பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்த போளம்

45

இரத்தம்

poietic factor) என்னும் சத்து உடம்பில் இருந்தால்தான் சிவப்பணுக்கள் உண்டாகும். இந்தச் சத்து உண்டாவதற்கு நாம் உட்கொள்ளும் உணவில் புறக்காரணி (Extrinsie factor) என்னும் சத்து இருக்கவேண்டும்; நமது இரைப்பையில் அகக்காரணி (Intrinsic factor) என்னும் மற்றொரு சத்து இருக்க வேண்டும். இந்தப் புற அகக் காரணிகள் இரண்டும் சேர்ந்தால்தான் இரத்த ஆக்கக்காரணி உண்டாகும். புறக்காரணி இறைச்சியிலும் அதைப் போன்ற பொருள்களிலும் உண்டு. இரத்த ஆக்கக் காரணி ஈரலில் சேர்த்து வைக்கப்படும். எவ்வெப்போது வேண்டுமோ அவ்வப்போது அது உபயோகப்படும். கடுரத்தச் சோகை என்னும் (Pernicious A) நோயில் வயிற்றில் இருக்கவேண்டிய அகக்காரணிச் சத்து இருப்பதில்லை. இந்தியாவில் இந்த விதமான சோகை மிகவும் குறைவு. இந்த நாட்டில் பேரணுச் சோகைக்கு முக்கியமான காரணம் கிராணி (Sprue) நோயே. இதற்கு ஈரலை உணவாகக் கொடுக்கலாம். அல்லது ஈரலிலுனுடைய சத்தை எடுத்து ஊசிபோடலாம். சோகை நீங்குவதற்கு 250 கிராம் ஈரல் கொடுக்கவேண்டும். அல்லது ஈரலினுடைய சத்தை எடுத்துக் கொடுப்பதென்றால் 12 1/2 க.செ.மீ. ஒரு நாளைக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே ஊசிபோடுவதானால் 2 க. செ.மீ. கொடுக்க வேண்டியிருக்கும். ஈரலுக்குள்ள இந்தச் சக்தி சிவப்புப் பொருள் ஒன்றினால் உண்டாகிறதென்று கருதப்படுகிறது. இந்தப் பொருளுக்கு வைட்டமின் பீ 12 என்று பெயர். இது 250 கிராம் ஈரலில் ஒரு மைக்ரோகிராம் அளவே இருக்கிறது. அதாவது ஒரு டன் ஈரலில் ஒரு சுண்டைக்காய்ப் பருமன் தான் வைட்டமின் பீ 12 இருக்கின்றது. வைட்டமின் பீ 12-ஐ ஈரலிலிருந்து செய்வது என்றால் விலை மிகவும் அதிகமாகும். ஆனால் செப்டோமைசின் செய்யும்பொழுது அதனுடைய உடன் விளைவாக (Byproduct) இது உண்டாகிறது. இப்படி எடுக்கும் பீ 12 இப்பொழுது உபயோகப்படுத்தப்படுகிறது. சாதாரண ஈரல் சத்தைவிட பீ 12 ஒன்றும் விசேஷமில்லை. ஏனென்றால் பீ 12 போல் மற்றும் வேறு சத்துக்கள் ஈரலில் இருக்கலாம். அவைகளை நாம் பயன்படுத்தாமல் போய்விடலாம். ஆனால் ஈரல்சத்தை ஊசி போட்டால் சில நோயாளிகள் உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை. அப்பேர்ப்பட்டவர்களுக்கு பீ 12-ஐ உபயோகப்படுத்தலாம். சோகை அதிகமாக இருக்கும்பொழுது முதலில் 20 மைக்ரோகிராம் பீ 12 ஆக ஒவ்வொரு நாளும் கொடுத்துப் பிறகு வாரத்திற்கு இருமுறை கொடுத்து, அப்பால் வாரத்திற்கு ஒரு முறையாகக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

சில பெண்களுக்குக் கருப்பம் உண்டானதும் பேரணுச் சோகை ஏற்படலாம். அவர்களுக்கும் ஈரலினுடைய சத்தைக் கொடுக்கலாம். அல்லது வைட்டமின் பி 12 ஊசி போடலாம். ரெ. சு.

இரத்த போளம் ஒருவகை வாசனைப் பண்டம். குங்கிலியம் என்னும் பொருளில் ஒருவிதம்.

காமிபோரா முகுள்
(குங்கிலியக் கிளுவை)
கிளை, இலை, காய் முள் தெரிகின்றன

கிளுவைச்சாதி மரங்களில் சிலவற்றில் உண்டாகும் பிசின். இது சாம்பிராணிபோலப் புகைக்கும் திரவியமாகப் பயனாகின்றது. வேறு வாசனைத் திரவியங்கள் செய்வதற்கும் மருந்தாகவும் இதை உபயோகிக்கின்றனர். கிளுவைச்சாதி மரங்கள் காமிபோரா (Commiphora) என்னும் சாதியைச் சேர்ந்தவை. இவை பால்சமொ டெண்ட்ரான் எனவும் சொல்லப்படும்.

சோற்றுக் கற்றாழை மடலிலிருந்து எடுக்கும் பால் சாதாரணமாகக் கரியபோனம் அல்லது மூசாம்பரம் என்னப்படும். அதையும் இரத்தபோளம் என்பர்.

இரத்த பிளாஜெல்லேட்டுக்கள் (Blood Flagellates) மயிரிழை போன்ற சாட்டைகளை உடையனவாகவும், அவற்றைச் சுழற்றுவதால் இடம் பெயர்ந்து இயங்குவனவாகவு முள்ள ஒருவகை புரோட்டோசோவா. இவை ஓரணு விலங்குகள். இவை மனிதனுடைய இரத்தத்திலும் மாடு, குதிரை முதலிய விலங்குகளின் இரத்தத்திலும் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து, அவனுக்கும் அந்த விலங்குகளுக்கும் மிகக் கொடிய நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றில் முக்கியமானவைகளில் ஒன்று திரிப்பானசோம் (Trypanosome) என்பது. தெள்ளுப் பூச்சி முதலிய இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிக்களால் இவை ஒரு விலங்கின் உடலிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகின்றன. உறக்க நோய் (Sleeping Sickness), கருங் காய்ச்சல் (Kala Azar) என்பவை இரத்த பிளாஜெல்லேட்டுக்களால் உண்டாகின்றன. பார்க்க: புரோட்டோசோவா. திரிப்பானசோம். பி. என். க.

இரத்தம் உடம்பை அறுத்தால் கசியும் சிவந்த பசைபோன்ற திரவமாகும். நூறு இராத்தல் நிறையுள்ள உடலில் ஏழு இராத்தல் நிறையுள்ள இரத்தமிருக்கும். அளந்துபார்த்தால் மூன்று முதல் நான்கு படிவரை இருக்கும். அது பிளாஸ்மா என்னும் திரவமும் அதில் மிதக்கும் உயிரணுக்களும் சேர்ந்ததாகும். இந்த உயிரணுக்கள் சிவப்பு வெண்மை என இருவகைப்படும். சிவப்பணு நடுவில் கனம் குறைந்த வட்டமான தட்டுப்போலிருக்கும். ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் 60 இலட்சம் சிவப்பணுக்கள் காணப்படும். இந்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்னும் பொருள் நிறைந்து நிற்கும். ஹீமோகுளோபின் என்பது இரும்பும் புரோட்டீனும் சேர்ந்ததாகும். அதுவே சிவப்பு நிறத்துக்குக் காரணம். இந்தச் சிவப்பு அணுக்களே சுவாசப்பைக்கு வரும் ஆக்சிஜன் வாயுவை உடம்பின் திசுக்கள் அனைத்துக்கும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, அங்குள்ள கழிவுப் பொருளாகிய கார்பன் டை ஆக்சைடைச் சுவாசப்பைக்குக் கொண்டு செல்லுகின்றன. ஆக்சிஜன் கொண்டுபோகும் இரத்தம் சிவப்பாகவும், கார்பன் டை ஆக்சைடு கொண்டு போகும் இரத்தம் கருஞ்சிவப்பாகவும் இருக்கும்.

வெண்மையணுக்கள் ஒரு மில்லி மீட்டர் இரத்தத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைக் காணப்படும். நோய்க் கிருமிகள் உடம்புக்குக் கேடு செய்யாதபடி இந்த அணுக்கள்