பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்த அழுத்தம்

43

இரத்தக் குழுக்கள்

தார். ஆனால், 1828-ல்தான் பாதரச அழுத்தமானி கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி 1887-ல் வான்பாஷ் என்பவரால் அமைக்கப்பட்ட நாடி அழுத்தமானி (Sphygmomanometer) எனப்படுவது. இக்கருவியில் ஒரு ரப்பர் பையிருக்கும். அதை இடது முழங்கைக்கு மேலே சுற்றி வைப்பர். அதில் இரண்டு குழாய்கள் உள்ளன. ஒன்று பாதரசக் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். மற்றொன்றன் மூலமாக ரப்பர் பைக்குள் காற்றைச் செலுத்துவர். அது கையிலுள்ள தமனியில் ஓடும் இரத்தத்தை ஓடவொட்டாமல் அழுத்தித் தடுக்கும். முற்றிலும் தடுத்துவிட்டால் மணிக்கட்டில் நாடித்துடிப்புக் காணமாட்டாது. அப்போது பாதரசம் நிற்கும் உயரத்தின் அளவு இரத்தத்தின் சுருக்க வழுத்த அளவாகும். அதன் பிறகு காற்றை நீக்கிவிட்டுப் பாதரசம் ஏறாமல் ஒரே இடத்தில் நிற்பதைக் கவனித்தால் அதுவே இரத்தத்தின் விரிவு அழுத்த அளவாகும். இந்த இரண்டு அழுத்தங்களின் வித்தியாசம் 'நாடி அழுத்தம்' (Pulse P.) எனப்படும். குழந்தைகளுடைய சுருக்க வழுத்தம் 100 மி.மீ. பாதரச உயரமாகும். இளைஞர்களுக்கு 120 மி.மீ. வரை இருக்கும். வயதானவர்களுக்கு அதற்கு அதிகமாகவும் இருக்கும். 150 மி.மீ. க்கு அதிகப்பட்டால் பேரழுத்தம்' (High P.) என்று கூறுவர். பொதுவாக விரிவழுத்தம் சுருக்க வழுத்தத்தில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். விரிவழுத்தம் 90-க்கு மேற்பட்டால் அதுவும் பேரழுத்தம் என்றே கருதப்படும்.

உடல் உழைப்பு, மூளை வேலை, உள்ளக் கிளர்ச்சி, சோர்வு, புகை குடித்தல் முதலியன இரத்த அழுத்தத்தை வேறுபடச் செய்யும். வயது ஆகும்போது தமனிகளின் மீள்சக்தி குறைவதால் இரத்த அழுத்தம்மிகும். கவலையும் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். குளிரில் நடப்பதாலும், சிறுநீரகத்தில் நோய் உண்டாவதாலும், நாளமில்லாச் சுரப்பிகளில் கோளாறுகள் நேர்வதாலும், தமனிகள் கடினமாவதாலும், நரம்புத் தளர்ச்சியாலும், இரத்த அழுத்தம் அதிகப்படும். உடம்பில் சூடு உண்டானாலும், நுரையீரலில் உண்டாகும் க்ஷயத்தாலும், சீரண உறுப்புக்களில் உண்டாகும் புற்று நோயாலும், இதய நோய்களாலும் இரத்த அழுத்தம் குறையும்.

இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சியிருந்தால் உப்பு பேதி மருந்து உட்கொண்டும், உணவு குறைவாக உண்டும், குறைவான வெப்பமுள்ள நீரில் குளித்தும், பொட்டாசியம் அயோடைடு அல்லது தைராய்டு சத்து ஆகியவற்றை உபயோகித்தும் இரத்த அழுத்தத்தை ஓரளவு குறைக்கலாம். இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சி அதிகரித்தால் இதயம் நின்றுபோயோ, அல்லது சிறுநீரகம் வேலை செய்வது நின்றுபோயோ, அல்லது சன்னிநோய் ஏற்பட்டோ மரணம் உண்டாகலாம்.

குறைந்த இரத்த அழுத்தம் அஞ்சவேண்டிய நோயன்று. நாட்பட்ட நோய் உடையவர்களுக்கும், நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும் இரத்த அழுத்தம் குறைவாயிருக்கும். ஆனால், அவர்கள் உடல் நலம் பெறும்போது இரத்த அழுத்தம் சரியான அளவுக்கு வந்துவிடும். பொதுவாகக் கூறுமிடத்து, குறைந்த இரத்த அழுத்தத்துக்காகத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் செய்யவேண்டியதில்லை.

இரத்த அழுத்தத்தை அறிவதைக்கொண்டு மருத்துவர்கள் தமனிகளின் நிலைமையையும், தைராய்டு, அட்ரீனல் சுரப்பிகளின் நிலைமையையும் அறிந்துகொள்வர். உள்ளக் கிளர்ச்சியை அறிந்துகொள்வதற்கு உளவியலார் இரத்தத்தின் விரிவழுத்தப் பரிசோதனை செய்கிறார்கள்.

இதுவரை கூறிய தமனி அழுத்தத்தைப்போல் சிரை அழுத்தம் (Venous P.) அளந்து பார்க்கப்படுவதில்லை. ஆயினும் சிரை அழுத்தத்தை அளப்பதற்குக்கேர்ட்னர் (Gaertner) என்பவர் ஒரு முறை வகுத்துள்ளார்.

இரத்தக் குழுக்கள் (Blood Groups): மணிதர்களுடைய உடலிலுள்ள இரத்தம் எல்லாம் ஒரே விதமாகத் தோன்றினாலும், அவற்றில் பலவகைகளுண்டு என்று கண்டிருக்கின்றனர். 1900-ல் கார்ல் லாண்ட்ஷ்டைனர் (Karl Landsteiner) என்பவர் வியன்னா நகரத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பொழுது A, B, O என்னும் மூன்றுவித இரத்தக் குழுக்களைக் கண்டுபிடித்தார். ஒருவனுடைய சிவப்பு இரத்த அணுக்களை வேறு ஒருவனுடைய ஊனீருடன் (Serum) சேர்த்தால், சில வேளைகளில் இரண்டும் கலக்காமல் கட்டியாக ஆய்விடுவதை அவர் கண்டார். இதைத் தொடர்ந்து ஆராய்ந்தபோது மனிதர்களுடைய சிவப்பு அணுக்களில் இரண்டு 'எதிர்த் தோற்றப் பொருள்' களும் (Antigen), ஊனீரில் அவற்றிற்கு ஏற்ற இரண்டு 'எதிர்ப்பொருள் 'களும் (Antibody) இருப்பது உறுதியாயிற்று. எதிர்த் தோற்றப் பொருள்களை A என்றும் B என்றும் அழைப்பர். எதிர்ப் பொருள்களை முறையே B என்றும் B என்றும் கூறுவர். ஒருவனுடைய இரத்தத்தில் ஒருவகை எதிர்த் தோற்றப் பொருள் காணப்பட்டால் அதற்கேற்ற எதிர்ப்பொருள் ஊனிரில் காணப்படமாட்டாது; காணப்பட்டால் இவைகளின் கலப்பினால் இரத்தம் கட்டியாகி மரணம் உண்டாகும். உதாரணமாக B எதிர்த் தோற்றப் பொருள் உடையவர் உடலில் β எதிர்ப் பொருள் இராது. a எதிர்ப் பொருள் தான் இருக்கும்.

இந்த ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு லாண்டஷ்டைனர் மக்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கிறார்.A எதிர்த் தோற்றப் பொருளுடையவர் A குழுவையும், B எதிர்த் தோற்றப் பொருளுடையவர் B குழுவையும், AB இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்களும் உடையவர் AB குழுவையும்,எவ்வித எதிர்த் தோற்றப் பொருளுமில்லாதவர் O குழுவையும் சேர்ந்தவராவர். O குழுவினரிடம் β a என்னும் இரண்டு எதிர்ப் பொருள்களும் காணப்படும், AB குழுவினரிடம் அந்த இரண்டும் காணப்படமாட்டா.

ஒருவருடைய இரத்தத்தை மற்றொருவர் உடலில் புகுத்த நேரும்போது இந்த இரத்தக்குழுப் பாகுபாட்டின் தேவை விளங்கும். ஒருவனுடைய உடலில் எந்த இரத்தத்தையும் புகுத்திவிடலாகாது. இரத்தத்தை எடுத்துச் சோதித்த பின்னரே அதைச் செய்வர்.

அண்மையில் AB தவிர M,N என்று வேறு இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்கள் இருப்பதாக 1927-ல் லாண்ட்ஷ்டைனரும் லெவீனும் (Levine) கண்டுபிடித்தார்கள். இறுதியாக 1940-ல் ரீசஸ் காரணி என்றRhபொருள் என்பது லாண்ட்ஷ்டைனர், வைனர் (Weiner) ஆகியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு அறிஞர்கள் புதிது புதிதாகக் கண்டு பிடித்ததன் பயனாக இப்போது கைவிரல் ரேகை மாதிரி எதிர்த் தோற்றப் பொருள்களின் வேறுபாடுகளும் மிகப்பல என்று தெரிய வருகிறது. ஆயினும் அறிஞர்கள் அவற்றை நான்கு நான்கு தொகுதிகளாக வகுத்து, அவற்றின் உதவிகொண்டு மக்களை 384 பிரிவினராகப் பிரித்துளர். இந்த இரத்தக்குழு முறையானது தந்தை-