பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கம்பன் புகழ் வளர்த்த கலைஞானி


தி.க. சிவசங்கரன்

அமரர் பாஸ்கரத் தொண்டைமான் அவர்களைக் கடந்த கால் நூற்றாண்டாக நான் அறிவேன்.

நேரில் அதிகப் பழக்கம் இல்லை. நானும் அவரும் நெல்லையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எட்ட இருந்து கூட்டத்தோடு கூட்டமாய் எண்ணற்ற ரஸிகர்களில் ஒரு ரஸிகனாக நான் அவரது பேச்சையும், எழுத்தையும் சுவைத்திருக்கிறேன்.

1941, 42 ஆம் ஆண்டுகளில் நெல்லையில் மணியரசு செந்தமிழ்க் கழகம், நெல்லை வாலிபர் சங்கம், கலைக் கழகம் போன்ற பற்பல இலக்கியக் கழகங்கள் இருந்தன.

இச்சங்கங்களில் பெரும்பாலும் தேசபக்தியும் இலக்கிய பக்தியும் மிக்க இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி போன்ற மாமேதைகளின் இலக்கிய விழாக்களை அளப்பரிய உற்சாகத்துடன் கொண்டாடி வந்தார்கள். கையெழுத்து இலக்கிய இதழ்களையும், சொற்பொழிவுப் போட்டிகளையும் நடத்தி வந்தார்கள்.

மேற்கண்ட சங்கக் கூட்டங்களிலும், விழாக்களிலும் திரு. பாஸ்கரன் அவர்களுக்கு நிச்சயம் ஒரு பங்கு இருக்கும். அவர் தலைவராகவோ, பேச்சாளர்களில் ஒருவராகவோ கலந்து கொண்டு எங்களையெல்லாம் மகிழ்விப்பார்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் ஆ. முத்துசிவன், பேராசிரியர் அ. சீனிவாசராகவன், பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர் தூத்துக்குடி ஏ.ஸி. பால்நாடார் வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார், பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோரின் பேச்சுக்களை நான் தவறாது கேட்டு அனுபவித்த காலம் அது.