பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராச்சியத்தின் அதிகார எல்லை

55

இராச்சியத்தின் அதிகார எல்லை

திட்டத்தின்படி மொத்தச் செலவில் பாதிக்குமேல் ராணுவத்திற்காகவே ஆகிறது. இதனால் இராச்சியத்தின் அடிப்படையான கடமை அது நிலைபெற்றிருப்பதற்கு ஆவன செய்வதே என்பது புலனாகும்.

வெளியிலிருந்து ஏற்படக்கூடிய அபாயங்களினின்றும் நாட்டைக் காப்பதோடு, உள்நாட்டு அமைதியைக் காப்பதும் இராச்சியத்தின் கடமை என்று கருதப்பட்டு வந்துள்ளது. உள்நாட்டு ஒழுங்கையும் அமைதியையும் சட்டவரம்பிற்குட்பட்டுக் காப்பதற்கு உதவும் முக்கியமான இரு ஸ்தாபனங்கள் சட்டமன்றங்களும், போலீஸுமேயாம். உள்நாட்டுக் குழப்பங்களும், கொலை, களவு முதலிய குற்றங்களும் நடவாமல் பார்த்துக்கொள்வது போலீஸின் கடமையாகும். நகரங்களில் நடக்கும் களவு முதலிய குற்றங்களைக் கண்டு பிடித்துக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக நகர சோதனை செய்யும் காவலாளிகள் முற்காலத்தில் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இக்காவலாளிகளின் வேலைகளைத் தாங்களே மேற்பார்வையீட்டு நகரசோதனை செய்த அரசர்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். நகரத்திலுள்ள மக்களுக்கே நகரக் காவலின் பொறுப்பு சில நாடுகளில் இருந்து வந்திருக்கிறது என்பதையும் வரலாற்று வாயிலாக அறிகிறோம். இவ்வேற்பாடுகளெல்லாம் பண்டைய சமூக அமைப்புக்களுக்குப் பொருந்துவனவேயன்றிப் பிற்காலத் தற்காலச் சமூக அமைப்புக்கட்கு ஏற்றவையல்ல என்பது வெளிப்படை. ஆதலால் உளவு கண்டுபிடிக்கும் போலீஸ் அமைப்பு விரிவாக ஏற்படுத்தப்பட்டுத் தற்கால இராச்சியங்களில் காணப்படும் அளவிற்குப் பெருகியுள்ளது. தேவைக்கேற்பப் போலீஸின் அதிகாரமும் விரிவடைந்துள்ளது. குற்றம் நடப்பதற்குமுன் தடுப்பதும், குற்றம் நடந்துவிட்டபின் கண்டுபிடித்து நீதிமன்றங்களுக்குமுன் குற்றவாளிகளைக் கொண்டுவருவதும் ஆகிய இருவகைப் பொறுப்புக்களும் போலீஸுக்கு உண்டு. முதன்முதலில் இக்கடமைகள் நகராட்சிக் கழகங்களுடைய அலுவல்களாக இருந்தன; போலீஸ் அலுவல்களைச் சரிவரச் செய்ய வேண்டுமாயின், அதனோடு தொடர்புடைய நீதி, நிதி, நிருவாகம் முதலிய தொழில்களையும் ஓரளவு ஆற்றவேண்டியது அவசியமாதலால் கிராமக் காவலாளிகளிடம் இவ்வதிகாரங்களும் இருந்து வந்தன. இன்றும் கிராமப் போலீஸார்கள் இத்தொழில்களைச் செய்துவருவது யாவரும் கண்டது.

இராச்சியம் என்பது சமூகத்திற்கு ஒருவகை நன்மையைச் செய்வதற்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனம் என்று கிரேக்கர் கருதினர். அவர்களுடைய பண்பாட்டிற்கேற்ப அறக்கோட்பாடுகளுக்கும் அறிவுமுறைக்கும் தக்க வாழ்க்கையைச் சாத்தியமாக்குவதே இராச்சியத்தின் வேலை என்று அவர்கள் கருதினர். அதாவது, சமய, ராணுவ, சமூகப் பிரச்சினைகள் யாவற்றையும் பூரண ஆதிக்கமுறையில் மேற்கொண்டு அலுவல்களை ஆற்றுவதையே இராச்சியத்தின் முக்கியத் தொழிலாகக் கருத்தினார்கள். மக்களுடைய வாழ்க்கையின் எப்பகுதியும் இராச்சியத்தின் மேற்பார்வைக்குப் புறம்பாவதில்லை என்ற கோட்பாடு அவர்களுக்கு இருந்தது.

ஆயினும் பிற்காலத்தில் சமூகத்திற்கும் இராச்சியத்திற்கும் வேறுபட்ட அதிகாரங்கள் தோன்றலாயின. இராச்சியத்தின் அதிகாரங்கள் மிகக் குறைவாக இருக்கக்கூடிய நிலையில் சமூகம் தேக்க நிலையை (Stag -nation) எய்திவிட்டது என்று கூறலாம். இராச்சியம் சமூக நலனுக்காகப் பல காரியங்களையும் செய்வதைத் தனது கடமையாகக் கருதினால் இராச்சியத்தின் அதிகாரம் விரிவடைவதோடு சமூகத்தின் தன்மையும் மாறும்.

ஐரோப்பிய வரலாற்றின் இடைக்காலத்தில், கிறிஸ்தவ மதம் பரவிவந்த போது அக்கண்டத்து மக்களிடையே ஏறத்தாழ ஒரேவிதமான பண்பாடும் நிலவத் தொடங்கிற்று. இடைக்காலத்தின் கடைப்பகுதியில் சமயச் சீர்திருத்தமும் மறுமலர்ச்சி இயக்கமும் தோன்றத் தொடங்கவே, எல்லா ஐரோப்பியர்களுடைய குறிக்கோள்களும் ஏறத்தாழ ஒன்றுபோலவே அமையத் தொடங்கின. சமூக அமைப்பு முறையில் படைமானியத் திட்டமும். சமயத் துறையில் கிறிஸ்தவமும் ஐரோப்பிய நாகரிகத்தை ஒருதுறைப்படுத்த உதவின. ஆயினும் கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் நன்கு முன்னேறிய பிறகு, சமயத் தலைவர்களுக்கும் இராச்சியத் தலைவர்களுக்கும் பிணக்கு ஏற்பட்டு இராச்சியத்தின் அதிகாரம் மிகுந்ததா, சமயத் திருச்சபையின் அதிகாரம் மிகுந்ததா என்னும் பிரச்சினை முன்னணிக்கு வந்தது. படைமானியத் திட்டத்தால் பொருளாதாரத் துறையிலும், சமய ஆதிக்கத்தால் சமூக சமயத்துறைகளிலும் இராச்சியத்தின் அதிகாரம் குறையத் தொடங்கியது. அரசனே கடவுளின் பிரதிநிதி என்று கூறிய தெய்விக உரிமைக் கொள்கையாலும், சமயத் துறையைத்தவிர ஏனைய எல்லா விஷயங்களிலும் அவனுக்குக் குறைவற்ற அதிகாரம் உண்டு என்று மாக்கியவல்லி முதலிய அரசியல் அறிஞர்கள் கூறிய கொள்கையாலும் இராச்சியத்தின் அதிகார எல்லை ஓரளவு விரிவடைந்தது. இங்கிலாந்தில் ஏற்பட்ட பிராட்டெஸ்டென்டு சமயச் சீர்திருத்தத்தின் விளைவாக இராச்சியத்திற்குச் சமயத் திருச்சபை மீதும் அதிகாரம் ஏற்பட்டது. படைமானியத் திட்டம் தொழிற் புரட்சியால் சிதைந்தது. தனி மனிதர்களின் பொருளாதார நிலை மாறிற்று. அவர்கள் படைமானியப் பிரபுக்களுக்கு உட்பட்டிருந்த பொருளாதார நிலை மாறி இராச்சியத்தின் அதிகாரத்திற்கு உட்படலாயினர். தொழிற்புரட்சி காரணமாக மக்களுக்குப் பொருளாதாரத் துறையில் ஓரளவு சுதந்திரம் கிட்டிற்று என்றே சொல்லலாம்.

இராச்சியத்தின் அதிகார எல்லையை நிருணயிப்பதில் எக்காலத்திலும் உள்ள ஒரு முக்கியமான கேள்வி, மக்களுடைய வாழ்க்கையில் இராச்சியம் எந்த அளவிற்குத் தலையிடலாம் என்பதேயாம். மக்களுக்குச் சுதந்திரமும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும். சுதந்திரமாக அவர்கள் வாழவிரும்பும் துறைகளில் தலையிடாமலும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையளித்தும் ஆட்சிபுரிவதே இராச்சியத்தின் அலுவலாகும் என்பர். அவ்வாறாயின் அவ்விரு பகுதிகளுக்குமிடையே எல்லைக் கோட்டை எவ்விடத்தில் அமைப்பது?

"இராச்சியம் என்னும் ஸ்தாபனம் மனிதர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான சில காரியங்களைச் செய்வதற்காகவே ஏற்பட்டிருக்கிறது. மக்களுடைய சமூக அறிவும் சமூக அமைப்பின் திறனும் மிகவும் சிறந்த முறையில் அமைந்துவிடுமாயின் இராச்சியத்திற்கு அலுவலில்லை. இராச்சியம் இருக்கும் நிலைமையே இயற்கைக்கு விரோதமான நிலை. இராச்சியம் உலர்ந்த சருகு போல உதிர்ந்துவிட்ட பிறகுதான் உண்மையான மக்கள் வரலாறு தொடங்குகிறது" என்றார் மார்க்ஸ். இது லட்சியவாதக் கம்யூனிசத்தின் கொள்கை. இக்கொள்கை இராச்சியத்தின் தேவை அல்லது தேவையின்மையைப் பற்றியே கருதுகிறது. ஆனால் இராச்சியம் சமூக நலன்களுக்கு விரோதி என்பது வேறொருகொள்கையாகும். அக்கொள்கைப்படி, ஒரு கூட்டத்-