பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராச்சியத்தின் தன்மை

58

இராச்சியத்தின் தன்மை

உணர்ச்சி என்று பலராலும் கருதப்பெற்றது. இராச்கியம் தேசிய இராச்சியமாயிற்று.

அயர்லாந்து, இந்தியா முதலிய நாடுகளில் தேசிய உணர்ச்சி மிகுந்ததால் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்குக் கொள்கையளவிலும் நடைமுறையிலும் பல காரணங்களால் எதிர்ப்புத் தோன்றிற்று. நாட்டுப்பற்று என்பது தலப்பற்றை (Parochialism) விடச்சிறந்தது என்னும் கொள்கை தோன்றி வளரலாயிற்று. பல சமயங்களும் மொழிகளும் பழக்கவழக்கங்களும் சாதிகளும் பல்கிக் கிடக்கும் ரஷ்யா, இந்தியா முதலிய பெரு நாடுகளிலும் நாட்டுப்பற்றுத் தோன்றிற்று. 20ஆம் நூற்றாண்டில் நாட்டுப் பற்றின் அதிதீவிரமான தோற்றமாக நாசிச, பாசிசக் கொள்கைகள் தோன்றின. தலையிடாமை. கூட்டுத்துவம் என்னும் இருவேறு கொள்கைகளும் ஒரேசமயத்தில் தலைதூக்கி நிற்கும் தற்காலத்தில் தனித்துவம், ஜனநாயகம் என்பவற்றின் பெயரால் இராச்சியத்தின் அதிகாரத்தைக் குறைத்து நிருணயம் செய்யும் நாடுகள் என்றும் ,கூட்டுத்துவம் சோஷலிசம், பொருளாதாரத் திட்டமிடல், சமூக நல இராச்சியம் முதலியவற்றின் பெயரால் இராச்சியத்தின் அதிகாரத்தை மிகுவித்துத் தனி மனிதனின் சுதந்திரத்தைக் குறைத்து நிருணயம் செய்யும் நாடுகள் என்றும் இரு வகையாக உலகத்திலுள்ள சுதந்திர நாடுகளைப் பகுத்துக் கூறலாம். ரா. பா.

இராச்சியத்தின் தன்மை : சமூகம் பரிணாம முறையில் வளர்ந்து வந்திருக்கும் ஓர் அமைப்பு. இவ்வளர்ச்சியில் ஒரு நிலையில் தோன்றியது இராச்சியம் என்னும் ஸ்தாபனம், (இராச்சியத்தின் தோற்றத்தைப்பற்றியும் இராச்சியத்தின் அதிகார எல்லையைப் பற்றியும் தனிக்கட்டுரைகள் பார்க்க). இராச்சியத்தின் பண்புகளைப்பற்றி ஆராயுங்கால் இரண்டு தன்மைகள் வெளிப்படுகின்றன. 1. இராச்சியத்தின் ஆதிபத்தியத்திற்கு மிஞ்சிய அதிகாரம் இல்லை; தன்னினும் உயர்ந்த அதிகாரமுடைய நிலையமொன் றிருப்பதை அது ஏற்றுக்கொள்ளாது (ஆதிபத்தியக் கோட்பாடு த.க.). 2. இராச்சியத்தின் பகுதிகளாக நாம் அறியும் உறுப்புக்கள், அரசாங்கம், அரசன், அமைச்சர் சபை, பார்லிமென்டு என்பவை. இவற்றிற்குப் பதிலாக வேறு வகையாக அமைக்கப்பட்டு, வேறு சில அதிகாரங் களோடும் வேறு பெயர்களோடும் சிலபகுதிகள் நிறுவப்பட்டிருப்பினும் அவையும் இராச்சியத்தின் பகுதிகளே யாம். இராச்சியமும் மக்கள் சேர்ந்து வாழ்வதற்கு உதவும் ஒரு பெரிய குழுவேயாகும். ஆயினும் இராச்சியத்திற்கும் ஏனைய சங்கங்களுக்கும் வேறுபாடு யாதெனில், ஏனைய சங்கங்கள் எல்லாம் இராச்சியத்தின் ஆதிபத்தியத்திற்கு அடங்கியிருப்பவை. ஆனால் இராச்சியம் வேறொன்றின் ஆதிபத்தியத்திற்குட்படாது வேறெல்லாவற்றையும் தனது ஆதிபத்தியத்திற்குள் அடக்கிக் கொண்டுள்ளது. இராச்சியம் இவ்வாதிபத்தியத்தை அரசாங்கம் என்னும் ஒரு தனிச்சாதனத்தின் மூலம் செலுத்துகின்றது. ஏனைய சங்கங்களைப்போல, இராச்சியமும் பொது நன்மைக்காகவே ஏற்பட்டதாயினும், நாட்டின் தற்காப்பு, உள்நாட்டுப் பாதுகாவல், மக்களுக்கிடையேயும் ஏனைய சங்கங்களுக்கிடையேயும் நிகழும் வழக்குக்களைத் தீர்த்தல் முதலிய சிறப்பான தொழில்கள் இராச்சியத்திற்கே உண்டு. அதாவது, ஒரு நாட்டில் வசிக்கும் மக்கள் சேர்ந்து உண்டாக்கும் சங்கத்தின் மிக உயர்ந்த நோக்கங்களைச் செயற்படுத்த முற்படும் நிலையமே இராச்சியம் என்பது. இப்பண்புதான் இராச்சியத்தின் தனிப் பண்பாகும்.

இராச்சியத்தின் சிறப்பான அமிசத்தை வன்மை என்றும் கூறலாம்; ஏனெனில் இராச்சியம் நிறைவேற்ற எண்ணும் வினைகளையெல்லாம் தேவையானபோது படைப்பலம் கொண்டே நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இராச்சியத்தை அறத்தைப் புரக்கும் உயர்ந்த ஒரு நிலையாகவும் கருதலாம்; அன்றி இறைவனால் நிறுவப்பட்ட ஒரு தெய்விக ஸ்தாபனமாகவும் கருதலாம். இவ்வாறு கருதியவர்களே அரசனைக் கடவுளின் பிரதிநிதி யென்றும், கடவுளுக்குரிய பக்திக்கு ஈடான விசுவாசத்திற்கு உரியவன் என்றும் கருதினர். இராச்சியத்தை வரலாற்றுப் போக்கில் பரிணாம முறையில் வளர்ந்த ஒரு ஸ்தாபனமாகக் கருதுவதும் உண்டு. தனித்தனி மனிதர்கள் மக்களுக்கு இன்றியமையாத நல்லவை யாவை என்று கணக்கிட்டு, ஒப்பிய ஒரு முடிவிற்கு வந்து, அவற்றைச் செயல் முறையில் இயற்றுவதற்கான பெரிய ஸ்தாபனமே இராச்சியம் என்று கருதுபவர்களும் உண்டு.

இராச்சியம் என்பது உலக வரலாற்றில் எக்காலத்திலும், எந்நாட்டிலும், எப்போதும் நிலைபெற்று வந்துள்ள ஸ்தாபனம். அது இன்றியமையாதது என்னும் எண்ணம் மக்கள் மனத்தில் வேரூன்றியிருப்பதால் பலருக்கு இராச்சியமில்லாத சமூகத்தை நினைத்துப் பார்க்கக்கூட முடிகிறதில்லை.

இராச்சியத்தைப் பற்றிய கருத்துக்களை விஞ்ஞான முறையில் வகைப்படுத்திச் சரிவர ஆராயும் பழக்கம் சிறப்பாக மேனாடுகளில் ஏற்பட்டதே. பிளேட்டோ இராச்சியத்தை நீதியை நிலைநிறுத்தும் ஒரு ஸ்தாபனமாகக் கருதினார். அரிஸ்டாட்டில் அதை மக்களுடைய நல்வாழ்க்கை இயலுமாறு செய்யும் ஸ்தாபனமாகக் கருதினார். ரோமானியர் சட்டத்திற்கு இருப்பிடமாகக் கருதினர். முற்காலக் கிறிஸ்தவர்கள் மனிதனின் ஆதிபாவத்திற்கு ஒருங்கே தண்டனையாகவும் சீர்திருத்த வகையாகவும் இறைவன் அமைத்த ஒரு சாதனமாகக் கருதினர். பிற்கால அறிஞர்கள் மக்களை இயற்கை விதிக்கேற்ப நடந்துகொள்ளும்படி வற்புறுத்துவதற்கான ஒரு சாதனம் என்று கொண்டனர். தற்காலத்தில் இராச்சியத்தின் தன்மையைப் பற்றிய கருத்து அடிப்படையாக மாறுதல் அடைந்துள்ளது. இப்போது அதைப் பொது மக்களின் உருவமாகவே கருதுகின்றனர். இக்கருத்துப்படி அது சமூக நலன்களை மேலும் மேலும் இயற்றுவதற்கான ஒரு சாதனமாகின்றது. ஆதலால் ஒவ்வொரு காலத்திலும் இராச்சியத்தின் தன்மையை நிருணயிப்பதற்குத் தனி அளவையிருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகின்றது. ஒவ்வொருவரும் இராச்சியம் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ அதையொட்டி அவருடைய இராச்சியக் கோட்பாடும் அமைகிறது.

மிகப் பண்டைய சமூகங்களிலும், இந்து சமூகம் போன்ற சமூகங்களிலும், இராச்சியத்தைச் சமூகத்திலேயே மிக முக்கியமான ஒரு ஸ்தாபனமாகக் கருதுவதில்லை. இந்திய சமூகம் பண்டைய பண்புகளை இன்றும் பெற்றிருப்பதால் இராச்சியத்தின் பூரண ஆதிபத்தியத் தன்மையை அது ஏற்றுக்கொள்வதில்லை. இந்திய சமூகத்தில் தன்னைத்தானே மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளும் மாற்ற முடியாத இயல்புகள் இருப்பதாலும், இந்திய சமூக ஏற்பாடு வாழ்க்கைக்குத் தேவையான விதிகளை முன்பே நிலையாக ஏற்படுத்தி விட்டபடியாலும், அவ்விதிகளையும் அளவைகளையும் வேறு முறையில் ஏற்படுத்தவோ, அவற்றிற்கேற்பநடந்துகொள்ளுமாறு மக்களை வற்புறுத்தவோ இராச்-