பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

“வந்த காரியம் என்ன? சீக்கிரம் சொல்லும்” பொறுப்பு வாய்ந்த பணியின் வேகம் குரலில் தொனித்தது. முதன்முறைாக அவர் என்னைப் பார்த்தார்.

“நான்தான் சிந்தனா என்ற பெயரினன்” என்றேன். அவ்வளவுதான். பிறகு பார்க்க வேணுமே! “வாரும் வாரும், உட்காரும், உம்மைத்தான் இத்தனை நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று வரவேற்கவே ஆரம்பித்துவிட்டார். தமிழுக்கு - தமிழ்க் கவிதைக்கு இவ்வளவு ஆற்றல் உண்டு என்பதை அன்றுதான் என்னால் உணர முடிந்தது. உவகை பொங்கி வழியும் உள்ளத்துடன் நான் கையோடு கொண்டு போயிருந்த ஆட்டோகிராப் புத்தகத்தை அவரிடம் நீட்டினேன்.

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்

தொழுது படித்திடு தம்பி”

என்று அன்று அவர் எழுதிக் கொடுத்ததுதான் இன்றும் என் வாழ்க்கையில் இலக்கிய மணம் கமழ நல்லதோர் தூண்டுகோலாக இருக்கின்றது.

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் மாலை. அந்த மாலை ஏன் வந்தது என்று தோன்றிற்று எங்களுக்கெல்லாம். கலைக் கோயிலாம் வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் கலையுள்ளம் படைத்த கலெக்டர் உயர்திரு. தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான் அவர்களுக்கு ஏதோ விருந்துபசாரம், அவர் அன்றோடு ஒய்வு பெறுவதை முன்னிட்டு ஏற்பாடு பண்ண்ப்பட்டிருந்தது. நானும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேலூருக்குச் சென்றிருந்தேன். அவர் இன்னும் பல காலம் கலெக்டராகவே இருந்திருந்தால் எங்களுக்கெல்லாம் மிகவும் உற்சாகமாகவே இருந்திருக்கும். எங்களுக்கெல்லாம் மிகவும் உற்காமாகவே இருந்திருக்குமே என்றா எண்ணினேன்? பிறகு, அவ்வெண்ணம் எவ்வளவு குறுகியது என்பது எனக்குப்பட்டது. உலகத்துக்கெல்லாம் தமிழை, தமிழ்க் கலையை, தமிழ்ப் பண்பாட்டை எடுத்து வாரி வழங்கும் ஒப்பற்ற பணியிலல்லவா அவர் திளைக்க வேண்டும்? அதை விட்டு இன்னும் அவர் கலெக்டராகவே இருக்க எண்ணிய எனது அற்ப ஆசையை நினைந்து வெட்கினேன். உலகத்தில் தமிழனது பெருமையை நிலைநாட்ட உயர்திரு தொ.மு.பாவைப் போன்ற தக்கார் வேறு யாருளர்?