பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைத் திறமை

28

இயற்கைத் திறமை

வும் குறைந்த பொருட் செலவிலும் கண்டுபிடிப்பதற்குரிய முறைகள் தேவையாகும். இதன் பொருட்டு உளவியலார் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து, பல சோதனைகளை வகுத்துள்ளனர். இந்தச் சோதனைகள் முடிவானவையல்ல. ஆராய்ச்சிகள் மேன்மேலும் கடந்து, இப்பொழுதுள்ளவற்றைவிட மிகுந்த நல்ல சோதனைகள் கண்டுபிடிக்கப்படலாம். ஆயினும் இப்பொழுதுள்ள சோதனைகள் பயன் தருவனவாகவே இருக்கின்றன.

சோதனை என்பதெல்லாம் ஒரு சிறு மாதிரியைக் (Sample) கொண்டே நடைபெறுவதாம். ஓர் உணவுப் பொருளின் தூய்மையைச் சோதிக்க விரும்பினால், அதில் ஒரு சிறு அளவு எடுத்துச் சோதிக்கின்றோம். சிறு அளவுக்குள்ள குணமே அவ்வுணவுப் பொருள் அனைத்துக்குமாகும் என்ற எண்ணமே இதற்கு அடிநிலை. அதுபோல் ஒரு மனிதன் தக்க பயிற்சியாலும் குழ்நிலையாலும் தன்னுடைய அறிவையும் திறமையையும் பெருக்கிக் கொள்ளவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளவும் கூடுமாயினும், அவனுடைய இயற்கைத் திறமை எப்பொழுதும் ஒன்றுபோலவே இருக்கும் என்று கருதுகின்றோம். எடுத்துக்காட்டாக ஆராய்ச்சியின் பயனாக ஒருவனிடம் மிகுந்த இசைத் திறமை இருப்பதாகக் காணில், பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும் அதே திறமையுடையவனாயிருப்பான் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆகவே உளவியல் சோதனை என்பது ஒருவனுடைய நடத்தையில் ஒரு மாதிரியைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அளப்பதேயாம்.

மக்கள் இயற்கைத் திறமையில் வேறுபாடுடையர் என்ற கருத்து வற்புறுத்தப்பட்ட பின்னரே இயற்கைத் திறமைச் சோதனை வளர்ச்சி பெறலாயிற்று. முதன் முதலாக இங்கிலாந்திலிருந்து பிரான்சிஸ் கால்ட்டன் 1884லும், அமெரிக்காவிலிருந்த ஜே. மக்கீன் காட்டெல் 1890 லும், இறுக்கிப் பிடிக்கும் வன்மை, கை அசைவு விகிதம், நினைவு கூறும் வன்மை போன்றவற்றால் மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளைச் சோதனை மூலம் ஆராய்ந்தார்கள். அவர்களுடைய முறைகள் சிறந்தனவாக இருக்கவில்லை. மற்றும் அவர்கள் உடலியற் பண்புகளையே மிகுதியாக ஆராய்ந்தார்கள். 1908-வ் பிரான்ஸ் நாட்டு ஆல்பிரட் பினே (Alfred Binet) இயற்கைத் திறமையை அளந்தறிவதற்கான சோதனைகளை வெளியிட்டார். அவை புகழ் வாய்ந்தவை.

இவர்களுக்குப் பின்னர் இந்தச் சோதனை முறையானது விரைவாக வளர்ந்து வந்துள்ளது. அதற்கு ஒரு காரணம் புள்ளி விவர முறைகளைப் பயன்படுத்தியதேயாம். அதனுடன் முதல் உலக யுத்தமும் சோதனை முறை வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்தது. யுத்த காலத்தில் சேனைக்கு ஆள் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட சோதனைகளை யுத்தம் நின்ற பின்னர், கைத்தொழில் முதலியவற்றிற்கும் பயன்படுத்த விருப்பம் உண்டாயிற்று. தொடக்கத்தில் சோதனைகள் பெரும்பாலும் 'பொது இயற்கைத் திறமை' என்பதைக் குறித்த சோதனைகளாகவே இருந்தன. ஆனால் பொது இயற்கைத் திறமை என்பது நூற்கல்வி பற்றிய ஒருவித இயற்கைத் திறமையேயன்றி வேறன்று என்று காணப்படவே, பல திறப்பட்ட இயற்கைத் திறமைகளைப் பற்றிச் சோதனைகள் வகுப்பதில் முனைந்தனர். . இயற்கைத் திறமைச் சோதனைகள் இரு திறத்தன. ஒன்று ஒரு குறிப்பிட்ட இயற்கைத் திறமை பல மக்களிடம் வேறுபட்டுக் காணப்படுவதை அளப்பதாம். மற்றொன்றுஒரே ஆளிடம் பல இயற்கைத் திறமைகள் வேறுபட்டுக் காணப்படுவதை அளப்பதாம். முந்திய வேறுபாடுகள் 'ஆள் வேறுபாடுகள்' என்றும், பிந்திய வேறுபாடுகள் 'பண்பு வேறுபாடுகள்' என்றும் கூறப்பெறும். ஒரு குறிப்பிட்ட பண்பை ஆய்ந்தால், பெரும்பாலான மக்கள் அதை நடுத்தர அளவே உடையவர்களாக இருப்பார்கள். நடுத்தர அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ உடையவர்களின் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே போகும். ஓர் எல்லைக்கு வந்ததும், அதற்கு அதிகமான அளவுடையவர் யாரும் காணப்படார். பண்பு வேறுபாடுகளும் இந்த விதியையே உடையன. நடுத்தர அளவுடையவர் மிகக் குறைந்த திறமை உடையவரைப் போல் மூன்று நான்கு மடங்கு திறமையுடையவராயிருப்பர். அதுபோலவே ஒருவருடைய உச்சத் திறமை நீசத் திறமை போல் மூன்று மடங்கு அளவினதாயிருக்கும். இந்த உண்மைகளிலிருந்து அறியக்கூடியது யாதெனில், இயற்கைத் திறமைச் சோதனையைப் பயன்படுத்தாமல் ஒருவர் தொழில் தேர்வு செய்தால் அவர் தமக்கு மிகுந்த திறனுடைய தொழிலைத் தேர்வு செய்வது அருமையே என்பதாம்.

தொழில்பற்றிய சோதனைகள், இயற்கைத் திறமைச் சோதனைகள் என்றும், தேர்ச்சிச் சோதனைகள் என்றும் இருதிறத்தன. தேர்ச்சிச் சோதனைகளைப் பெரும்பாலும் முதலாளிகள் ஓரளவு பயிற்சி பெற்ற தொழிலாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்துவதால், அவை வாணிகச் சோதனைகள் என்றும் வழங்கப்பெறும். தேர்ச்சிச் சோதனைகளுள் சில இயற்கைத் திறமைகளைக் குறிப்பனவாகவும் இருக்கும். ஆனால் இயற்கைத் திறமைச் சோதனைகள் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு வேண்டிய திறமையைப் பெறுவதற்குரிய ஆற்றலைக் கண்டு பிடிப்பதற்கே பயன்படுத்தப் படுகின்றன. சூழ்நிலையினின்றும் பெறும் பொது அறிவு முழுவதையும் விலக்கிவிட்டு இயற்கைத் திறமைச் சோதனைகளைத் தனியாக வகுக்க முடியுமா என்று கேட்கக் கூடும். முழுவதையும் விலக்கிவிட முடியாதாயினும் கூடிய அளவு விலக்கி விடவே ஆராய்ச்சியாளர்கள் முயல்கிறார்கள்.

இப்போது இரண்டுவகையான இயற்கைத் திறமைச் சோதனைகள் பயன்பட்டு வருகின்றன. ஒருவகை, தொடர்புடைய தொழில்களைப் பற்றியதாகும். இதில் குமாஸ்தாத்தொழில் சோதனைகள், இசைத்திறமைச் சோதனைகள், பொறித்திறமைச் சோதனைகள், நூற் கல்விச் சோதனைகள் முதலியன அடங்கும். இந்தச் சோதனைகள் ஒரு குறிப்பிட்ட வேலைக்குரிய திறமையை அளந்து கூறுவனவல்ல. அவ்வாறு அளந்துகூறும் சோதனைகள் டைப் அடித்தல்,மோட்டார் கார் ஓட்டுதல். அச்சுக் கோத்தல், வாணிகம் செய்தல் போன்ற குறிப்பிட்ட தொழில்களைச் செய்வதற்குரிய இயற்கைத் திறமையைச் சோதிப்பதற்கு ஏற்றவையாகும்.

மற்ற உளவியல் சோதனைகளைப் பிரிப்பதுபோல் இயற்கைத் திறமைச் சோதனைகளையும் சொல்பற்றியன், சொல் பற்றாதன என்றும், தனிப்பட்டவரைப் பற்றியவை, குழுவினரைப்பற்றியவை என்றும் பிரிக்கலாம். சொல்லைப் பற்றாதனவற்றைச் 'செயல் சோதனை' என்றும் கூறுவர். ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லும்போது அது செயல் சோதனையாகும். குழுச் சோதனைகள் கால அளவு முறையை அடிநிலையாக வுடையனவாதலால் வேகச் சோதனைகள் என்று ஆய்விடுகின்றன. தனி நபர் சோதனைகளுக்குக் கால எல்லை அல்லது வேலை எல்லையை ஆதாரமாகச் செய்ய-