பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் - 179

வேண்டுமானாலும் கூறலாம். அந்நாடகத்தில் ரிட்டையர்ட் தாசில்தாராக வேஷம் போட்டவர்தான் கலெக்டர் உயர்திரு. தொ.மு.பா. அவர்கள். தமக்கு மற்றவர்களைவிட மிக நன்றாக நடிக்கத் தெரியும் (வாழ்க்கையிலல்ல, நாடகத்தில்தான்) என்பதை உறுதிப்படுத்திவிட்டார் அன்று. அவரது மீசை, தலைப்பாகை, உருமால், அடடா, எல்லாம் கன கச்சிதம்தான், போங்களேன். எல்லாவற்றையும் விட கலெக்டராகப் பணியாற்றுகையிலேயே, ரிவினியூ இலாகாவிலுள்ள ஊழல்களையும், மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைளையும் அம்பலப்படுத்தும் நாடகம் ஒன்று எழுதி, அதில் தானும் ஓர் அங்கம் ஏற்று நடித்துக் காட்டிய அவரது அபார துணிவை அன்று தலைமை தாங்கிய முதலமைச்சர் வெகுவாக பாராட்டினார்.

கலெக்டர் தரிசனம் காணுவதென்றாலே சற்று சிரமம்தான். நாம் போகும்போது, அவருக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். அநேகமாய் வெளியூர்ப் பயணங்கள் போக வேண்டி வரும். என் அனுபவத்திலேயே கலெக்டர் பங்களாவில் நுழைவதே அப்போதுதான் முதல் முறை. சர்க்கார் ஊழியன், அதிலும் என்னைப்போல ரிவினியூ இலாகாவைச் சேர்ந்தவன் கலெக்டர் பங்களாவில் நுழைவதை வெளியில் உள்ளவர்கள் பார்த்தாலே போதும். கதை கதையாகப்

பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுபோல்தான் முன்னர் இருமுறை வந்தும் கலெக்டர் ஊரில் இல்லையாதலால் மூன்றாவது முறையாக அன்று கலெக்டர் பங்களாவிற்குள் சென்றேன். தாசில்தார் போன்றோரெல்லாம் கலெக்டர் தரிசனத்திற்குக் காத்துக் கிடந்தார்கள். நானும் அக்கூட்டத்துள் ஒருவனாகிவிட்டேன். தாசில்தார்களெல்லாம் நானும் அங்கு வந்திருப்பதைக் கண்டு என்ன என்ன நினைத்தார்களோ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் அப்போது நேரடியான ரிவினியூ நிர்வாகத்தின் கீழ் இல்லை. ரிவினியூவின் கிளையாகத் தனித்துச் செயல்படும் இலாகாவிலே பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த வகையில் எனக்கு ஒரு திருப்தி, மற்றவர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள முடியாதல்லவா?

நம்மைப் பற்றி அவர் என்ன என்ன நினைத்திருக்கிறாரோ, நாம் இப்படிப் போய் நிற்கப் போகிறோமே என்றெல்லாம் அலைந்தது என் மனம். காணும் வேளை வந்தது. அவரது அறைக்குள்ளே சென்றேன். ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும் அவருக்கு ஓயாத வேலைகள் தானே.