பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தச் சோகை

44

இரத்தச் சோகை

யர் இன்னார் என்று துணிவதற்கும் பாரம்பரிய விதிகளின் விளக்கத்துக்கும் பெரிதும் துணை செய்வதாக இருக்கிறது.

இரத்தக்குழு முறையானது மானிட வியலிலும் பெரிதும் பயன்படுவதாக இருக்கிறது. இவ்வாறு முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் லூட்விக்ஹெர்ஜ்பெல்டு (Ludwig Herzfeld), ஹன்னா ஹெர்ஜ்பெல்டு (Hannah Herzfeld) என்போர். அவர்கள் சேனையில் மருத்துவர்களாயிருந்தபொழுது படையிலுள்ள பல நாட்டு வீரர்களுடைய இரத்தத்தை ஆராய்ந்து, ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் ஒவ்வொரு இரத்தக்குழு மிகுதியாகக் காணப்படுவதாகவும், ஐரோப்பாவில் மேற்கேயிருந்து கிழக்கே செல்லும்போது A எதிர்த்தோற்றப் பொருள் குறைந்தும், B எதிர்த் தோற்றப் பொருள் மிகுந்தும் காணப்படுவதாகவும் கூறினார்கள்.

இவர்களுடைய ஆராய்ச்சிகளைப் பின்பற்றிச் செய்யப்படுகின்ற பல ஆராய்ச்சிகளின் பயனாகக் கீழ்க் கண்ட முடிவுகள் காணப்பட்டுள ;

I ABO முறை:
A எதிர்த் தோற்றப் பொருள் கீழ்க்கண்ட பகுதிகளிலும் மக்களிடமும் அதிகமாகக் காணப்படுறது:
1. ஐரோப்பா. 2. மத்தியதரைக் கடல் நாடுகள். 3. மேற்குச் சீனா. 4. ஜப்பான். 5. ஆஸ்திரேலியன் ஆதிக்குடிகள். 6. வட அமெரிக்க இந்திய ஆதிக்குடிகளில் சில. 7. தென் இந்திய ஆதிக்குடிகளில் சில. 8. இந்திய வடமேற்கு எல்லைப்புற ஆதிக்குடிகளில் சில.
B எதிர்த் தோற்றப் பொருள் கீழ்க்கண்ட இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது: 1. மத்திய ஆசியா. 2. வட இந்தியா. 3. மத்திய ஆப்பிரிக்கா.

இது அமெரிக்க இந்தியர்கள், ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள், சில தென்னிந்திய ஆதிக்குடிகள் ஆகியோரிடம் காணப்படவே இல்லை.

II. M,N முறை: இந்த இரண்டு எதிர்த் தோற்றப் பொருள்களும் ABO மாதிரி அதிக வேறுபாட்டுடன் காணப்படாததால் இந்த முறை மானிடவியலுக்குப் பெரும் பயன் தருவதாயில்லை.

III. Rh முறை : Rh (எதிர்) : இது சாதாரணமாக 16% காணப்படும்; இந்த விகிதம் ஐரோப்பாவில் பெரும்பாகத்தில் காணப்படுகிறது. ஆனால் பாஸ்க்குகள் என்போரிடம் 33% சதவிகிதம் காணப்படுகிறது. இவர்களிடம் எதிர்த் தோற்றப் பொருளும் மிகுதியாகக் காணப்படுவதால் இவர்களே கிழக்கே இருந்து வந்தபொழுது Rh (எதிர்ப்) பொருளை ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்தவர்களா யிருக்கலாம் என்று மௌரன்ட் (Mourant) முதலிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவிலும் இந்தக் குழுமுறையைத் தழுவி ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இவற்றின் பயனாக A பொருள் தெற்கே திருவிதாங்கூரிலும், வடகிழக்கே அஸ்ஸாமிலும் அதிகம் என்றும், அவ்விரண்டிடங்களுக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் B பொருள் அதிகம் என்றும் தெரிகின்றது. எஸ். எஸ். ச.

இரத்தச் சோகை (Anaemia) : இந்த நோய் பல காரணங்களால் ஏற்படலாம். இதை இரண்டு பிரிவாக எடுத்துக்கொண்டால், ஒரு பிரிவில் இரத்தச் சிவப்பணுக்கள் சிறியனவாகவும், மற்றொரு பிரிவில் அவை பெரியனவாகவும் இருக்கும். சிவப்பணுக்கள் சிறியனவாக இருக்கும்பொழுது அவற்றை நுண்ணணுச் சோகை (Microcytic A.) என்று சொல்வர். பெரிய சிவப்பணு உள்ளதைப் பேரணுச் சோகை (Macro- cytic A.) என்பர். இரத்தச் சோகையில் சிவப்பணுக்களும் இரத்தத்திற்குச் செந்நிறம் கொடுக்கும் ஹீமொகுளோபினும் (Haemoglobin) இரத்தத்திலுள்ள நுண்தகடுகளும் (Platelets) வெள்ளணுக்களும் குறைவாக இருக்கும்.

இரத்தச் சோகைக்கு முதலாவது காரணம் உணவில் இரும்புச்சத்துக் குறைவாக இருப்பது. கீரைகளிலும், பச்சையாக உட்கொள்ளும் பதார்த்தங்களிலும் இரும்புச்சத்து இருக்கின்றது. இந்தியர்களுடைய உணவில் இரும்புச்சத்துக் கொஞ்சம் குறைவாகவே இருக்கின்றது. எனினும் வேறு நோய் இல்லாவிடின் இந்த உணவிலிருந்து கிடைக்கும் இரும்பே இரத்தச் சோகை வராமல் தடுக்கப் போதுமானது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயால் இரத்தம் போவதால் சாதாரண உணவிலிருந்து கிடைக்கும் இரும்புமட்டும் போதுவதில்லை. அவர்கள் அதிகமான இரும்புள்ள உணவுப் பொருள்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் சேர்க்காவிட்டால் இரும்பு சேர்ந்த பொருளை அவர்களுக்கு மருந்தாகவாவது கொடுக்கவேண்டும். இரத்த உற்பத்திக்கு முக்கியமாக வேண்டியவை வைட்டமின் சீ, தைராயிடு செம்பு, மாங்கனீஸ் சத்துக்கள். இவற்றில் முக்கியமான வைட்டமின் சீ வாடாத காய்கறிகளில் இருக்கிறது. வெகு நாளைக்குப் பசுங்காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் இந்த வைட்டமின் சீ இல்லாமல் போய் இரத்தச் சோகை ஏற்படலாம்.

இரும்போடு கலப்பாகச் செம்பு, மாங்கனீஸ் இருக்கும். அதனால் இரும்பை மருந்தாக உபயோகிக்கும் பொழுது இவைகளும் அதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இவைகளைத் தனியாகக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாமற் போய்விடுகிறது. இருந்தபோதிலும், இரும்பு மாத்திரை செய்பவர்கள் இந்த உலோகங்களையும் சிறிதளவு கலந்துகொள்ளுகிறார்கள்.

இவை எல்லாவற்றிலும் இரும்பே ஹீமோகுளோபினுக்கு ஆதாரமான சத்து. இரும்பு இல்லாவிடின் இந்தப் பொருளே உண்டாகாது.

இந்தியாவில் இந்த விதமான இரத்தச்சோகை கொக்கிப் புழுவினால் (த.க.) ஏற்படுகிறது. இந்தப் புழு சிறிய குடலில் இருந்துகொண்டு குடலைக் கடிக்க, அதிலிருந்து இரத்தம் கசிவதனால் நாளடைவில் இரத்தச் சோகை உண்டாகிறது. மூலம், குடலில் புண், வயிற்றில் புண் இவற்றிலிருந்து தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் போய்க்கொண்டே இருந்தாலும் இந்த நோய் உண்டாகலாம்.

எக்காரணத்தால் சோகை ஏற்பட்டது என்று கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை செய்யவேண்டும். இருந்தாலும் முக்கியமாக இரும்பு குறைவாக இருப்பதனால் இரும்புச் சத்துள்ள உணவுகளையும் மருந்துகளையும் கொடுக்கவேண்டும். சோகை அதிகமாக இருந்தால் இரும்புச் சத்தை உட்கொண்டு, அதிலிருந்து இரத்தம் உற்பத்தியாகும் வரையில் காத்திருக்க முடியாத நிலையில், தகுந்த இரத்தம் ஊட்டல் (Blood transfusion) (த. க.) மிகவும் நல்லது. புழுக்களினால் ஏற்படும் சோகைக்கு முதலில் கொஞ்சநாள் இரும்புச் சத்துள்ள பொருள்களைக் கொடுத்து, சோகை சிறிது தணிந்தவுடன் புழுவைப் போக்கத் தகுந்த மருந்தைக் கொடுத்தால் சோகை குணம் ஆகும்.

பேரணுச் சோகை : இதற்கு முக்கிய காரணம் ஈரலில் உண்டாக வேண்டிய சில பொருள்கள் உடம்பில் இல்லாமற் போவதே. இரத்த ஆக்கக் காரணி (Haemo•