பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 69

1936 ஆம் வருஷம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் நான் சில நாட்கள் வெள்ளக்கால் முதலியார் அவர்கள் வீட்டில் தங்கினேன். காலை 6 அல்லது 6.30 மணியிருக்கும். அப்போதுதான் நான் படுக்கையைவிட்டு எழுந்து வெளியே கொஞ்சம் உலாவி வரப் புறப்பட்டேன். முதலியார் அவர்களோ, காலை நாலு மணிக்கே படுக்கையை விட்டு எழுந்திருப்பவர்கள். 5 மணிக்குள் காலைக் கடன்கள், சாப்பாடு எல்லாம் முடிந்துவிடும். 5 மணி முதல் 6.30 மணி வரை ஊருக்கு வெளியே வாக்கிங். வாக்கிங் என்றால் அரை மைல் ஒரு மைல் அல்ல. குறைந்தது மூன்று மைல். முதலியார் அவர்கள் வாக் முடிந்து திரும்புகிற நேரமும், நான் வாக் புறப்படுகிற நேரமும் சரியாயிருந்தது. இடைவழியில் சந்தித்தோம் இருவரும். அப்போதுதான் இவ்வளவு பேச்சும்.

என்ன உத்சாகம்! என்ன துள்ளல்! என்ன குதிப்பு! இமயமலை ஏறுபவர்களுக்கு வழிகாட்டியாகப் போகும் வழிகாட்டி, (Guide) தான் தான் என்றல்லவா தன்னைப் பாவித்துக் கொண்டார்கள். வாய்க்கால் கரையானாலும், மலையேறுகிற பாவனைதான் பேச்சு முழுவதும். இமயமலை ஏறுவதற்கு இவர்கள் வழிகாட்டியாக அமையாவிட்டாலும், கம்பன் கவிதா சிகரத்திற்கு நம்மையெல்லாம் கூட்டிச் செல்வதற்கு இவர்களைவிடச் சிறந்த ஒரு வழிகாட்டி உண்டா? என்றெல்லாம் நினைத்தேன். ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அந்தப் பேச்சை நினைத்தால் அவர்களது உடல் உறுதி, தளராத உக்கம், உத்சாகமான உள்ளம், கம்பன் பக்தி, தமிழ் வெறி எல்லாம் இப்போதும் என் கண்முன்னே வந்துவிடுகின்றன.

இவ்வளவும் யாரைப் பற்றிச் சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? எண்பத்தி நான்கு ஆண்டுகள் நிறைந்த நமது தமிழ்ப் பெரும்புலவர் வெள்ளக்கால், ராவ் சாகிப் சுப்பிரமணிய முதலியாரவர்களைப் பற்றித்தான்.

நான் சொன்ன இவ்வளவு விஷயங்களையும் கவி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள்.

“எண்பதாண் டான இளைஞனே! இன்னமுதின் பண்பெலாங் காட்டுதமிழ்ப் பாவலனே! - நண்பனே வெள்ளக்காற் செல்வனே! வேள்சுப் பிரமணிய வள்ளலே வாழ்க மகிழ்ந்து!” என்ற வெண்பாவில் எவ்வளவு எளிதாகச் சொல்லி

விடுகிறார்கள்.