பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுசக்தி

64

அணுசக்தி

விளைவுகளை ஆராய்ந்தார்கள். இச்சோதனையின்போது பலகோடிக் கணக்கான டன் நிறையுள்ள நீர் ஒரு பெரிய அர்த்தகோளம்போல் நுரைத்தெழுந்து பல்லாயிர அடி உயரம் சென்றது. அதிர்ச்சி அலை காற்றிலே பரவி அதை விரிவாக்கியது. இதனால் காற்றில் இருந்த நீராவி மிகப் பெரிய மேகமாகக் குளிர்ந்து ஒரு கும்மட்டம் போல் அந்த இடத்தின் மேல் கவிழ்ந்தது. சூடேறிப் பெருந் தூணைப்போல் ஒரு மைல் உயரம் சென்று அடைமழையாகக் கீழே கொட்டிற்று. கடலில் நூறடி உயரமுள்ள பேரலைகள் தோன்றிப் பலமைல் தொலைவு பரவின. நீரின் கதிரியக்கத் தன்மையினால் பல மாதங்கள்வரை அங்குப் பாதுகாப்பின்றிச் செல்வது ஆபத்தாக இருந்தது.

ஹைடிரஜன் குண்டு: சாதாரண அணுகுண்டைப் போல் பலமடங்கு ஆற்றலைத் தரும் அரக்கப் படைக்கலம் ஒன்றை அமைக்கும் திட்டம் 1950 ஜனவரியில் அமெரிக்காவில் தொடங்கியது. இப்போர்க்கலம் ஹைடிரஜன் குண்டு எனப்படும். யுரேனிய அணுகுண்டில் கனமான அணுக்களைப் பிளந்து ஆற்றல் வெளிப்படுத்தப்படுகிறது. இன்னொரு வகையிலும் அணு ஆற்றலை வெளிப்படுத்தலாம். ஹைடிரஜனது உட்கருக்களை இணைத்து ஒரு ஹீலியம் உட்கருவைப் பெறலாம். இப்போது மிக அதிகமான ஆற்றல் வெளியாகும். காரணம் ஹீலியம் கரு ஹைடிரஜன் கருக்களைவிட அதிக நிலையானது என்பதுதான். ஆனால் பல லட்சம் டிகிரி வெப்ப நிலையில்தான் இவ்விளைவு நேரும். இதனால் புவியில் இதை நிகழ்த்துவது கடினம். ஆனால் சூரியனிலும், நட்சத்திரங்களிலும் இந்த வெப்பநிலை இருப்பதால் அங்கு இவ்விளைவு இடையறாது நிகழ்ந்து ஏராளமான ஆற்றல் வெளிவருகிறது. சூரியனது வற்றாத ஆற்றலின் மர்மம் இதுவே. யுரேனியப் பிளவினால் உயர்ந்த வெப்பநிலையைப் பெற்று, அவ்வெப்பநிலையில் ஹைடிரஜன் -ஹீலியம் கருமாற்றத்தை நிகழ்த்தி, ஆற்றலைப்பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவில் உள்ளது என அறிய இயலாது. இத்தகைய குண்டு சாதாரண அணுகுண்டைப்போல் சுமார் 100 லிருந்து 1000 மடங்குவரை ஆற்றலுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.

அணுசக்தியின் பயன்கள்: சமாதான காலத்தில் அணுசக்தியைப் பயன்படுத்தும் முறைகளுள் முதலாவது இதிலிருந்து பயனுள்ள வகையில் மின்சார ஆற்றலைப் பெறுவதே. அணு அடுக்கில் அணுப்பிளவை நிகழ்த்தும்போது தோன்றும் ஏராளமான வெப்பத்தைக்கொண்டு நீரை ஆவியாக்கி டர்பைன்களை ஓட்டி மின்சார சக்தியைப் பெறலாம். ஆனால் இதில் பல தொல்லைகள் உள்ளன. இவ்வாறு வெப்பத்தை வேறு வகை ஆற்றலாக மாற்ற நடைமுறையில் வழங்கும் எல்லா முறைகளிலும் ஆற்றலிற் பெரும்பகுதி விணாகிறது. ஆகையால் இம்முறை மற்ற முறைகளைவிட இலாபகரமாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

யுரேனியம் மிக அருமையான தனிமம். சக்தியைப் பெற இதை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினால் இது இன்னும் கிடைத்தற்கரிதாய் விடும். இத்தொல்லையைத் தவிர்க்க பிரீடிங் (Breeding) என்னும் பெருக்க முறை பயன்படுகிறது. பிளவுறும் பொருளொன்றை அணு அடுக்கில் இட்டு, அதிலிருந்து ஆற்றலைப்பெறும்போது அதில் வேறொரு பொருள் சிறிதளவு அதிகமாகத் தோன்றி அதுவும் இவ்வாறு பயன்பட ஏற்றதானால் அதை அணுவாற்றலைப்பெறப் பயன்படுத்தலாம். இம்முறையில் பொருளைப் பெறுதல் பிரீடிங் எனப்படும். இம்முறை இலாபகரமானதுமாகும். யுரேனிய அடுக்கு வேலை செய்யும்போது புளூட்டோனியம் தோன்றுவது இதற்கொரு உதாரணமாகும்.

ஆனால் இம்முறைகளில் சக்தியைப் பெறும் தொழிற் சாலையை அமைக்க ஏராளமாகச் செலவாகும். இதில் வெளிப்படும் கதிர்ப்புக்களிலிருந்து தொழிலாளரைக் காப்பதும், இதில் தோன்றும் கதிரியக்க ஐசோடோப்புகளைத் தீங்கின்றி அகற்றுவதும் தொல்லைதரும் வேலைகளாகும். ஆனால் காலப்போக்கில் இத்தொல்லைகளைத் தவிர்க்க வழிகண்டுபிடிக்கப்படுமென்றும், வேறு வகையில் சக்தியைப்பெற இயலாத பிரதேசங்களிலாவது வருங்காலத்தில் அணுசக்தி ஆக்க நிலையங்கள் தோன்றும் என்றும் எதிர்பார்க்கலாம். ரெயில் எஞ்சின்களிலும், கப்பல்களிலும் இது பயன்படும் காலமும் வரலாம்.

ரஷ்யாவில் மலைகளைத் தகர்க்க அணுசக்தி பயன்பட்டதாக அறிகிறோம். இத்தகைய பெருவேலைகளுக்கு இது பயன்பட வழியுண்டு. நிரந்தரமாகப் பனிக்கட்டியால் மூடப்பெற்ற நிலப்பகுதிகளில் அணுசக்தியால் பனிக்கட்டியை அகற்றி அப்பிரதேசங்களிலுள்ள தாதுப்பொருட் செல்வத்தைப் பெறும் திட்டங்களும் நடைமுறையில் இயலக்கூடும்.

அணு அடுக்கில் தயாரிக்கப்படும் கதிரியக்க ஐசோடோப்புகள் தாவரவியல், விலங்கியல், மருத்துவம், தொழில்நுட்பம், ரசாயனம் போன்ற பல துறைகளில் இன்றியமையாச் சாதனங்களாக இப்போதே பயன்படுகின்றன. அணுசக்தி ஆக்கத்தால் உடனடியாக விளைந்துள்ள பெருநன்மை இப்பயன்களேயாம். பார்க்க: குறியிடுமுறை.

அணுகுண்டு ஆக்கத் திட்டம்: இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே அமெரிக்காவிலுள்ள சில பெளதிக அறிஞர்கள் அணுவாற்றலைப் போரில் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வாண்டு அமெரிக்க ஜனாதிபதியும் இதுபற்றிய தகவல்கள் அறிந்து, 1940 பிப்ரவரியில் இதுபற்றிய ஆராய்ச்சிகளுக்கு மானியம் அளித்தார். மிகச் சிறிய அளவில் தொடங்கிய இத்திட்டம் அணுகுண்டு உருவாகுமுன் 200 கோடி டாலர் செலவாகிய பெருந்திட்டமாக வளர்ந்தது. 1941 ஜூலையில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதலாவது அணு அடுக்கு நிறுவப்பட்டது. இங்கு நடைபெற்ற சோதனைகளின் விளைவாகத் தொடர் விளைவு என்பது நடைமுறையில் இயலும் எனத் தெளிவாயிற்று. இதை நிகழ்த்தும் அடுக்கு 1942-ல் அமைக்கப்பெற்றது. 1943-ல் கிளின்டன், ஹான்போர்டு ஆகிய இரண்டிடங்களிலும் பெரிய அளவில் அணு அடுக்குகள் நிறுவப்பெற்று ஆக்கத் திட்டம் மிக விரைவாக முன்னேறியது. குண்டை ஆக்கும் வேலையின் கடைசிப் படிகளைக் கவனிக்க லாஸ் அலமாஸ் என்ற வனாந்தரத்தில் புது ஆராய்ச்சி நிலையம் நிறுவப் பெற்றது.

மனித வரலாற்றிலே முதலாவது அணுகுண்டு நியூ மெக்சிகோ பாலையில் 1945 ஜூலை 16-ல் வைகறையில் வெடிக்கப்பட்டது. சோதனையின் முடிவுகள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிடத் திருப்திகரமாக இருக்கவே அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமாவின் மேலும், மூன்று நாட்களுக்குப்பின் நாகசாகியின் மேலும் அணுகுண்டுகள் எறியப்பட்டன.

போருக்குப்பின் நிகழ்ந்துள்ள வளர்ச்சி : போருக்குப் பின்னரும் அணுவாற்றல் கட்டுப்பாட்டுத் துறையில் பல நாடுகளில் மும்முரமான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் 1946-ல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள பிக்கினியில் கடலில் அணுகுண்டை