர்ந்து, உயர்ந்த மலைத்தொடர் இருப்பதனாலும், தட்ப நிலையாக இருப்பதனாலும் பிராணி வருக்கங்கள் மிகுந்திருக்கின்றன. அதிகமான வகைகள் இருப்பதேயன்றி. அம்மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் காணாத வகைகள் பலவும் அங்கு உண்டு. இது போலவே அஸ்ஸாம், பர்மா முதலிய நாடுகளிலும் அடர்ந்த காடுகளும் மழைப் பெருக்கமும் இருப்பதால் அங்கும் பிராணி வகைகள் மிகுந்திருக்கின்றன. ராஜபுதனம் முதலிய பாலைவன நாடுகளில் இவை குறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் நாட்டுக்கு நாடு தட்பவெப்பநிலை மாறுபட்டிருப்பதால், பிராணி வகைகளும் அந்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கின்றன.

உயிரியலறிஞர் இந்தியாவுடன் பர்மாவையும் இலங்கைத் தீவையும் ஒன்றாகச் சேர்த்து, அம் முழுப் பரப்பையும் இந்தியப் பிராந்தியம் என்று கூறுவது வழக்கம். இந் நாடுகள் மூன்றும் அடங்கிய இந்தியப் பிராந்தியத்திலே கீழ்க்கண்டவாறு பிராணிகளின் பட்டி குறிக்கப்பட்டிருக்கின்றது.

சாதிகள் இனங்கள்
பாலூட்டிகள் சுமார் 120 சுமார் 420
பறவைகள் ,, 600 ,, 1,700
ஊர்வன ,, 150 ,, 550
தவளை வகுப்பு ,, 30 ,, 140
மீன்கள் ,, 380 ,, 1,500

பாலூட்டிகள் (Mammals) : உடல் அமைப்பில் மனிதனுக்கும் குரங்கு ஜாதிகளுக்கும் சில ஒற்றுமைகளைக் காண்கிறோம். வாலில்லன, வாலுள்ளன என்னும் இருவகைக் குரங்குகளில், ஊராங் ஊட்டான், சிம்பன்சீ என்னும் வாலில்லாக் குரங்குகள் இந்திய நாட்டில் தற்காலத்தில் இல்லை. ஆனால் மிகப் பழைய காலங்களில் இமயமலை அடிவாரத்திலே அவை வாழ்ந்திருந்தன என்பதற்கு அறிகுறியாக அப்பிராணிகளின் எலும்புக் கூட்டை ஒத்துள்ள பாசில்கள் வடமேற்கு இந்தியாவில் கிடைத்துள்ளன. அதுவுமன்றி இன்னொரு வகையான கிப்பன் என்னும் வாலில்லாக் குரங்கு இன்றும் அஸ்ஸாம், பர்மா காடுகளில் வசிக்கின்றது. இது ஊலூகு, ஊகம் எனப்படும். வாலுள்ள குரங்குகளில் பலவிதங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்குக் கன்னத்தில் தீனியை அடக்கிவைத்துக் கொள்வதற்குப் பைகள் இருக்கின்றன. மற்றவற்றிற்கு இந்தப் பை இல்லை. முதல் வகுப்புக் குரங்குகளில் பலவகைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மூன்று இனங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுக்குத் தலைமயிர் தொப்பி போன்று உச்சியிலிருந்து சுற்றிலும் ஆரையொழுங்கில் அமைந்திருக்கும். இவ்வினக் குரங்கைத்தான் சாதாரணமாக ஆட்டக்காரர்கள் தங்களுடன் இழுத்துச்சென்று, குழந்தைகளுக்கு ஆட்டங்காட்டிப் பிழைக்கிறார்கள். இந்த இனக் குரங்கைப் பழக்கிப் பல வேலைகளைச் செய்யக் கற்பிக்கலாம். இது மக்கள் நடமாடுகின்ற இடங்களிலே கும்பலாக மரங்களின்மேல் வசிக்கின்றது. மலையாளப் பிரதேசத்தில் கருங்குரங்கு என்பதைப் பார்க்கலாம். இதற்கு உடலில் கருமயிரும், தாடியில் சாம்பல் நிற மயிரும் உண்டு. வால் நுனியில் மயிர்க்குச்சுத் தொங்கும். மயிர்க்குச்சுத் தொங்குவதால் இதைச் சிங்கவால் குரங்கு என்றும் சொல்வார்கள். மூன்றாவது இனம் இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. இது பழுப்பு நிறமாக இருக்கும். இதற்குத் தாடி கிடையாது.

கன்னப்பை இல்லாத குரங்குகளில் நான்கு இனங்கள் காணப்படுகின்றன. இவைகளுக்கு வால் நீண்டிருக்கும். ஒன்று அனுமான் குரங்கு. இதுவே முசு எனப்படுவது. இதை வட இந்தியாவில் சாதாரணமாகக் காணலாம்; தென்னிந்தியாவில் குடகிலும், மைசூரிலும், ராயலசீமை ஜில்லாக்கள் சிலவற்றிலும் வசிக்கின்றது. கைகளும், பாதங்களும் கறுத்திருக்கும். முகத்தைச் சுற்றி நீண்ட மயிர்களும் தாடியும் இருக்கும். மைசூர், வயநாடு பிரதேசங்களிலும், வடக்கே நெல்லூர் வரையிலும், இந்தக் குரங்கைப்போன்ற மற்றோரினம் காணப்படுகிறது. ஆனால் இதற்குக் காலும் கையும் கறுத்திரா. மயிர்ச் செண்டு தலையைச் சுற்றி இருக்காது. அனுமான் குரங்கைப்போன்ற மற்றோரினத்தை மலையாளப் பிரதேசத்தில் காணலாம் ; கைகளும் பாதங்களும் கறுத்திருக்கும்; உடம்பு நிறமும் கொஞ்சம் கறுத்துத் தோன்றும். மற்றோரினமும் மலையாள நாட்டில் காணலாம். அது மலையுச்சிகளில் வசிக்கிறது. இதனைப் பழநி, நீலகிரிகளிலும் காணலாம்.

இவற்றிற்கு அடுத்தபடியாகத் தேவாங்குகளைக் காண்கிறோம். இவைகள் சிறியவாய் மரக்கிளைகளுக்கிடையே வாசம் செய்யும். தமிழ்ப் பிரதேசங்களில் இவற்றுள் ஓரினத்தைக் காணலாம். இவை சில சமயங்களில் விற்பனைக்கு வரும். தமிழ் மருத்துவத்தில் சில கண் மருந்துகள் செய்வதற்குத் தேவாங்கின்கண் உபயோகப்படுவதாகக் கூறப்படுகிறது. மிகவும் மெதுவாய்க் கிளைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கும். மற்றோரினம் குடகுநாடு, மலையாளப் பிரதேசங்களில் காணப்படும்.

வௌவால் பறக்கும் பிராணியாயினும் பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தது. இதுவும் குட்டி போட்டுப் பால் ஊட்டுகிறது. இதில் பல இனங்கள் இருக்கின்றன. பெரிய இனங்களில் ஒன்று பழந்தின்னி வௌவால் என்பது. இதனை ஆல், அரசு முதலிய மரங்களில் கூட்டமாகத் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கக் காணலாம். இது இரவில்தான் இரை தேடும். ஓர் இனம் பழைய கட்டடங்களிலும் மனிதப் புழக்கமற்ற கோயில்களிலும் காணலாம். மற்றோரினம் வாழை