பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

646

இந்தியா

இரண்டாம் கிளையினர் ஆகிய சேர மன்னருள் அந்துவன் வீரனும் வள்ளலுமாக விளங்கினான். அவன் மகன் செல்வக்கடுங்கோவாழிஆதன் பல வைதிக வேள்விகள் செய்தான். அவர்களுக்குச் சமகாலத்தரான வேளிருள் ஆயும் பாரியும் சிறந்தவர்கள். வேள் ஆய் ஆண்ட நாடு பொதிய மலையைச் சார்ந்தது. அதைக் கிரேக்க ஆசிரியர் டாலமியும் குறிப்பிட்டிருக்கிறார். வேள் பாரி வள்ளன்மை பொருந்திய மற்றொரு வீரன். அவன் ஆண்டது பாண்டிய நாட்டில் கொடுங்குன்றம் அல்லது பிரான் மலையைச் சூழ்ந்த பகுதியே.

செல்வக்கடுங்கோவாழி ஆதன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை (கி. பி. 190). இவன் அதியமான் அஞ்சியையும் வென்றான். இவனால் வெல்லப்பட்ட அதியமான் ஒளவையாரை ஆதரித்து வந்த தலைவன்.. அதியமான் ஒரு காலத்தில் ஏழு அரசர்களைப் பகைத்துப் போரில் வென்றான். மற்றொரு சமயம் இவன் கோவலூரை வென்றதைப் பரணர் புகழ்ந்து பாடி இருக்கிறார். இவன் மகன் பொகுட்டெழினி.

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் தலைவனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்பான் (கி. பி. 190) பாண்டியன், சோழன், விச்சிக்கோன் முதலோரை வென்று, அவன் தலைநகராகிய வஞ்சிக்கு மிக்க பொருளைக்கொண்டு வந்து சேர்த்தான். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (கி. பி. 210) என்ற மற்றொரு சேர அரசன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் சிறை வைக்கப்பட்டு வெளிவந்ததும் தன் சத்துருக்களை மாய்த்துச் சிங்காதனம் எய்தினான்.

சோழர்களில் முக்கியமானவன் கரிகாலன் (கி. பி. 190). இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன். இவனுக்குக் குழந்தைப் பருவத்தில் காலில் நெருப்புச் சுட்டதால் கரிகாலன் என்ற பெயர் வந்தது. பிற்காலத்தில் இப்பெயரை வடமொழியாகக் கொண்டு வேறு பொருள்கள் கற்பித்தனர். இளமைப் பருவத்தில் இவன் சத்துருக்களால் சிறையிலிடப்பட்டுத் தன் வலிமையால் அதனின்று வெளியேறி இராச்சியம் பெற்றது பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கிறது. வெண்ணிப் போரில் இவன் அடைந்த பெருவெற்றியில் பாண்டியனும் சேரனும் பல வேளிரும் தோல்வியுற்றார்கள். சேரன் முதுகில் புண்ணுற்று வடக்கிருந்து உயிர் நீத்தான். வாகைப்பறந்தலையில் சிற்றரசர்கள் ஒன்பதின்மர் கரிகாலனுடன் போரிட்டுத் தங்கள் குடைகளை இழந்தார்கள். இவன் வெற்றிகளால் வெளிநாட்டாருடைய வீரம் குறைந்தது. அருவாநாட்டார் இவன் இட்ட தொழில்களைச் செய்தனர். வடநாட்டரசர் வாடவும், சேர நாட்டவர் மனவெழுச்சி குறையவும், தென்னவன் திறல் கெடவும் நேர்ந்தன. தவிரவும் பிற அரசர்களும் வேளிர் குலங்களும் வலி ஒடுங்கின. இவன் நாட்டுத் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையும் அதன் வியாபாரப் பெருக்கும் அதன் துறைமுகத்தில் கப்பல்களின் போக்குவரத்தும் பட்டினப்பாலையில் விரிவாக வருணிக்கப்படுகின்றன.

காஞ்சீபுரத்திலாண்ட தொண்டைமான் இளந்திரையனும் கரிகாலன் காலத்தவனே. இவன் திருமால் வழித் தோன்றல் என்றும், கடலின் திரைகளால் தரப்பட்ட மரபினன் என்றும் புகழப்படுகிறான். அதியமானுக்காக ஒளவையார் தூது சென்றது இவனிடமோ அல்லது இவன் வமிசத்து வேறொரு தொண்டைமானிடமோ என்று தெரியவில்லை.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆண்ட காலம் சுமார் கி. பி. 210. இவன் ஒரு கவி ; மாங்குடி மருதனார், நக்கீரர் முதலிய புலவர்களாற் புகழப்பட்டவன் ; நெடியோன் என்ற ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியனும், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் இவனுடைய முன்னோர்களாவர். கடைசியாகக் கூறப்பட்டவன் கரிகாலனுடனும் சேரன் செங்குட்டுவனுடனும் சம காலத்தவன் என்பதும், கோவலனை அநியாயமாகக் கொல்வித்ததற்காக வருந்தி உயிர் நீத்தவன் இவனே என்பதும் சிலப்பதிகாரக் கதை. நெடுஞ்செழியன் சிறு பிராயத்திலேயே பட்டத்திற்கு வந்தான். அதனால் இவன் சத்துருக்கள் “பெரியம் யாமே, நம்மிற் பொருநனும் இளையன், கொண்டியும் பெரிது” எனக் கொண்டு, இவன் நாட்டின்மேற் படையெடுத்து வந்தனர். பாண்டியன் மதுரைக்கருகிலேயே இவர்களைச் சந்தித்து, வடபால் வெகுதூரம் இவர்களைத் துரத்தித் திருவாரூருக்கு எட்டு மைல் வடமேற்கேயுள்ள தலையாலங்கானம் என்னுமிடத்தில் இவர்களை முறியடித்தான். இப்போரில் தான் யானைக்கட்சேய் பிடிபட்டுச் சிறையிலடைக்கப்பட்டான். பாண்டியன் வேள் எவ்வியிடமிருந்து, மிழலை, முத்தூறு என்னும் இரண்டு கூற்றங்களைப் பறித்துத் தன் நாட்டோடு சேர்த்தான். மதுரைக் காஞ்சியில் மதுரையின் வனப்பும், பாண்டி நாட்டின் வளமும் நெடுஞ்செழியன் ஆட்சியின் மேன்மையும் விரிவாகக் கூறப்படுகின்றன.

கரிகாலனுக்குப் பின் சோழநாட்டில் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஏற்பட்ட போர்களைக் குறித்துக் கோவூர்கிழாரும் வேறு புலவர்களும் பாடிய பாடல்கள் பல புறநானூற்றில் உள. நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை நெடுங்கிள்ளி, ‘இவன் ஒற்று வந்தான்’ என்றெண்ணிக் கொல்லப் புகுந்தபோது, கோவூர் கிழார் அவனை உயிர் தப்புவிக்கப் பாடிய பாடல் ஒன்றும் இவைகளில் அடங்கியுள்ளது. செருப்பாழி, பாமரூர் என்னும் கோட்டைகளைச் சேரர்களிடமிருந்து கைப்பற்றின நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியும் அக்காலத்துச் சோழ அரசர்களில் ஒருவன், சோழன் செங்கணான் சங்க காலத்து இறுதியிலோ, அதற்குக் கொஞ்சம் பின்னோ ஆண்டிருக்கவேண்டும். இவன் போர் என்னுமிடத்தில் நடத்திய போரிற் கணைக்கால் இரும்பொறை என்ற சேர அரசனைப் பிடித்துச் சிறையிலிட்டான். அவ்வரசனுடைய நண்பராகிய பொய்கையார் என்னும் புலவர் ‘களவழி நாற்பது’ என்னும் நூலைப் பாடி இரும்பொறையைச் சிறை மீட்டதாக ஒரு வரலாறுண்டு. செங்கணான் ஒரு சிவபக்தன். இவன் பல கோயில்கள் கட்டி யிருக்கிறான்.

நல்லியக்கோடனைக் குறித்து நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படையால் சங்க காலத்து இறுதியில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் வெளியாகின்றன. நல்லியக்கோடன் ஆண்டது தற்காலத்துத் தென்னார்க்காட்டின் ஒரு பகுதி. அவன் ஆண்ட காலம் சுமார் கி. பி. 275-300 வரை. அக் காலத்தில் வஞ்சி, மதுரை, உறையூர் ஆகிய தலைநகரங்கள் தாழ்நிலை அடைந்திருந்தன என்றும், தருமம் செய்யக் கூடிய வேளிர்கள் பலரும் காலம் சென்றுவிட்டனரென்றும் நத்தத்தனார் பாடுகிறார். இதற்கப்புறம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குத் தமிழ் நாட்டின் வரலாறு சரியாக விளங்காததால் இதை ஓர் இருண்ட காலம் என்றே சொல்லலாம்.

சங்க காலத்தில் நீர்வளமும் நிலவளமும் பெருகி மக்கள் திருப்தியுடன் வாழ்ந்ததாகக் கூறலாம். சேர