பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

714

இந்தியா

பொருள்கள், துணி ஆகிய சில பொருள்களைப் பற்றியதாகவே இருந்து வருகின்றது. பட்டணங்களுக்கு அண்மையிலில்லாத ஊர்களில் இந்தச் சொற்ப வாணிகமும் வாரச் சந்தையிலோ அல்லது பருவச் சந்தையிலோதான் நடைபெறுகின்றது. ஏதேனும் முக்கியத் திருவிழாச் சமயத்தில் கூடுகின்ற சந்தையிலேயே அக்கம் பக்கத்து ஊர் மக்கள் தங்கட்கு வேண்டிய துணிமணிகள், பாத்திரங்கள், ஆயுதங்கள் முதலியவற்றை வாங்குவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய சிற்றூர்களுள் பலவற்றில் இந்த வாணிகத்தை அங்கங்குள்ள வணிகர்களே நடத்துகிறார்கள். அவர்களே பொருள்களை வாங்கவும் விற்கவும் செய்வதுடன் பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கவும் செய்கிறார்கள். சில வேளைகளில் இந்தச் சிற்றூர் வணிகர்கள் பெரிய நகரங்களிலும் பட்டணங்களிலும் குறிப்பிட்ட பொருள்களில் மொத்த வியாபாரிகளாயிருப்பவர்க்கு ஏஜென்டுகளாகவும் இருப்பர்.

சிற்றூர்களில் வாணிகப் பயிர்களைத் தவிர ஏனைய பயிர்களில் அவ்வூர்களின் தேவைக்குப் போக எஞ்சியதே விற்கப்படும். பெரும்பாலும் வியாபாரிகள் அறுவடைப் போதில் ஒரு பகுதியில் வாங்கிப் பின்னர் அந்தப் பகுதியிலேயே விற்பர். அதனால்தான் ஒரு பகுதியில் விளையும் உணவுப் பொருள்களை வேறு பகுதியில் விற்பது முடியாததாயிருக்கிறது. ஆனால் சணல், நிலக்கடலை போன்ற வாணிகப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் நகர வியாபாரிகளுடன் சிற்றூர் வணிகர்கள் தொடர்புடையவராக இருக்கிறார்கள்.

உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் இந்தியர்களாலேயே நடத்தப்படினும், ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்தைப் பெரும்பாலும் ஐரோப்பியர்களே நடத்தி வருகிறார்கள். அன்னிய நாட்டு வாணிகம் துறைமுகப் பட்டினங்களிலேயே நடைபெறுகிறது. அதில் பெரும் பகுதி பம்பாய், கல்கத்தா போன்ற மிகப் பெரிய துறைமுகப்பட்டினங்களிலேதான் நடக்கிறது. மங்களூர் போன்ற சிறிய துறைமுகப்பட்டினங்கள் தங்கள் பக்கத்துப் பகுதியில் விளையும் பொருள்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய உதவுகின்றன. இறக்குமதிப் பொருள்கள் பெரும்பாலும் பெரிய துறைமுகங்களிலேயே வந்து இறங்குகின்றன. அதற்குக் காரணம் பாரக்கப்பல்கள் ஒழுங்காகவும் அடிக்கடியும் பெரிய துறைமுகங்களுக்கு வருவதும், இறக்குமதிச் சரக்குக்கள் இருந்தால் மட்டுமே சிறிய துறைமுகங்களுக்கு வருவதுமாகும்.

கடற்போக்குவரத்து வசதியும், நிலப்போக்குவரத்து வசதியும் வளர்ந்ததால் உலக முழுவதும் வாணிகம் வளர்ந்துள்ளது. அந்த உலக வியாபாரத்தின் ஒரு பகுதி இந்திய வியாபாரம். இதன் காரணமாக உலகத்தில் பல பகுதிகளில் கைத்தொழில்களும் பொருளாதாரமும் மிகுதியாக வளர்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் கூறலாம். அதனால் இந்தியாவின் வெளிநாட்டு வாணிகம் அளவில் மிகுந்திருப்பதுடன், உலகிலுள்ள பல நாடுகளுடன் நடந்தும் வருகிறது.

இந்தியாவில் வெளிநாட்டு வாணிகம் 1900 க்கு முன் பெரும்பாலும் பிரிட்டனுடன் மட்டுமே நடந்துவந்தது. 1900-1914-ல் ஜெர்மனி பிரிட்டனுடன் போட்டியிடலாயிற்று. முதல் உலக யுத்த சமயத்திலும் அதன் பின்னரும் தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் மிக முக்கியமான வாணிக நாடாக ஆயிற்று. செக்கோஸ்லோவாக்கியா, இத்தாலி போன்ற பிற நாடுகளும் இந்தியாவுடன் செய்யும் வாணிகத்தைப் பெருக்கின. ஆனால் 1939 க்குப் பிறகு ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் சில ஆண்டுகள் உலக வியாபார நிலையங்களாக இல்லாமல் போய்விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகளே எல்லாவிதமான பொருள்களையும் வாங்கவும் விற்கவுமுள்ள பெரிய வணிக நாடாயிற்று. பிரிட்டன் ஒன்றுதான் அதனுடன் போட்டியிடுவதாயிருந்தது. ஆயினும் ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கைத்தொழில்களைப் புதுப்பித்துக்கொண்டு தங்கள் வாணிகத்தை வளர்த்து வருகின்றன.

இந்தியாவில் அன்னிய நாட்டு வாணிகமும் நாளடைவில் முக்கியமான மாறுதல்கள் அடைந்துள்ளன. தொடக்கத்தில் இந்தியா விவசாயப்பொருள்களையும் தாதுப்பொருள்களையும் ஏற்றுமதி செய்து, அதற்கு மாற்றாகப் பருத்தித்துணிபோன்ற பலவித வாழ்க்கைப் பொருள்களை மிகுந்த அளவில் இறக்குமதி செய்தது. கோதுமை போன்ற தானியங்கள், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்கள், சணல் ஆகியவை பெயரளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. மக்கள் தொகை பெருகி வருவதன் காரணமாக உணவுத் தானியங்கள் ஏற்றுமதிக்கு மாறாக இறக்குமதியே நடந்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணம் சில ஆண்டுகளாகப் பருவ மழை பெய்யாதிருந்தமையுமாகும். கைத்தொழில்கள் பெரிய அளவில் பெருகிவருவதால், சிமென்டு, சவர்க்காரம், தீப்பெட்டி, இரும்பு, எஃகு போன் செய்பொருள்களில் பலவகைகளின் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி கூடிவருகிறது. மொத்த ஏற்றுமதியில் செய்பொருள் ஏற்றுமதி 1921-ல் 26% ஆக இருந்தது 1942-ல் 47% ஆகவும், 1951-ல் 62% ஆகவும் பெருகியிருக்கிறது. மொத்த இறக்குமதிகளில் செய்பொருள்கள் 1920-ல் 84% ஆக இருந்தவை 1942-ல் 55% ஆகக் குறைந்திருக்கின்றன.

இந்திய வாணிகத்தில் காணப்படும் முக்கியமான அமிசம் மொத்த ஏற்றுமதியில் கச்சாப்பொருள்கள் 1920-ல் 53% ஆக இருந்தது 1951-ல் 18% ஆகக் குறைந்ததாகும். இதற்குக் காரணம் இவை நாளுக்கு நாள் மிகுதியாக உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுவதேயாம்.


இந்தியப் பிரிவினையும் அதன் வெளிநாட்டு வாணிகத்தைப் பாதித்துளது. இந்தியாவில் நீண்டநாளாக நன்கு நடைபெற்றுவரும் சணல், பருத்தி, தோல் கைத் தொழில்களுக்காகப் பாகிஸ்தானிலிருந்து கச்சாப் பொருள்கள் மிகுந்த அளவில் இறக்குமதியாகின்றன. பாகிஸ்தானுக்கு பொருள்களுள் ஏற்றுமதியாகும் தலையாயவை பருத்தித்துணிகள், சர்க்கரை, தீப்பெட்டி. ஆயினும் அங்கே இப்பொருள்கள் பிறநாட்டுப் பொருள்களுடன் போட்டியிட வேண்டியிருக்கின்றன. இந்தியா வகுத்துள்ள ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்களாவன: (1) பொறிகள் முதலிய கருவிகளை மிகுதியாக இறக்குமதி செய்தல், (2) உணவுப் பொருள்கள், சணல், கச்சாப் பருத்தி போன்ற பொருள்கள் ஆகியவற்றை நாட்டிலேயே மிகுதியாக உற்பத்தி செய்வதன் வாயிலாக அவற்றின் இறக்குமதியைக் குறைத்தல், (3) இந்தியாவில் உற்பத்தியாகும் செய்பொருள்களின் ஏற்றுமதியைப் பெருக்குதல். அதிலும் முக்கியமாகக் கைத்தொழில் வளர்ச்சி பெறாத அண்மை நாடுகளுக்கு மிகுதியாக அனுப்புதல், (4) பலநாடுகளுடன் வாணிகத்தைப் பெருக்குதல். பீ.எம்.தி.

போக்குவரத்து

சாலைகளும் தரைவழிச் சாதனங்களும் : இருப்புப் பாதைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர் இந்தியாவின்