பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாஸ்கரத் தொண்டைமான்

அந்தக் கதையில் உள்ள ஹாஸ்யத்தை விட, அவர்கள் உள்ளத்தில் உள்ள குமுறலையே உணர்ந்தேன். நடனச் சங்கீதத்திற்கு சாகித்தியம் எவ்வளவு அவசியம் என்பதை கவிமணியவர்கள் எத்தனை தரம் எப்படி எல்லாம் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் என் நினைவுக்கு வந்தது.

அவர்களுடன் அன்று தங்கியிருந்ததெல்லாம். ஏதோ ஒரு மணி நேர காலமே என்றாலும், அதற்குள் நாங்கள் பேசிய விஷயங்கள் எல்லாம் எத்தனை எத்தனையோ. ரசிகமணியவர்கள் கம்பராமாயணத் திருத்தங்களைப் பற்றிப் பேசினோம். நாமக்கல் கவிஞர் குறள் உரையைப் பற்றிப் பேசினோம். தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளை, அதில் வருகின்ற கட்டுரைகள், கதைகள் எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம். இத்தனையும் பேசியபோது தளர்வொன்றும் இல்லாதது கண்டு, நான் சொன்னேன். ஐயாவுக்கு நலிவெல்லாம் கழுத்துக்குக் கீழேதான், கழுத்துக்கு மேலே எல்லாம் தெளிவாக இருக்கிறது என்று. சிரித்துக் கொண்டார்கள். பின்னர் அவர்களோடேயே பிறந்து வளர்ந்த வியாதி ஆஸ்த்துமா, எக்சிமா, என்றெல்லாம் தொந்தரவு இல்லையே என்று விசாரித்தேன். இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு, நல்ல நகைச்சுவையோடு “என்ன தம்பி எனக்கு ஒரு யமன் போதாதா இன்னும் அந்தப் பழைய இரண்டு யமன்களும் வேறே வேண்டுமா” என்றார்கள். வாழ்வு அவ்வளவு கசந்திருக்கிறது அவர்களுக்கு. (அகில இந்திய வானொலியில் பேசியது - 30.8.1955)

பெயரன் பேத்தியருக்கு தாத்தா கதை சொல்கிறார்