பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

647

இந்தியா

நாட்டில் எருமை, பலா, மிளகு, மஞ்சள் முதலியவை மிகுதி. ஒரு வேலி ஆயிரம் கலம் கொடுக்குமென்றும், ஒரு பெண் யானை படுக்குமிடம் ஏழு யானைகளுக்கு உணவளிக்குமென்றும் சோழநாட்டு வளம் கவிகளால் புகழப்படுகிறது.

உள்நாட்டிலும் அயல் நாடுகளுடனும் வியாபாரம் மும்முரமாக நடந்து வந்தது. துறைமுகப்பட்டினங் களில் பெரிய கப்பல்கள் வருவதும் போவதும் அயல் நாட்டார் பலர் வந்து தங்குவதும் நடைபெற்றன. புகாரும் முசிரியும் மிகவும் புகழ்பெற்ற வணிக நகரங்களாக விளங்கின. பாண்டி நாட்டில் சாலியூரும், சேரநாட்டில் தொண்டியும் அவ்வாறே விளங்கின. வேறு பல சிறு துறைமுகங்களும் இருந்தன. புகாரின் வளமும், அங்குள்ள வணிகர்களின் செல்வமும் நேர்மையும் பட்டினப்பாலையில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. கடல் வழியாகக் குதிரைகள் வந்து இறங்கின. மிளகும் கருவாப்பட்டையும், அகில், சந்தனம் முதலிய வாசனை மரங்களும், வாசனைத் திரவியங்களும் தந்தமும், நயமான துணிகளும் மணிகளும் வைரமும் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இறக்குமதிச் சரக்குக்களில் முக்கியமானவை தங்கமும் வெள்ளியும் ; இவை நாணயங்களாக வந்தன. அக் காலத்தில் வந்த பல நாணயக் குவியல்கள் இன்னும் நாட்டில் பல இடங்களில் புதைந்து கிடந்து, தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. பெரிப்ளுஸ் என்னும் கிரேக்க நூலில் மூன்று வகையான தமிழ் நாட்டுக் கப்பல்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் மிகப் பெரியவை பெரிய சமுத்திரங்களைத் தாண்டிப் பல அயல் நாடுகளுக்குச் சென்றன என்று கூறப்பட்டிருக்கிறது. வாணிகம் கி. பி. முதல் இரண்டு நூற் றாண்டுகளில் செழித்து வளர்ந்து, மூன்றாம் நூற்றாண் டில் குறைய ஆரம்பித்தது. மறுபடி ஐந்தாம் நூற்றாண்டில் சிறிது அதிகரித்தது. ஆனால் அது வெகு காலம் நீடித்திருக்கவில்லை. கடல் வியாபாரம் செழித்து வளர்ந்த நாட்களில், அதாவது கி. பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் பல தமிழர்களும் ஆந்திரரும் நாட்டைவிட்டுக் கிழக்கிலுள்ள மலேயா தீபகற்பத்திற்கும், ஜாவா, சுமாத்ரா முதலிய தீவுகளுக்கும், இந்தோ சீன நாட்டுக்கும் சென்று குடியேறினர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. (பார்க்க : தமிழர்- பிற நாடுகளில் தமிழர்).

உள் நாட்டில் வியாபாரச் சரக்குக்கள் வண்டிகளிலும் மாடுகள், குதிரைகள், கழுதைகள் முதலிய பிராணிகளின் முதுகிலும் ஊர் ஊராகக் கொண்டு போகப்பட்டன. பண்டங்களை ஒன்றுக்கொன்று மாற்றும் வழக்கம் மிகுந்திருந்தது. தேனும் கிழங்கும் மீனுக்கும் கள்ளுக்கும் மாற்றப்பட்டன. கரும்பும் அவலும் மான் இறைச்சிக்கு விற்கப்பட்டன. முசிரியில் மீன் விற்று நெல் கொண்டனர். நிலத்தைப் பயிரிடுவதில் உழவர்கள் மிகவும் ஈடுபட்டனர். வேளாளர் உழுது உண்பவரும் உழுவித்து உண்பவருமாக இரு வகைப் பட்டனர். ஒரு வகையினர் படைகளிலும் அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டு, அரசரால் மதிக்கப் பெற்று 'மாராயம்' பெறுவது உண்டு. நூற்றலும் நெசவும் பலரால் கையாளப்பட்டன. ஊசி, கத்தரிக்கோல் முதலிய கருவிகள் வழக்கத்திலிருந்தன.

வேத வேள்விகள் அரசராலும் அந்தணராலும் நடத்தப்பட்டு வந்தன. பசுவின் கொலை, கருவழித்தல், பார்ப்பாரைப் பழித்தல் முதலியவை குற்றங்களாகக் கருதப்பட்டன. நன்றி மறத்தல் இவற்றிலும் கொடிய குற்றமாகக் கருதப்பட்டது. பிணங்களை எரிப்பது, தாழியில் அடக்குவது, குழிகளில் இடுவது முதலிய பல வேறு வழக்கங்கள் இருந்தன. இறந்த கணவனுக்கு அவன் மனைவி இடும் பிண்டத்தில் புலையனுக்கும் பங்குண்டு. உடன் கட்டையேறுதல் கையாளப்பட்டு வந்தது. கைம்பெண்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்த தாகவே இருந்தது. முருகன், சிவன், திருமால், பலராமன், முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்தனர். கோயில்களுக்குப் பெண்டிரும் குழந்தைகளும் போவதுண்டு. முருகன், கொற்றவை, திருமால் முதலி யோருடைய வணக்கத்தில் ஆடலும் பாடலும் அதிகமாகக் கையாளப்பட்டு வந்தன. பல மதங்களிலும் துறவிகளின் வாழ்க்கை சிறப்பிக்கப்பட்டது. ஆகவே ஆண்களிலும் பெண்களிலும் சிலர் இல்லறவாழ்க்கை யைத் துறந்தனர்.

சங்க காலத்தின் முடிவு சுமார் கி. பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வைத்துக்கொள்ளலாம். அதற்குப் பின் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் நாட்டின் வரலாற்றில் ஓர் இருண்ட காலம். அக்காலத்தில் நடந்த செய்திகளைக் குறிக்கும் நூல்களோ சாசனங்களோ கிடைக்கவில்லை. ஆனால் சமண மதமும் பௌத்த மதமும் ஓங்கி வளர்ந்தன. பதினெண்கீழ்க்கணக்குக்களில் பல நூல்கள் (குறள் உட்பட) இயற்றப்பட்ட காலம் இதுவேயாகலாம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதே காலத்திலோ, சற்றுப் பின்னாகவோ இயற்றப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்துச் சாசனங்கள் பல, முக்கியமாக வேள்விகுடிச் செப்பேடு, இவ்விருண்ட காலத்தில் களப்பிர ரென்னும் கொடிய வேந்தர்கள் தங்கள் கொடுங் கோன்மையைத் தமிழ் நாட்டில் நடத்தியதாகக் கூறு கின்றன. அச்சுத விக்ராந்தன் என்ற களப்பிர குல மன்னன் சோழநாட்டை ஆண்டானென்றும், பல பௌத்த விஹாரங்களைக் கட்டிப் பௌத்த ஆசிரியரை ஆதரித்தும் அவர்களை நூல்களியற்றச் செய்தானென்று, அக்காலத்துப் புத்ததத்தர் என்னும் ஆசிரியர் எழுதிய நூல்களால் அறிகிறோம். இவ்வச்சுதனைப் பற்றிய சில பழைய பாடல்களும் யாப்பருங்கலத்திலும் தமிழ் நாவலர் சரிதையிலும் காணப்படுகின்றன. இவன் தமிழரசர் மூவரையும் வென்று சிறை வைத்தானென்று அறிகிறோம்.

கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாதாமிச் சாளுக்கியர், காஞ்சீபுரப் பல்லவர்கள், மதுரைப் பாண்டியர் ஆகிய மூன்று அரச வமிசத்தினர் முன்னேற்றமடைந்தனர். அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் இவர்களுடைய வரலாறே தென்னிந்திய வரலாறு. சோழர் தம் ஆதிக்கம் குன்றி, உறையூரின் அருகில் சிற்றரசராக வதிந்து வந்தனர். அக்காலத்தில் சண்டைகள் பல நிகழ்ந்த போதிலும், கைத்தொழில்கள், வியாபாரம், இலக்கியம், சிற்பம் முதலியவை சிறந்து முன்னேற்றமடைந்தன.

தட்சிண பீடபூமியும் மைசூரின் வடபாகமும் மௌரிய சாம்ராச்சியத்தைச் சேர்ந்திருந்தன. அசோகன் இறந்து சில காலத்திற்குப் பின் ஆந்திரசாதியைச் சேர்ந்த சாதவாகன குலத்து அரசர்கள் சுதந்திர அரசர்களாக மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ்டான நகரைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினார்கள். கி. பி. முதல் நூற்றாண்டில் பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாட்டில் மதில் சூழ்ந்த முப்பது நகரங்கள் இருந்தனவென்றும், அதன் படை இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைப் படையும், ஆயிரம் யானைகளும் அடங்கியதென்றும் கூறுகிறார். விசுவாமித்திரர் சாபத்தால் சாதி நீக்கம் அடைந்த மக்-