பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராச்சியத்தின் தோற்றம்

60

இராச்சியத்தின் தோற்றம்

யாது ஆனால் இராச்சியம் மேலும் மேலும் இயங்கிவருவதற்கு ஓர் ஒப்பந்தம் அல்லது உடன்பாடு மக்களுக்குள் தேவை என்று எண்ண இடமுண்டு. ஆதலால் இராச்சியம் தொடர்ந்து நடந்து வருவதற்கு மக்களுடைய உடன்பாட்டிலிருந்து அதிகாரம் பெறப்படுகிறது என்பதே ஒப்பந்தக் கொள்கையின் சாரமாகும்.

ஒப்பந்தக் கொள்கைகள் எல்லாம் இராச்சியம் தோன்றுவதற்கு முன்பு ஒரு குழப்பமான சமூகநிலை இருந்ததென்றும், அந்நிலையால் விளைந்த தீமைகளையோ, எது நீதி என்ற ஐயத்தையோ தவிர்க்க மக்கள் ஓர் ஒப்பந்தம் செய்து இராச்சியத்தைத் தோற்றுவித்துக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றன. மக்களுடைய சம்மதத்தைப் பொறுத்து அரசனுடைய ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று கருதும் எல்லாக் கொள்கைகளும் ஏறத்தாழ இக்கொள்கையை ஏற்றுக்கொள்கின்றன. ஆயினும் ஒப்பந்தத்தை ஒரு விரிவான கொள்கையாக உருவாக்கியவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய அரசியல் அறிஞர்களே. அல்தூசியஸ், குரோஷியஸ் முதலிய ஐரோப்பிய அறிஞர்கள் இக்கொள்கையை ஓரளவு கூறியுள்ளனர்.

ஒப்பந்தக்கொள்கையை அடிப்படையாகக்கொண்டு அரசியல் நூல் இயற்றிய ஐரோப்பிய அறிஞர்களில் தலைசிறந்தவர்கள் ஹாப்ஸ், லாக், ரூசோ என்னும் மூவராவர். இவர்களில் ஹாப்ஸ், லாக் இருவரும் ஆங்கிலேயர்கள்; ரூசோ பிரெஞ்சுக்காரர்.

II-ம் சார்லஸ் மன்னனின் ஆசிரியராயிருந்த ஹாப்ஸ் 1657-ல் லிவையதன் என்னும் ஒரு நூலில் தமது கொள்கையை விளக்குகிறார். இயற்கை நிலை (The State of Nature) அபாயமும் பூசலும் மிகுந்தது. மக்களுக்குள் வரம்பற்ற போட்டியும், எவ்வாறாயினும் உய்யும் வழி தேடவேண்டும் என்ற விருப்பமும், இதனால் ஏற்படும் பீதியும் இயற்கை நிலையின் பண்புகளாம். இந்நிலையில் மனித வாழ்க்கை ஆபாசமானது, மிருகத்தனமானது, நிலைக்காதது.இந்நிலை பொறுக்க முடியாத இன்னல்கள் உடையதாதலின் இதனின்றும் தப்புவதற்கு ஒவ்வொரு மனிதனும் சமூகத்திலுள்ள ஏனையவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு தன் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிடுகிறான். எல்லோரும் இவ்வாறு தங்களுடைய உரிமைகளைத் தங்களிடமிருந்து பிரித்து, ஒரு மனிதனிடமோ, ஒரு சபையீடமோ ஒப்படைத்து வருவதால் இராச்சியம் தோன்றுகிறது" என்பது அவர் கொள்கையின் சாரம். அவர் கொள்கைப்படி இவ்வொப்பந்தத்திற்கு அதிபதி (Sovereign) உடந்தையாகாமையால் அவன் அதிகாரத்துக்கு வரம்பு இல்லை. ஆனால் அதிபதிக்குக் கீழ்ப்படியாமல் குடிகள் செய்யும் எக்காரியமும் தவறான செய்கையாம். இக்கொள்கையில் அதிபதிக்குக் கட்டுப்பாடு ஒன்றும் இல்லாததால் எதோச்சாதிகாரத்திற்கு இது வழிகாட்டும் என்பது ஒரு கருத்து. ஆயினும் ஹாப்ஸின் கொள்கை சட்டப்படியும் தருக்க முறைப்படியும் குற்றமற்றது என்பதில் ஐயமில்லை.

1688-ல் நடந்த ஆங்கில ஜனநாயகப் புரட்சியின் சார்பரக அரசனின் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து ஜான் லாக்கின் ஒப்பந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. அவர் கருத்துப்படி இராச்சியம் தோன்றுவதற்கு முன்பிருந்த சமூகம் ஹாப்ஸ் கூறியபடி 'மிருகத்தனமாயும் அபாயம் மிகுந்ததாகவும்' இல்லை. சமூகத்தின் பொது நன்மைக்கும் தனி மனிதர்கள் நல்வாழ்க்கைக்கும் குறைவில்லை. ஆயினும் எது நீதி, எது அந்தி என்று திடமாக வகுத்துத் தனி மனிதர்களுள் வழக்கு நேரும்போது அதைத் தீர்க்க இராச்சியம் வேண்டியிருக்கிறது. ஆதலால் தமது இயற்கை உரிமைகளான வாழ்க்கை, சுதந்திரம், சொத்து ஆகியவற்றைக் காப்பாற்ற இராச்சியத்தை நிறுவுவதாக மக்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். அரசாங்கத்திற்குரிய சில உரிமைகளை மட்டும் இராச்சியத்திற்கு விட்டுக்கொடுத்துவிட்டு, ஏனைய உரிமைகளை அவர்கள் வைத்துக்கொண்டுள்ளார்கள். ஆதலால் இராச்சியத்தை அமைக்கும் ஒப்பந்தத்தோடு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. மக்களும் அரசாங்கமும் தத்தம் உரிமை எல்லைகளை மீறாம்லிருக்கவேண்டும். எல்லை மீறும் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து விலக்கி, வேறு அரசாங்கம் அமைத்துக் கொள்ளலாம். ஜனநாயக முறையில் புரட்சி நடத்துவதற்கு இக்கொள்கை இடங்கொடுப்பது இதனால் புலனாம்.

ரூசோவின் கொள்கை, "ஆதி மனிதன் பூரண சுதந்திர முடையவனா யிருந்தான். பிறகு மக்கள் தொகை மிகுந்தபின் சமூகத்திலுள்ள எல்லோரும் தங்களுடைய பொதுக் கருத்தை (General will) வெளிப்படுத்த இராச்சியம் என்னும் ஸ்தாபனத்தை யுண்டாக்கிக் கொண்டனர். பிறர் எல்லோரும் அப்படிச் செய்கிறார்கள் என்ற ஒப்பந்த உறுதிப்படி ஒவ்வொருவரும் தம் எல்லா உரிமைகளையும் இராச்சியத்தின்பால் ஒப்படைத்ததும் இராச்சியம் தோன்றுகிறது. அதனால் தனி மனிதன் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றுகிறானேயன்றி இழக்கவில்லை" என்பதாகும். சமூகமே அதிபதியாவதால் அதற்கும் அதன் ஆணைக்கு உட்பட்ட அரசாங்கத்திற்கும் ஒப்பந்தம் ஒன்றுமில்லை, நினைத்தபோது அரசாங்கத்தை விலக்கிவிடலாம். ஜனநாயக எல்லையைத்தொடும் இக்கருத்து அதையும் கடந்து பொதுமக்கள் ஆதரவு பெற்ற தலைவரின் எதேச்சாதிகாரத்திற்கும் இடம் தரும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணலாம்.

இவ்வொப்பந்தக் கொள்கைகள் பொதுவாக, "அரசியல் கடமைகள் பலாத்காரத்திற்கு அஞ்சி ஆற்றப்படுவணவல்ல; விருப்பத்தால் ஆற்றப்படுபவை" என்று கூறுகின்றன. இராச்சியம் அமைதியான ஒப்பந்தத்தின் மூலம் சட்டமுறையில் நிறுவப்படுவது என்னும் கொள்கைக்கு எதிராகப் பலாத்காரக் கொள்கை ஒன்று ஒரு சாராரால் கொள்ளப்படுகிறது. மிகுந்த பலமுள்ள ஒருவனாலோ, அன்றி ஒரு குழுவினாலோ பிறர்மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தால் இராச்சியம் தோன்றுகிறது. அவ்விராச்சியம் தொடர்ந்து நடைபெற்று வருவதற்குப் பலாத்காரமும் தொடர்ந்து செலுத்தப்படவேண்டும் என்பது இதனின்றும் பெறப்படுவதாம். ஒரு நாட்டவர் மற்றொரு நாட்டின்மீது படையெடுத்து, அந்நாட்டை வென்று அடிப்படுத்தித் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதை வரலாற்று வாயிலாகவும் கண்கூடாகவும் கண்டவர்கள் இக் கொள்கைக்கு ஆதரவு அளித்தனர்.

அரிஸ்டாட்டில் மனிதனைச் சமூகமாகச் சேர்ந்து வாழ்பவன் என்றபோது சமூகத்தில் பலரோடு கூடி வாழும் இயல்பு மனிதனுக்கு இயற்கையாகவே உண்டு என்பதை எடுத்துக்காட்டினார். இப்படி மனிதனுடைய இயற்கைப் பண்பைத் தொடர்ந்து தோன்றிய ஸ்தாபனமாதலால் இராச்சியம் இயற்கை விளைவு என்று கூறுவார் ஒரு சாரார். இக்கூற்றின்படி இராச்சியம் இல்லாத மனித சமூகம் ஒன்று என்றைக்கும் இருந்திருக்க முடியாது என்பது பெறப்படும். வாழ்க்கைக்கு இன்றியமையாத பல பொதுச்செயல்கள் புரியும் இராச்சியத்-