பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராச்சியத்தின் அதிகார எல்லை

57

இராச்சியத்தின் அதிகார எல்லை

இப்படியே வரலாற்று முறையில் நோக்கும்போதும் இராச்சியம்முற்காலத்தில் எல்லா நாட்டிலும்ஒரே வகையாக அமைந்திருக்கவில்லை என்பது தெளிவு. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரீஸ் முதலிய நாடுகளில் நகர இராச்சியம் என்னும் ஒருவகை இராச்சிய முறை இருந்துவந்தது. அக்காலத்தில் மனிதர்கள் சிறு சிறு கூட்டங்களாகவும் தொகுதிகளாகவும் வசித்துவந்தார்கள். வட இந்தியா, சீனா, எகிப்து, கிரீஸ், ரோம் முதலிய இடங்களில் நகரங்களே தனி இராச்சியங்களாயிருந்து வந்தன. நகர இராச்சியம் என்பது ஒரு நகரமும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள சில கிராமங்களும் நிலங்களுமாம். ஒவ்வொரு நகரமும் தனக்குள்ளே ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நகரத்தின் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும். நகர இராச்சியத்தின் அலுவல்களைக் கவனிக்க ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சபை ஒன்றிருக்கும். ஆகையால் நகர இராச்சியங்களைப் பெரும்பாலும் ஜனநாயக முறையில் நிருவகிக்கப்பட்ட இராச்சியங்கள் என்றே கருதவேண்டும். கிரீஸ் தவிர மற்ற நாடுகளில் நகர இராச்சியங்கள் அரசுகளிலும் பேரரசுகளிலும் அடங்கி மறைந்து போயின. கிரீஸில் தனித்தனி இராச்சியங்கள் தீவுகளிலும் குன்றுகளைச் சுற்றியும் அமைந்திருந்ததால் அவை பெரிய இராச்சியங்களாக மாறவில்லை.

கிரேக்க நகர இராச்சியங்கள் மிகச் சிறியவை, சுய தேவைக்கான விவகாரங்களை அவை பூர்த்தி செய்து கொள்ளக் கூடியைவகளாயிருந்தன. குடிமக்களில் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டு இராச்சிய விஷயங்களில் அக்கறை கொள்ளக்கூடிய அளவிற்குச் சிறிய அளவினவாகவும் அமைந்திருந்தன. பெண்களும், குழந்தைகளும், அடிமைகளும் குடிமக்களுக்குள்ள உரிமை பெறாதவர்கள். குடிமை பெற்றிருந்த ஆண் மக்களைவிட அடிமைகள் பன்மடங்கு மிக்க எண்ணிக்கையுடையவர்களாயிருந்தனர். ஆதலால் இராச்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் குடிமையுரிமையில்லாதவர்கள். ஆகவே-நகர இராச்சியம் சிறுபான்மையோர் இராச்சியமாகவே இருந்தது.

ரோமானிய நகர இராச்சியத்தில், அரசியல் விஷயங்களைக் கவனிப்பதற்கென்று ஒரு சிலரே இருந்தனர். கிரேக்கர்களுடைய முக்கியமான கோட்பாடு சுதந்திரம்; ரோமானியர்களுடைய முக்கியமான கோட்பாடு கட்டுப்பாடு அக்கட்டுப்பாட்டுணர்ச்சியால்ரோமானியர்கள் இத்தாலி முழுவதையும் வென்றனர். பரந்த வொரு பேரரசையும் நிறுவினர். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காக் கண்டங்களின் பகுதிகள் அவர்களுடைய பேரரசிற்குள் அடங்கியிருந்தன. கிரேக்கர்களும் தங்கள் காலத்தில் சாம்ராச்சியத்தை ஆண்டவர்கள்தாம். ஆயினும் தாய்நாட்டவர்களுக்கும் சாம்ராச்சிய நாட்டவர்களுக்கும் வேறுபாடு மிகுகியாயிருந்தது. அரசியல் அதிகாரம் முழுவதும் கிரேக்கர்களிடம் இருந்தது. ஆனால் ரோமானியர்கள் தங்கள் குடிமையைப் பேரரசின் பல பகுதிகளிலிருந்தவர்களுக்கும் சிறிது சிறிதாக அளித்தனர். கி.மு.89-ல் சுதந்திர இத்தாலியர்களெல்லோரும் ரோமானியக் குடிகளாயினர். கி.பி. 212-ல் ரோமானியப் பேரரசில் இருந்த எல்லாச் சுதந்திரக் குடிகளுக்கும் குடிமை உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைகள் அக்காலத்தில் நன்கு வளர்ச்சியடையாமையால் பேரரசின் பல்வேறு பாகங்களில் இருந்த மக்களுக்கு ரோமில் பிரதிநிதித்துவம் இல்லை. நாளடைவில் ஜனநாயகத்தின் அறிகுறிகள் குறைந்துபோய்ப் பேரரசின் எதேச்சாதிகாரம் வளர்ந்தது.

கிரேக்கர்கள் நகர இராச்சியங்களையே தங்களுடைய அரசியல் அளவைகளாகக் கொண்டிருந்தனராயினும், தமக்குப் பொதுவான தேசிய நாகரிகத்திற்குப் பாரசீகர் போன்ற அன்னியர் படையெடுப்பால் அபாயம் நேரிடுங்கால் ஒன்றுசேர்ந்து அதை எதிர்த்துள்ளார்கள். ஒவ்வொரு சமயத்தில் கூட்டாட்சி அரசாங்கம் அமைத்துள்ளனர். சில நகர இராச்சியங்கள் பிற ஊர்களிலும் தீவுகளிலும் ஏகாதிபத்திய ஆட்சி செலுத்தியதுண்டு. எனினும் இன்று வழங்கும் தேசியம் அவர்கள் அறிந்ததன்று.

ரோமானியப் பேரரசில் தேசிய ஐக்கிய உணர்ச்சி பல நாடுகளிலும் ஏற்படாமைக்குக் கல்விப் பெருக்கமின்மையும், பேரரசின் பல்வேறு பாகங்களுக்கும் எளிதில் சென்றுவரக்கூடிய போக்குவரத்துச் சாதனங்களின்மையும் முக்கியமான காரணங்களாம். பேரரசு காலத்தில் இராச்சியத்தின் அதிகாரம் சட்டப்படி மிகுந்திருந்தது.

இடைக்காலத்தில் ஏற்பட்ட படைமானியத் திட்டம் இராச்சியத்தின் அதிகாரத்தைச் சட்டப்படி மிகுவித்ததாயினும் நடைமுறையில் குறைந்தது. இத்திட்டப்படி நிலச்சுவான்தாரரான பிரபுவுக்கும் வேளாண்மை, கூலி, போர்த்தொழில் முதலியன செய்யும் ஆட்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் இருந்தது. அந்த ஒப்பந்தப்படி ஆட்கள் பிரபுவுக்கு ஆட்பட்டவர்களேயன்றி அரசனுக்கோ நாடு முழுவதும் அடங்கிய வேறு பெரிய ஸ்தாபனங்களுக்கோ நேரிடையாக ஆட்பட்டவர்களல்லர். ஆதலால் பெரும்பான்மை மக்களுக்குத் தங்கள் ஊர் அல்லது கிராமத்தைப்பற்றிய ஊக்கம் மிகுந்திருந்ததேயன்றி நாட்டைப்பற்றிய அக்கறை ஏற்படவில்லை. நாட்டுச் சட்டம் என்று பொதுவிதிகள் ஏற்படாமல் ஆங்காங்கு அமலிலிருக்கும் தனித்தனிப் பழக்கங்கள் மூலம் தொடர்புகள் நிருணயிக்கப்பட்டமையால் தேசிய உணர்ச்சி வளரவில்லை. அதற்கேற்ற ஐக்கிய உணர்ச்சி ஏற்படுவதற்குச் சாதகமான நிலைமையும் உண்டாகவில்லை.

15.16ஆம் நூற்றாண்டுகளிலேதான் ஐரோப்பாவில் தேசியம் தோன்றிற்று. நாடு முழுவதும் ஒரே சட்டம் ஏற்பட்டும், தேசிய உணர்ச்சி ஏற்படுவதற்குச் சில தடைகள் இருந்தன. இவற்றில் முக்கியமானது ஐரோப்பா முழுவதும் ஒரே கத்தோலிக்க மதம் பரவியிருந்ததேயாம். இங்கிலாந்தில் நாட்டுமொழி நன்கு வளர்ந்ததும் சமயச் சீர்திருத்தத்தின் பயனாகப் பிராட்டெஸ்டென்டுச் சமயம் ஏற்பட்டதும் இங்கிலாந்தில் தேசிய வளர்ச்சிக்கு அடிகோலின. ஏறத்தாழ இதே சமயத்தில் (16 ஆம் நூ.) பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் தேசிய இராச்சியங்கள் உதித்தன. உள்நாட்டு யுத்தத்திற்கும் 1688 புரட்சிக்கும் பிறகு இங்கிலாந்தில் தோன்றிய தேசிய இராச்சியம் மேலும் வலுப்பெற்றது.

முதலில் தேசிய உணர்ச்சி நாட்டு மன்னர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட போதிலும் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இத்தேசிய இராச்சியங்கள் ஜனநாயக முறையில் அமையத் தொடங்கின.குடிமக்களில் பெரும்பாலோர் இராச்சிய விவகாரங்களில் தேர்தல் சமயங்களில் வோட்டளிப்பதன் மூலம் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தேசியத்திற்கு மதிப்பு வளர்ந்துகொண்டே வந்தது. தேசியத்தின் வரலாற்றை

ஐரோப்பியர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிற நாட்டவர்களும் தேசிய உணர்ச்சி பெறலாயினர். இவ்வாறு தேசியம் என்பது போற்றத்தக்க ஓர் அரசியல்

8