பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

வானொலியிலிருந்து ஒலிபரப்பப்பட்ட அவரது கவிதை செவிக்கு நல் அமுதமாயிற்று. அவரது கவிதையைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி, ஏதோ எனக்குத் தெரிந்த சிறு சிறு சொற்களையெல்லாம் திரட்டி கவிதை என்ற பெயரில் ஒன்று எழுதி அவருக்கு அனுப்பினேன். அதற்கும் பதில் வந்தது. முடவனுக்குக் கொம்புத்தேன் கிடைத்துவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அதைவிட மகிழ்ச்சி ஏற்பட்டது எனக்கு அப்போது.

அன்று வடஆர்க்காடு மாவட்ட விளையாட்டுப் போட்டி சர்க்கார் ஊழியர்களுக்காக வேலூரில் நடைபெற்றது. நானும் அதற்காகச் சென்றிருந்தேன். விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து, ‘அன்றும் இன்றும் என்ற நாடகம் வேறு நடைபெறுமென அறிவித்திருந்தார்கள். அந்த நாடகம் கலெக்டர் எழுதியது என்பதை அறிந்துதான் திருப்பத்துரிலிருந்து வேலூருக்கு ஆவலோடு வந்திருந்தேன். ஆனால் விளையாட்டு மைதானத்தில் ‘தம்பி எழுதிய ‘அன்றும் இன்றும் என்ற நாடகம் என அறிவித்தனர். எனக்கு சற்று ஏமாற்றம். கலெக்டர் எழுதினார் என்றல்லவா ஓடோடி வந்திருந்தேன். இப்போது தம்பி என்று யாரையோ குறிப்பிடுகிறார்களே என்று ஓடிற்று என் எண்ணம். ஆனால் தம்பி என்பது ஒருவேளை புனைப்பெயராக இருக்குமோ என்ற நினைவும் உடன்வந்தது. இந்த நினைவில் நெடு நாட்களுக்கு முன்னர் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்ட கம்பன் சுயசரிதம் என்ற கட்டுரையை நோக்கி ஓடினேன். அதையெழுதியவர் ‘தம்பி என்பது எனக்கு நன்றாக நினைவில் இருந்தது. அப்போது அந்தத் தம்பியும் இந்தத் தம்பியும் ஒருவர்தானா? என் மனம் அசைபோட்டபடியே ராஜகோபால் நிலையத்தை அடைந்தேன்.

நாடகத் துவக்கம் எழுதியவர் பெயரை அறிவிக்கும் வேளை வந்தது. நான் நன்றாகக் காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்து விட்டேன். “தம்பி” என்ற தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதியது என்று கூறிய பிறகுதான் நான் என்னுள்ளத்தே எழுந்த ஐயங்களையெல்லாம் தீர்த்துக்கொள்ள முடிந்தது. கம்பன் சுயசரிதம் எழுதியவர் இவரேதான் என்ற தெளிய முடிந்தது. திருப்பத்தூரி லிருந்து வந்ததற்குப் பலன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

அமைச்சர் தலைமையில் நாடகம் நிகழ்ந்தது. மாவட்ட அதிகாரிகள் எல்லாம் வேஷம் போடுவதில் தங்களுக்குள்ள திறமைகளையெல்லாம் காட்டினர். நிலைநாட்டினர் என்று