பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

“அப்படியானால் கேளுங்கள். இமயமலையின் உயர்ந்த சிகரத்தைக் காண, ஒரு கூட்டம் புறப்படுகின்றது. அவர்களுக்கு வழிகாட்டியாய், அதற்குமுன் பல தடவை அச்சிகரத்தைக் கண்ட ஒருவன் அவர்களை அழைத்துச் செல்கிறான். எல்லோரும் செல்லக்கூடிய ஒரு எல்லைவரை அக்கூட்டத்தை அவன் கூட்டிச்சென்று விடுகிறான். அந்த எல்லைக்கு அப்புறம் அக்கூட்டத்தார் அவனைத் தொடர்ந்து போவதற்கு இயலவில்லை. ஆனால் வழிகாட்டியாக வந்தவனோ, ஒரே தாவில் தாவி, சிகரத்தின் உச்சிக்குப் போய் விடுகிறான். இதுதான் உயர்ந்த சிகரம் என்று கைகளை அகல விரித்துக் காட்டுகிறான். அவன் அச்சிகரத்திற்குத் தாவிப்போன முறையையும், அவன் அங்கு நின்று கொண்டு கைகளை விரித்துக் காட்டுகின்ற நிலையையும் பார்த்துச் சிகரத்தின் உச்சியைக் காணச் சென்றவர்கள் அப்படியே அதிசயித்து நிற்கிறார்கள்.

இதேபோலத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் வாசகர்களாகிய நம்மையெல்லாம் தம்முடன் இழுத்துச் செல்கிறார். சிறையிருந்த செல்வியான சீதை, தன் நாயகன் அனுப்பிய கணையாழியைப் பெற்றவுடனே, அடைந்த இன்பத்தை நம்மால் எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியுமோ, அவ்வளவையும் அனுபவிக்கும்படி செய்துவிட்டு, நாம் அவரைப் பின் தொடர முடியாதிருக்கிற அந்த நிலையில், சீதை அடைந்த அத்தியந்த இன்பத்தைத் தாம் உணர்ந்து, அது உணரக்கூடியதேயன்றி, உரைக்கக்கூடியதன்று என்பதைப் புலப்படுத்த “இதென்னதெனலாமே” என்று கூறித் தமது கவிதா சக்தியின் சிகரத்திற்குத் தாவி விடுகிறார். நாமெல்லாம் அவருடைய கவித்திறனைக் கண்டு அப்படியே ஆச்சரியப்படுவதைத் தவிர, வேறு செயலில்லாதவர்களாக இருக்கிறோம். தெரிந்ததா இப்போது ‘இதென்ன தெனலாமே என்று கம்பன் பாடியதின் அர்த்தம்.”

“ஆமாம். ரொம்ப அற்புதமாய்த் தானிருக்கிறது.”

இவ்வளவும், திரு. வெள்ளக்கால் முதலியாரவர்களுக்கும், எனக்கும் பல வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பாஷணை. இந்த சம்பாஷணையைப் படிப்பதில், ஒரு ரஸமும் இருக்காது. இந்த நிகழ்ச்சியையும், பேச்சையும் சினிமாவாகப் படம்பிடித்திருந்தால், முதலியாரவர்களைப் பலர் நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சம்பாஷணை சினிமா ஸ்டுடியோவில் நடக்கவில்லையே. வெள்ளக்காலில் ஒரு வாய்க்கால் கரையிலே, ஒரு அழகிய தென்னந்தோப்பின் பக்கம் அல்லவா நடந்தது. அந்தப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு மட்டுந்தானே கிடைத்தது.