பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராச்சியத்தின் தோற்றம்

59

இராச்சியத்தின் தோற்றம்

சியம் இந்திய சமூகத்துக்குத் தேவையில்லாமல் போயிற்று.

சட்டசபைகள் மூலம் அவ்வக்காலத்தில் வாழும் மக்களின் சுய இச்சைப்படி சட்டமியற்றல் என்பது தற்காலத்து மேனாட்டு முறை. ஆதலால் மக்கள் வாழ்க்கையில் எல்லாத்துறையும் இராச்சியத்தின் அதிகாரத்திற்குட்பட்டவை என்னும் கருத்து மேனாடுகளில் வளர்ந்து வந்திருக்கிறது. தற்போது மேனாடுகளின் தொடர்பால் உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலுமே இக்கருத்துப் பரவி வருகின்றது. ரா. பா.

இராச்சியத்தின் தோற்றம் : இராச்சியம் எவ்வாறு தோன்றிற்று என்பதைப் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான கொள்கைகள் பரவிவந்திருக்கின்றன. பண்டைய இந்துக்கள் இராச்சியம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்டதென்று கருதினர்; அன்றியும் அவர்கள் "அது தொடக்கத்திலிருந்தே பூரணமான வளர்ச்சியோடு தோன்றிய ஒரு ஸ்தாபனம்; அது என்றென்றும் அழியாமலிருக்கும்" என்றும் கருதினர். இக்கருத்துக்களுக்கிடையே கலியுகத்தில் இராச்சியமும் மன்னனும் இழிநிலையடைவர் என்னும் கருத்தொன்றும் காணப்படுகிறது. ஆனால் கலியுகத்திற்கு முந்திய யுகங்களில்கூட மன்னர்களையும் அவர்களுடைய வீழ்ச்சியையும் பற்றிப் புராணங்களின் வாயிலாகக் கேள்வியுறுகிறோம். அரசர் குலத்தையே வேரறுக்கக் கிளம்பிய பரசுராமன் என்னும் அந்தணனை இராமன் என்னும் அரசன் வென்றது முதலிய விவரங்கள் இதிகாசங்களில் பெறப்படுகின்றன. பொதுவாக இந்திய நாட்டு அறிஞர்கள் இராச்சியத்தின் தோற்றத்தைப் பற்றிப் பலவிதக் கருத்துக்களைக் கூறியதில்லை. அவர்கள் கொண்டிருந்த முக்கியமான கொள்கை இராச்சியம் தெய்விகமாக நிறுவப்பட்டது என்பதே.

கடவுளின் பெயரால் தெய்விக உரிமையோடு ஆட்சி நடத்துவதாகக் கருதப்பட்டிருந்த இந்து மன்னர்களைப் போலவே முகம்மது நபிக்குப்பின் வந்த கலீபாக்களும் தெய்விகத்தால் நியமிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டனர். அவர்கள் அரசியல் தலைவர்களாக மட்டும் இராமல் சமயத் தலைவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பாவிலும் தெய்வீக உரிமை கொண்டாடிய மன்னர்கள் இருந்திருக்கின்றனர். 1-ம் ஜேம்ஸ் என்னும் இங்கிலாந்து மன்னன் இக்கொள்கையை வெளிப்படையாகக் கூறியவன். இராச்சியத்தைத் தோற்றுவித்ததும், மக்களை ஆள அவர்களுக்கு அரசனை ஈன்றதும், கடவுளின் செயல்கள் என்பதுடன் இராச்சியக் குடிகள் அரசனைப் பணிவது கடவுள் கட்டளை என்றும் கூறுவதால் அரசனிடம் மிக உயர்ந்த தெய்வீக அதிகாரத்தைக் காணும் கோட்பாடு ஐரோப்பாவில் நீண்டகாலம் பரவியிருந்தது.

இராச்சியத்தின் தோற்றத்தைப் பற்றி இவ்வாறு மதவாயிலாக வளர்ந்த கோட்பாட்டைத் தவிர வேறு பல கோட்பாடுகளையும் மேனாட்டு அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இவற்றில் பெரும்பாலானவை மனிதர் சமூகத்தில் கூடிவாழும் இயல்பைப் பற்றி அறிஞர்கள்மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக எழுந்தவை. மனிதன் சமூகமாகச் சேர்ந்து வாழும் இயல்புள்ளவன் என்பது சமூக வளர்ச்சியை ஆராய்ந்துள்ள அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர் கண்ட உண்மை. இவ்வியல்பினால் மக்கள் குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டனர்; ஒன்றற்கு ஒன்று தொடர்புடைய பல குடும்பங்கள் சேர்ந்து முதலிற் சிறிய இனங்களாகவும், பின்னர்ப் பெரிய இனங்களாகவும், கிராமங்களாகவும் பெருகின. பல பெருங்குடும்பங்கள் சேர்ந்து ஓரிடத்தில் அமைந்து வியாபாரம், கலை முதலிய பொதுக் காரியங்களில் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஈடுபடுவது மக்களின் இயல்பு. இவ்வாறு பல்லாயிர மக்கள் கூடி வாழும் நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களின் மீது தங்கள் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்டிக் கொள்ளத் தொடங்கின.

இந்தக் கிராமங்கள் முழுவதும் ஒன்றுசேர்ந்து பிற்காலத்தில் தேசம் அல்லது நாடு என்று ஆயின. இப்பரிணாம முறையில் தேசம் ஏற்பட்ட பிறகே அரசியலில் தேசியமும் அதன் விளைவுகளும் தோன்றலாயின. அப்பொழுது ஏற்பட்டதே இராச்சியம், நகரமாக இருந்தபோது ஏற்பட்டது நகர இராச்சியம். இது இராச்சியத் தோற்றத்தைப்பற்றிய ஒரு கோட்பாடு. இவ்வாறு பழைய வரலாற்று ஆராய்ச்சியால் பெறப்படும் விவரங்களைத் தொகுத்து நிறுவப்படும் தோற்றக் கொள்கைக்கு வரலாற்றுக் கொள்கை என்று பெயர். இராச்சியம் திடீரென்று தோன்றியதன்று; படிப்படியாக வளர்ந்து தோன்றிய ஒரு ஸ்தாபனம் என்று கொள்ளப்படும் கொள்கைக்குப் பரிணாமக் கொள்கை என்று பெயர்.

மானிடவியல் (Anthropology) முறையில் இராச்சியத்தின் தோற்றத்தைப்பற்றி யாராய்வதுண்டு. தாய்வழி யமைந்த குடும்பங்களும், தந்தைவழி வரும் குடும்பங்களும் எனக் குடும்பங்கள் இரு வகையினவாம். மருமக்கள் தாயம் என்னும் வார்சுரிமை முறையெல்லாம் தாய்வழியமைந்த குடும்பங்களிலேயே உண்டு. ஆயினும் உலகிற் பெரும்பாலும் காணக்கிடப்பது தந்தைவழி யமைந்த குடும்பங்களே. தாய்வழி அமலிலிருக்கும் சமூகங்கள் ஆதிகாலத்தில் இருந்திருக்கக் கூடியவை. ஆனால் முதன்முதலாக நாம் இப்போது அறிந்துள்ள முறையில் குடும்பம் என்னும் ஸ்தாபனம் தோன்றியிருக்க முடியாது. குடும்பத் தலைவனுக்கு உட்பட்டு மனைவி மக்கள் அடங்கிய ஒரு குடும்பம் பிற்காலத் தோற்றம். அப்போதுதான் தந்தை வழி வார்க முறை ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு நிருணயமும் கட்டுப்பாடுமில்லாமல் இருந்த புராதனப் பெண்வழிச் சமூகத்திலிருந்து ஆணைத் தலைவனாகக்கொண்டு இயங்கும் சமூகம் தோன்றி, அதன் பிறகு குடும்பங்கள் நாம் இப்போது அறிந்துள்ளவாறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தந்தைவழிச் சமூகம் தோன்றியபோதே கட்டுப்பாடு, சட்டம், ஒழுங்கு முதலியவற்றை நிறுவுவதற்கான ஸ்தாபனம் ஏற்பட்டு விட்டது. தாய்வழிச் சமூகங்கள் தோன்றுவதற்கு முன்பு எவ்வித நியதியும் இல்லாமல் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் விலங்கினங்களைப்போல இருந்திருக்கும் என்பதை நோக்குமிடத்துக் குடும்பம் என்னும் பண்டைய ஸ்தாபனம் கூட இராச்சியத்தின் விளைவேயன்றி இராச்சியத்திற்குக் காரணமன்று என்பது புலனாம்.

சட்டமுறையில் இராச்சியத் தோற்றத்தைப்பற்றிய ஆராய்ச்சி 'ஒப்பந்தக் கொள்கை'யை (Contract Theory) ஆதாரமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கைப்படி மக்கள் ஒருங்குகூடித் தங்களுக்குள்ளே ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பலனாக இராச்சியம் என்னும் ஸ்தாபனம் தோன்றிற்று என்று சிலர் கொள்வர். இது வரலாற்று முறையன்று. ஒரு குறிப்பிட்ட நாளில் மக்கள் சமூகம் முழுவதும் சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு இராச்சியத்தை நிறுவியது என்று நிரூபிக்க முடியாது. இவ்வாறு நிகழ்ந்திருக்கவும் முடி-