பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

630

இந்தியா

மன் வீரபாண்டியனும் தமக்குள் போர் புரிந்துகொண்டிருந்தனர். அதை ஒரு வாய்ப்பாகக் கொண்ட மாலிக்காபூர் மதுரைமீது படையெடுத்து, நாட்டைக் கொள்ளையடித்துப் பல அழிவு வேலைகளை அங்கே நிகழ்த்திப் பின்னர் 1311-ல் பெரும் பொருளுடன் டெல்லி திரும்பினான். அடுத்த ஆண்டில் தேவகிரியை ஆண்ட சங்கர தேவன் டெல்லிப் பேரரசுக்குக் கப்பம் தர மறுத்துக் கலகம் செய்ததால், மாலிக்காபூர் மீண்டும் தேவகிரிமீது படையெடுத்துச் சங்கரதேவனைத் தோற்கடித்துக் கொன்றான். இதன் முடிவில் மாலிக்காபூருடைய வீரமும் புகழும் எங்கும் பரவின. அல்லாவுதீனுடைய பேரரசும் மிக உயர்ந்த நிலைமை அடைந்தது.

அல்லாவுதீன் இறுதிக் காலத்தில் மாலிக்காபூர் சொற்படி நடக்க ஆரம்பித்து, அதனால் தனக்குத் தீங்கு தேடிக்கொண்டான். ராஜபுதனம், குஜராத் முதலியவை அவனுக்கு எதிராகக் கலகம் செய்தன. மனம் உடைந்த சுல்தான் அல்லாவுதீன் 1316-ல் இறந்தான். அவன் அக்கால நிலைக்கேற்ற அரசன். அவன் அருந்திறலும் நல்ல நிருவாகத் திறனும் வாய்ந்த மன்னன். கலை வளர்ச்சியிலும் கற்றோரை ஆதரிப்பதிலும் அவன் ஊக்கம் கொண்டான். குதுப்மினாரைச் சேர்ந்த பல கட்டடங்களை அமைத்து, 1310-ல் ஒரு பெரிய வாயிலையும் அவன் கட்டினான். அது சிற்பப் புகழ்பெற்றதாகும். டெல்லிக்கருகில் புதிய நகர் ஒன்றையும் அவன் அமைத்தான். சிறந்த கவிஞனாகிய அமீர் குஸ்ரு அவன் காலத்தில் இருந்தவன்.

அல்லாவுதீனுக்குப் பின்னர் டெல்லிப் பேரரசில் குழப்பம் ஏற்பட்டது. மாலிக்காபூர் அரியணையேறப் பல சதிகள் செய்தான். கடைசியில் கொல்லப்பட்டான். பின்னர் அல்லாவுதீனுடைய மகன் முபாரக் அரியணையேறினான். அவன் ஆட்சியில் கலகம் செய்த தேவகிரி மன்னன் ஹரபாலதேவன் தோற்கடிக்கப்பட்டுக் கொடுமையாகக் கொல்லப்பட்டான். தந்தை காலத்தில் ஏற்பட்ட பல சீர்திருத்தங்கள் மாற்றப்பட்டன. பாண்டிய நாட்டையும் ஓரங்கல் நாட்டையும் அவன் வென்றான். கடைசியில் தன் நண்பன் குஸ்ருகான் என்பவனால் கொல்லப்பட்டான்.

1320-ல் அரியணையேறிய குஸ்ருகான் விரைவில் பிரபுக்கள், பொதுமக்கள் ஆகியோருடைய பகைக்கு ஆளாகிக் காசிமாலிக் என்னும் தலைவனால் அதே ஆண்டில் கொல்லப்பட்டான். ஆகவே 1290-ல் தொடங்கிய கில்ஜி வமிசம் 1320-ல் முடிவடைந்தது.

காசி மாலிக் 1320-ல் கியாசுதீன் துக்ளக் என்னும் பெயரோடு முடி சூடி ஆள ஆரம்பித்தான். 1320 முதல் 1325வரை திறமையுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்து புகழெய்தினான். அல்லாவுதீன் காலத்திய சட்டத் திட்டங்கள் எவ்வித மாறுதலுமின்றிக் கையாளப்பட் டன. 1325-ல் வங்காளப் படையெழுச்சியினின்றும் திரும்பிய அவன் ஒரு மாளிகையில் தங்கி யிருந்தபோது அது இடித்து வீழ்த்தப்பட்டதால் உயிரிழந்தான். இந் நிகழ்ச்சியில் அவனுடைய புதல்வன் முகம்மது என்பவனும் கலந்தவன். கியாசுதீன் டெல்லிக் கண்மையில் துக்ளகாபாத் என்னும் புதிய நகரைக் கட்டினான். அவனுக்குப்பின் பட்டமெய்திய முகம்மது துக்ளக் (ஆ.கா.1325-1351) மிகுந்த கல்வியறிவு உடையவன். கூர்மையான நினைவாற்றலும், அருமையான பேச்சுத் திறனும் அவனுக்கிருந்தன. அவன் பாரசீகக் கவிதை, தருக்க சாஸ்திரம் முதலியவற்றைக் கற்றவன். பிறரோடு வாதித்துத் தன் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் திறமைமிக்கவன். அவனுடைய அறிவாற்றல்களை இபன்பதூதாவும் பாரனியும் வியந்து பாராட்டுகின்றனர். இந்த அருங்குணங்களோடு பிடிவாதமும், கொடுமை முதலிய சில தீயகுணங்களும் அவனுக் கிருந்தமையினால்தான் அவனுடைய ஆட்சி நல்ல முறையில் நடைபெறாமல் பொதுமக்களுக்கு அல்லலையும், இடைவிடாத தொல்லைகளையும் கொடுப்பதாயிற்று. அதனால்தான் அவனைப் 'பேய்மனம் படைத்த துறவி" எனவும், 'துறவிபோன்ற மனப்பண்புடைய பேய்' எனவும் சிலர் கூறியுள்ளனர்.

அவன் பட்டம் பெற்றபோது போதுமான அரசியல் அனுபவம் அவனுக்கிருந்தது. 1327-ல் அவன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினான். இம்மாற்றத்துக்குப் பல நல்ல காரணங்கள் இருப்பினும், அதனால் பொதுமக்கள் பெருந்துன்பம் அடைந்தார்கள். டெல்லியிலிருந்து சுமார் 700 மைல்கள் பிரயாணம் செய்து, தேவகிரியை அடையமுயன்ற மக்களில் மிகப் பெரும்பான்மையினர் களைப்பினால் வழியிலேயே இறந்தனர். எஞ்சியவர்கள் தேவகிரியை அடைந்ததும் பல வித நோய்களுக்கு இரையாயினர். பதினேழு ஆண்டுகள் கழித்து மறுபடியும் டெல்லி தலைநகராயிற்று.

பொருளாதாரத் துறையில் தேர்ந்த முகம்மது பொருட் செலாவணி முறையைத் திருத்தியமைத்து, மதிப்புக் குறைந்த தங்கத்தை வெள்ளியின் மதிப்புக்கு ஒத்திருக்குமாறு செய்தான். உயர்ந்த உலோகங்களில் நாணயங்கள் வெளியிடுவதற்குப் பதிலாகப் பித்தளை நாணயங்களை வெளியிட்டான். இம்முறையில் தவறொன்றும் இல்லையாயினும், கள்ள நாணயங்கள் ஏராளமாக வெளிவந்து உலவுவதைத் தடுக்க அவனால் இயலவில்லை. உடனே சுல்தான் தனது தவறுதலை ஒப்புக்கொண்டு, தன் புதிய நாணயங்களைத் திருப்பி வாங்கிக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக நல்ல நாண யங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தான். இவ்வித மாற்றங்களால் பொக்கிஷம் வறண்டது. வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. தனது அரசின் ஒரு பகுதியில் அரசாங்க வரியை அதிகப்படுத்தியதன் விளைவாக உழவர்கள் அல்லலுற்றுக் காடுகளில் ஒளிந்து வாழ முற்பட்டனர். அங்கும் முகம்மது துக்ளக் சென்று, மிருக வேட்டையாடுவதுபோல் அவர்களை வேட்டையாடிக் கொன்றான். தன் பெருந்தவறுகளை உணர்ந்தவுடன் பரிகாரந்தேட முன்வந்தான். ஆயினும் இதனால் பொதுமக்கள் நன்மையடைய வழியில்லாமற் போயிற்று. சதி என்னும் பழக்கத்தை அவன் சட்டவிரோதமாக்கினான். முகம்மது துக்ளக் ஓரங்கல் நாட்டை வென்று தன்னடிப்படுத்தினான். துவார சமுத்திரத்தை அடியோடு சிதைத்து அழித் தான். பாண்டியநாட்டையும் வென்று அடிப்படுத்தினான். அவனது பேரரசு வடக்கே இமயம் முதல் தெற்கே மதுரை வரையிலும், மேற்கே சிந்துநாடு முதல் கிழக்கே வங்காளம் வரையிலும் பரவியிருந்தது. அதில் 23 மாகாணங்கள் அடங்கியிருந்தன. இவற்றை வெல்லுதற்கான போர்களாலும், அவசியமற்ற வேறு சில சண்டைகளாலும் மிகுந்த பொருளழிவும், பொது மக்களுக்கு இன்னலும் ஏற்பட்டன.

அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நாடெங்கும் கலகங்கள் ஏற்பட்டன. வங்காளம், மதுரை, தேவகிரி முதலியவை சுயேச்சையடைந்தன. வட இந்தியாவில் முகம்மது துக்ளக் ஓரளவு வெற்றியடைந்தபோதிலும் தென்னிந்திய நாடுகள் முழுச் சுயேச்சை எய்திவிட்டன. இந்நிலையில் 1351-ல் ஒரு கலகத்தை அடக்குவதற்குக் குஜராத்துக்குச் சென்ற முகம்மது துக்ளக் திடீரென இறந்தான்.