பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அம்பொன்முடி சூடும் எங்கள்

அபிடேக வல்லி

செங்கமலப் பதம்பரவும்

கும்பமுனி பயிலும்

தென் பொதிய மலையத்துற்று

மற்று எங்கள்மலை அம்மே!

என்பது பாடல். இப்படி ஒரு சத்திய யுகம் நடந்ததை நேரில் காணவில்லை. தன் கற்பனைக் கண்களால் கண்ட காட்சியைச் சொல்கிறார் நல்லதொரு பாட்டில். ஆதலால் இப்படி ஒரு சத்திய யுகம் நடந்ததோ என்னவோ என்று தான் சங்கை எழும். ஆனால் சமீப காலத்திலே நம் கண்முன்னே அப்படி ஒரு சத்திய யுகம் நடந்தது. அந்த பொதிகை மலைச் சாரலிலே, குற்றாலத்திலேதான். ஆம், ரசிகமணி டிகேசி என்றும் பொதிகை முனிவர் முன்னால் நடந்து ஒரு சத்திய யுகம். இதை நானும் தமிழ் அன்பர் பலரும் நேரிலேயே கண்டோம், அறிந்தோம்.

டிகேசி குற்றாலத்தில் பர்ணசாலை கட்டியிருக்கவில்லை, யோக தண்டமும், கமண்டலமும் தாங்கி நடக்கவில்லை சடைமுடி, புலித்தோல் ஆடை உடுக்கவில்லை. என்றாலும் பொதிகை முனிவராக வாழ்ந்தார். அவரிடம் பலதரப்பட்டவர்கள் வந்தார்கள். ஆம், ராஜரிஷியான ராஜாஜி வந்தார். அவர் காரியங்கள் அத்தனையையும் வெறுக்கும் ஈரோட்டுப் பெரியார் வந்தார். ஆங்கில சர்க்காரின் அடிவருடிகள் வந்தார்கள், அந்தச் சர்க்காரைக் கவிழ்க்க விரும்பிய அரசியல் வாதிகள் வந்தார்கள். எஃகு சட்டம் என்னும் ஐசிஎஸ் வர்க்கத்தினர் வந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சி குலை நடுங்கும் அஸ்திவார உத்தியோகஸ்தர்கள் வந்தனர். ஏன், நிரம்ப சொல்லப்போனால் சிஐடி என்னும் ரகசிய போலீசார் வந்தனர். அவர்கள் கண்ணுக்கு அகப்படாமல் திரைமறைவாய்த் திரியும் குற்றவாளிகள் வந்தனர். வைதீகப் பிராமணர்கள் வந்தனர், அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறும் ஜஸ்டிஸ் கட்சியினர் வந்தனர். முஸ்லீம் அன்பர்கள் வந்தனர். ஹரிஜன சகோதரர் வந்தனர், சைவர்கள் வந்தனர், வைணவர்கள் வந்தனர், சமணர்கள் வந்தனர், பெளத்தர்கள் வந்தனர், ஆண்கள் வந்தனர், பெண்கள் வந்தனர். குடுகுடு கிழவர்கள் வந்தனர், பச்சிளங் குழந்தைகள் வந்தனர். எல்லோரும் டிகேசி உடனிருந்து அவர் சொல்லும் பாடல்களைக் கேட்டனர். அவற்றைக் கேட்பதில் மெய்மறந்தனர். அவர் சொன்ன கவிகளை மாந்தினர். உணவை உண்டனர். கோலகலமான வாழ்வையே அனுபவித்தனர். இப்படி ஒரு யுகத்தை நடத்தியவர் அவர் என்னும்