பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணம்

71

இராமாயணம்

போற்றும் பல கட்டுக் கதைகளையும், சாஸ்திரம், சட்டம், சம்பிரதாயம் முதலியவைகளைப் பற்றின விஷயங்களையும் பிற்காலங்களில் யாரோ புகுத்திவிட்டனர் என்றும் சொல்லப்படும் கட்சி பலவிதத்தில் பொருந்தாது என்பது கதையை நுட்பமாய் ஆராய்ந்தால் விளங்கும். இராமாயணத்திற்கு முற்பட்ட வேதத்திலும் இவ்விதப் பகுதிகள் இருப்பது கவனிக்கத் தகுந்தது. சிற்சில இடைச் செருகல்கள் இருப்பது தெளிவே. கதகம் என்று பிரசித்திபெற்ற உரையின் ஆசிரியரும் மற்றோரும் இச்சேர்க்கைகளை ஆங்காங்குக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் குறிக்காத சில செருகல்களும் இருக்கலாம். ஆனால் பாலகாண்டம் வால்மீகி செய்ததன்று என்பவருடைய வாதம் உண்மையாகில் பின்னால் வரும் கதையிலுள்ள பல சந்தர்ப்பங்களைப் புரிந்துகொள்ள இயலாதென்பதை உணர வேண்டும். இராமனுடைய கல்வியும், உலக ஞானமும் விசுவாமித்திரரின் பழக்கத்தால் வளர்க்கப்பட்டு, அதன் விளைவாகவே அவருடைய வீரியமும் தைரியமும் பொறுமையும் அழகுடன் விளங்கின.

பாடாந்தரங்கள் : இராமாயணத்திற்கு வெகு காலமாக மூன்று பாடாந்தரங்கள் (Recensions) வழங்கி வருகின்றன. இவை முறையே வடமேற்கு இந்தியாவிலும், வங்காளத்திலும், மற்றப் பிரதேசங்களிலும் பிரசாரமானவை. மூன்றாவது தென்னாட்டுப் பாடம் என்று குறிக்கப்படுகிறது. மற்ற இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளைவிட இதற்கும் அவைகளுக்கும் உள்ள ஒற்றுமை குறைவு. அவைகளுக்குள் வங்காளப் பாடத்தைவிட வடமேற்கு இந்தியப் பாடத்திற்கும் தென்னாட்டுப் பாடத்திற்கும் பொருத்தம் சற்று மிகுதியாகவே உண்டு. தட்சிணபாடத்தில் மற்றவையை வீடச் சுலோகத் தொகை மிகுதி. அதில் ஆர்ஷப் பிரயோகங்களும் மிகுதி. இந்தக் காரணங்களைக் கொண்டு அதுவே இப்போது வழங்கும் பாடங்களுக்குள் பழமையானதென்று ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். டுல்கெ என்பவர் வால்மீகி மூல ராமாயணத்தைக் கி.மு.300 அளவில் செய்திருக்க வேண்டுமென்றும், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டிற்குள் மேற் கூறிய மூன்று பாடபேதங்களும் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும் ஊகிக்கிறார்.

கதைச் சுருக்கம் : பால காண்டம்: அயோத்தி மன்னன் தசரதன் பிள்ளைப்பேறில்லாமையால் அசுவமேதமும் புத்திரகாமேஷ்டியும் செய்து, விஷ்ணுவின் அமிசங்களாக அவதரித்த இராமன், பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் என்ற பிள்ளைகளை முறையே கௌசல்யை, கைகேயி, சுமித்திரை என்ற பட்டமகிஷிகளிடம் பெற்றான். இலங்கையை ஆண்டு, பிரமாவின் வரபலத்தால் மூன்று உலகங்களையும் தவிக்கச் செய்துவந்த இராவணனை மனிதனாய்ப் பிறந்தவன்தான் கொல்லலாமென்றிருந்ததால் மகாவிஷ்ணு இவ்விதம் அவதரித்தார். பிள்ளைப் பருவத்திலேயே வில்வித்தைகளில் நிகரற்ற திறமைவாய்ந்த இராமன் இணை பிரியாத தம்பி இலட்சுமணனுடன் சென்று, விசுவாமித்திரரின் வேள்வியைக் கெடுத்துவந்த தாடகை முதலியோரைக் கொன்று அவ்வேள்வியை முற்றுவித்தான். ரிஷிகளுடன் மிதிலை மன்னன் ஜனகனுடைய யஞ்ஞத்திற்குச் சென்று, சிவதனுசை முரித்து, ஜனகனுக்குப் பூமியிலிருந்து கிடைத்த சீதையை மணந்தான். இராமன் மணம் முடிந்து அயோத்திக்குத் திரும்புகையில் க்ஷத்திரிய குலங்களை அழித்த பரசுராமர் வழிமறிக்க, அவருடைய கருவத்தை அடக்கி, தன் சுற்றத்தாருடனும் பரிவாரங்களுடனும் அயோத்தியைச் சேர்ந்தான்.

அயோத்தியா காண்டம் : தசரதன் எல்லாக்குணங்களும் பொருந்திய இராமனுக்குக் குடிகளின் சம்மதத்தின்பேரில் இளவரசுப் பட்டம் சூட்ட முயன்றான். அப்படிச் செய்வதால் மாமன் வீட்டில் வெகுகாலமாயிருந்துவந்த பரதனுக்கு அரசு இல்லாமல் போவதுடன் தன் சக்களத்தி கௌசல்யைக்கு மேன்மை கிட்டும் என்று மந்தரை என்ற தன் பணிப்பெண்ணால் துர்ப்போதனை செய்யப்பட்ட கைகேயி, அரசன் தனக்கு முற்காலத்தில் கொடுத்த வரங்களை நினைவூட்டி, அவைகளை இப்போது அளிக்கவேண்டுமென்று மன்றாடினாள். யோசனையின்றி அலனும் ஒப்புக்கொள்ளவே, ராமன் பதினான்கு ஆண்டுகள் தண்டகக் காடுகளில் வசிக்கவேண்டுமென்றும், பரதன் இளவரசாகவேண்டுமென்றும் கட்டாயப்படுத்தினாள். தருமத்திற்குக் கட்டுப்பட்டு இசைந்த தசரதன் இராமன் காட்டுக்குப் போன ஆறாம் நாள் பிரிவாற்றாமையால் உயிர் நீத்தான். மாமன் வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பரதன் தாயைக் கடிந்து, சித்திரகூடம் என்னும் மலைச்சரிவில் தன்னைவிட்டுப் பிரியமாட்டோமென்று பின்னேவந்த இலட்சுமணனுடனும் சீதையுடனும் வசித்துவந்த இராமனைக் கண்டு, திரும்ப இராச்சியத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று கதறினான். தகப்பனுக்குக் கொடுத்த வாக்கைப் பொய்யாக்க முடியாதென்று இராமன் மறுக்கவே, அவனுக்காக அவனுடைய பாதுகைகளே அரசு புரியட்டும் என்ற எண்ணத்துடன் அவைகளைப் பெற்று, அயோத்திக்குத் திரும்பி, நந்திக் கிராமம் என்ற சிற்றூரிலிருந்து,ரிஷி வேஷம் பூண்டு, துயருடன் பரதன் அரசு செலுத்தி வந்தான்.

ஆரணிய காண்டம்: இராம லட்சுமணர்களும் சீதையும் பதின்மூன்று ஆண்டு தண்டக ரிஷியாசிரமங்களில் சஞ்சரித்துக் கோதாவரிக் கரையிலுள்ள பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியிருக்கையில் இராவணன் தங்கை சூர்ப்பணகை தற்செயலாய் அங்கு வந்து, இராமன் அழகைக் கண்டு மோகித்துச் சீதையைக் கொல்லப் பாய, இலட்சுமணன் அவளுடைய காதையும் மூக்கையும் அறுத்து விரட்டினான். அவள் முறையீட்டைக் கேட்டு ஜனஸ்தானத்தில் ராவணன் பிரதிநிதியாக அரசு புரிந்துவந்த கரன் பதினாலாயிரம் அரக்கர்களுடன் இராமனை எதிர்க்கத் தனியே நின்று யுத்தம் செய்த இராமன் ஒரு நாழிகையில் அவ்வளவு பேரையும் கொன்றான். இந்த விபத்தையும் சீதையின் அழகையும்பற்றி சூர்ப்பணகை சொல்லக் கேட்ட இராவணன் பெரிய மாயாவியான மாரீசனைத் தங்கமான் வேடம் பூண்டு, சீதையை ஏமாற்றச் செய்து, இராமலட்சுமணர்கள் இல்லாத வேளையில் தான் சன்னியாசிபோல் நடித்துச் சீதையைப் பயமுறுத்தித் தூக்கிச் சென்று, தடுக்கவந்த சடாயு என்ற கிழக்கழுகரசனைக் கொன்று, அவளை இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத்தான். பலவிதமாக அவளை வசப்படுத்த முயன்றும் அந்தக் கற்புக்கரசி அவனை நிராகரித்தாள்.

கிஷ்கிந்தா காண்டம். இராமனும் இலட்சுமணனும் ஆசிரமத்தில் சீதையைக் காணாமல் தேடிப் புலம்பி, இராவணன் கொண்டு போனான் என்று உயிர் நீங்கும் தருணத்தில் இருந்த சடாயுவினால் அறிந்தனர். சடாயுவுக்கு ஈமக் கடன் களைச் செய்து, கிஷ்கிந்தையில் ஆண்டுவந்த வாலி என்ற வானர அரசனின் தம்பியும் அவனால் கொடுமையாக நடத்தப்பட்டவனுமாகிய சுக்ரீவனைக் கண்டார்கள். அவனுடைய முக்கிய மந்திரியும் மகா புத்திமானுமான அனுமான் மூலம் இராமன் சுக்ரீவனுடன் நட்புக்கொண்டு, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் சூட்டினான். அவனாணையால்