பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

61

இராசாளி

தால் நாம் அடையும் பயன்களை உணர்வோர் இப்பயன்களை வேண்டியே மக்கள் இந்த ஸ்தாபனத்தை ஆதியில் தோற்றுவித்தனர் என்று கொள்வர், இராச்சியம் தெய்விகமாகத் தோற்றுவிக்கப்பட்டது என்னும் கொள்கையுடையார் வரலாற்று முறையில் இராச்சியத்தின் தோற்றத்தைப் பற்றி யாராய்வது பொருந்தாது என்று கருதுபவர்களாவர். அவர்களுடைய முறை சமய வழியில் இயங்கும் ஆராய்ச்சியாகும். மதக்கட்டுப்பாடுகளற்ற தருக்க ரீதியிலும், வரலாற்று நூல் வாயிலாகவும், உளவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற புது அறிவுத்துறைகள் தரும் கருத்துக்களைக் கொண்டும், இராச்சியத்தின் தோற்றம் பற்றிப் பல கொள்கைகள் நிலவிவந்துள்ளன. ஒருபோதும் ஓரிடத்திலும் இராச்சியமில்லாமல் மக்கள் வாழ்ந்தமை நாம் அறியாததால், இராச்சியம் மக்கள் சமூகத்துடனேயே தோன்றிய இயற்கையான ஸ்தாபனம் என்று கொள்வது தவறாகாது. ரா. பா.


இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி கடைச் சங்க காலத்துச் சோழரில் ஒருவன். இவன் பகைவர் நாட்டைக் கொள்ளையூட்டிப் பாழ்படச் செய்ததைச் சிறப்பித்துப் பாண்டரங் கண்ணனார் பாடுகின்றார் (புறம்.16). இவன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனோடு பொருதவன். இதை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் குறிக்கின்றார் (புறம்.125). சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, பெருநற்கிள்ளி மூவரும் ஒருங்கிருந்தபோது ஔவையார் இவர்களுக்கு அறிவுரை கூறி வாழ்த்தியிருக்கின்றார் (புறம்.367) உலோச்சனாரும் பெருநற்கிள்ளியை வாழ்த்தியிருக்கின்றார் (புறம்.377)

இராசப்பக் கவிராயர் திருக்குற்றாலக் குறவஞ்சி முதலிய நூல்களின் ஆசிரியர். பார்க்க : திரிகூட ராசப்பக் கவிராயர்.

இராசப்ப நாவலர் : இவர் இராசப்பக் கவிராயர் எனவும் இராசப்ப உபாத்தியாயர் எனவும் கூறப்பெறுவர். திரிகூடராசப்பக் கவிராயர் வேறு; இவர் வேறு. சிறந்த தமிழ்க் கவிஞர்; நடுநாட்டிலுள்ள திருவெண்ணெய் நல்லூரினர்; பஞ்சலட்சண சரபம் என்னும் பட்டம் பெற்றவர். திருநாவலூர்ப்புராணம், திருவெண்ணெய்க் கலம்பகம், விந்தைக் கலம்பகம், சித்தி நகரத்தந்தாதி. மநுநீதி சதகம் முதலான நூல்களை இயற்றியிருக்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையிலிருந்தவர்.

இராசப் பிளவை : பார்க்க : கட்டிகள், இராசப் பிளவைகள்.

இராசராச சோழன் I : கி.பி. 985-1014 வரை ஆண்ட இராசராசன் சிதைந்து போன சோழ ஆட்சிக்குப் புத்துயிர் கொடுப்பதற்காகத் தன் ஆட்சிக் காலம் முழுவதும் போரிட வேண்டியிருந்தது. தெற்கே, பாண்டிய மன்னனும் கேரள மன்னனும் ஈழ மன்னனும் ஒன்றுசேர்ந்து இவனைத் தாக்கினார்கள். இவன் இருபெரும் போர்களில் பாண்டியனை வென்ற பிறகு கேரள நாட்டைத் தன்வசப்படுத்திக் கொண்டான். காந்தளூர், விழிஞம் ஆகிய இரண்டு போர்களும் பெயர் பெற்றவை. கடற்படையின் உதவியால் ஈழத்தின் வடபாகத்தைக் கைப்பற்றி, அதைத் தன் இராச்சியத்தின் பகுதியாக்கிப் பொலனறுவையைத் தலைநகரமாக ஏற்படுத்தினான். கன்னட இராச்சியங்களான கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி ஆகியவைகளும் சோழப்பேரரசில் சேர்க்கப்பட்டன. வேங்கி நாட்டையாண்ட சாளுக்கியர் இராசராசனுக்குக் கீழ்ப்படிந்தனர். வேங்கி நாட்டில் அப்போது ஒரு கலகம் நடந்துகொண்டிருந்தது. வேங்கியரசனான தானார்ணவனைக் கொன்றுவிட்டுத் தெலுங்குச் சோழச் சிற்றரசன் பீமன் வேங்கியைக் கைப்பற்றி, அங்கு 27 ஆண்டுகள் ஆண்டுவந்தான். தானார்ணவனின் மக்கள் இருவருக்கும் உதவி செய்வதாக இராசராசன் வாக்களித்தான். அதை நிறைவேற்றும் பொருட்டுப் பீமனைப் போரில் வென்று, கைது செய்து, தானார்ணவனின் மூத்த மகன் சக்திவர்மனை வேங்கி மன்னனாக முடி சூட்டினான். பிறகு மேற்குச் சாளுக்கிய இராச்சியத்துடன் போர் தொடங்கிற்று. இராசராசன் மகன் இராசேந்திரன் சாளுக்கிய நாட்டிற்குள் புகுந்து, தலைநகரான மானியகேதத்தை யழித்துக் கொள்ளிப்பாக்கை, வனவாசி முதலிய கோட்டைகளையும் கைப்பற்றினான். மேற்குக் கடலில் வெகு தொலைவில் உள்ள மால தீவுகளையும் சோழப் பேரரசில் சேர்த்துக்கொண்டான்.

கப்பல் படையின் உதவியைக் கொண்டே தென்னிந்தியாவின் வர்த்தகம் கீழ்நாடுகளில் மிக இலாபகரமாக வளர்ந்து வந்தது. ஸ்ரீ விஜய (மலேயா, சுமாத்ரா, மேற்கு ஜாவா அடங்கிய இராச்சியம்) நாட்டுடன் சமாதானமும் வர்த்தக உடன்படிக்கையும் ஏற்பட்டன. அந்நாட்டின் அரசன் மாற விஜயோத்துங்கவர்மன் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி ஹாரம் என்ற பௌத்தக்கோயிலுக்கு இராசராசனால் கிராமங்கள் கொடுக்கப்பட்டன.

அவள் வென்ற பல நாடுகளிலிருந்து கிடைத்த ஏராளமான வருவாயைக்கொண்டு தன் பேரரசின் கீர்த்தியை விளங்க வைக்கத் தஞ்சாவூரில் இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இன்று வரையிலும் நிகரில்லாத ஒரு கோயிலாக அது காட்சியளித்து வருகிறது. இராசராசனால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட பொன்னும் அணிகளும் விலைமதிக்க முடியாதவை. பொன் மட்டும் 41,500 கழஞ்சு என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அணிகள் 11.200 காசுகள். இக்கோயிலில் தேவாரம் பாடுவதற்கும் வேதம் ஓதுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராசராசன் தமக்கை குந்தவையும் அவன் அரசியரும் இதற்கு ஏராளமாக மானியம் விடுத்தனர்.

வரலாற்றிலே கண்டிராத ஒரு தமிழ்ப்பேரரசை நிறுவிய பெருமை இராசராசனுடையது. அவன் காலத்து அரசியல் திட்டமும், கிராமம், நாடு முதலிய பிரிவுகளும் தல ஆட்சிகளும், மிகவும் நேர்மையான வழியில் அமைக்கப்பட்டன. உலகப்பெரு மன்னர்களில் இராசராசனும் ஒருவன். கூ. ரா. வே.

இராசராசேச்சுரம் : இரண்டு முக்கிய சிவஸ்தலங்களுக்கு இப்பெயர் உண்டு. ஒன்று தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயில், பெருவுடையார் கோயில் என வழங்கும் பிரகதீச்சுரம். மற்றொன்று தாராசுரம். பார்க்க : பிரகதீச்சுரம், தாராசுரம்.

இராசாளி: கொல்லுந்தன்மையுள்ள பல பறவைகளுக்கும் இப்பெயரைப் பலர் பொதுப்பட உபயோகித்தாலும், ஆங்கிலத்தில் பானெல்லிக் கழுகு (Bonelli's Eagle) எனப்படும் பறவைக்கே இது பொருந்தும். இந்தப் பறவை மேற்பாகம் கறுத்து, அடி வெளுத்திருக்கும். இது சாதாரணப் பருந்திலும் சிறிதளவே பெரிதாக இருந்தபோதிலும் மயில்போன்ற பெரிய பறவையையும் கொல்லும். மிக அடர்த்தி இல்லாத காட்டுப் பக்கங்களில் இது வசிக்கும் (கொண்டையன் என்ற தலைப்பின் கீழும் பார்க்க). ம. கி