பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 87

கவிமணியும் சளைக்கவில்லை, “தமிழ்விழா அன்பர்களுடன் சேர்ந்து கொண்டு ரசிகமணியவர்களும் என்னை என்ன எல்லாமோ சொல்லிப் பாராட்டுகிறார்கள். எனக்கு நிரம்ப நாளாக இருந்த சந்தேகம் இன்று தீர்ந்துவிட்டது. நமது கோயில்களில் இருக்கிற முர்த்திகளை எல்லாம் ஏன் கல்லிலும் செம்பிலும் செய்து வைத்திருக்கிறார்கள் என்று. இன்று தெரிந்தது எனக்கு. இப்படிப் பக்தர்கள் பாலையும், தேனையும், பஞ்சாமிர்தத்தையும் குடம் குடமாகக் கொட்டினால் எப்படி அந்தத் தெய்வங்கள் எலும்பும் தோலும், சதையும் இரத்தமும் உடையவர்களாக இருந்தால் தாங்க முடியும் என்று. முடியாதையா முடியாது, என்றுதான் கல்லாகவே சமைத்துவிட்டார்கள் அவர்கள். எலும்பும் தோலுமாக இருக்கின்ற என் பேரிலே இத்தனை அன்பையும் பாராட்டையும் கொட்டுகிறீர்களே அது சரிதானா” என்றார்கள். ஆனால் என்னுடைய ஆதங்கம் எல்லாம், தமிழ் மக்கள் எல்லாம் முன்னால் கட்டியங்கூற, தமிழ்க் கவிஞர்கள் எல்லாம் பின்னால் பல்லாண்டு பாட, அலங்கரிக்கப்பட்ட யானை மீது அம்பாரி வைத்து அதில் கவிமணியவர்களை ஏற்றி பவனிவிடவில்லையே, அதற்கு அவர்கள் உடல் நிலை இடம் கொடுக்கவில்லையே என்பதுதான்.

கவிமணியவர்கள் சென்ற செப்டம்பரில் அமரர் ஆகிவிட்டார்கள். அவர்கள் அமரர் ஆவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பு அவர்களைக் கடைசி முறையாகச் சென்று காணும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. அவசர வேலையாக தஞ்சையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்றிருந்த நான், கவிமணியவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று தெரிந்து, மனைவி மக்களுடன் விரைந்து சென்று புத்தேரியில் அவர்களைக் கண்டேன். படுத்த படுக்கையில் இருந்தார்கள், என்றாலும் என்னைக் கண்டதும் கட்டித் தழுவினார்கள் கண்ணிர் விட்டார்கள். என்னாலுமே தாங்க முடியவில்லை. ஆனால் கொஞ்சநேரத்தில தெளிவு பெற்றுவிட்டார்கள். எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். இல்லை விவாதிக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் இசையைப் பற்றிப் பேசும்போது சொன்னார்கள். ஒரு கதை ஜெர்மன் தேசத்துப் பாடகி ஒருத்தி, அவள் தன் சொந்த பாஷையான ஜெர்மன் பாஷையில் உள்ள பெருக்கல் வாய்ப்பாட்டையே சாகித்தியமாக வைத்து ஒரு கச்சேரியை சென்னையில் செய்துவிட்டாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் நாட்டு ரசிகர்களும் பேஷ், பேஷ், என்று தலையை ஆட்டி பாராட்டிவிட்டார்கள். இப்படி இருக்கிறது தமிழ்நாட்டின் சங்கீத அனுபவம், என்று அவர்கள் சொன்னபோது