பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

போய்விட்டோமே, ஆசாமி பெரிய அசத்தலான ஆசாமியாக இருப்பான் போலிருக்கிறதே, என்று எண்ணுகிறான். அவனையே கேட்கிறான் ஒருகேள்வி. இன்னமும் நீ சின்னவன்தானா என்று.

இந்தப் பாட்டை அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எத்தனையோ பேர் கேட்டார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒருவரை மட்டும் இந்தப் பாட்டு ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. கூட்டத்தை விட்டு தன் வீட்டிற்கு, ஆம், சண்முக விலாசம் என்று விலாசமிட்ட வீட்டிற்குச் செல்வதற்குள் குறைந்தது இருபது தடவையாவது சொல்லிச் சொல்லி மனனம் பண்ணியிருப்பார், மகிழ்ந்திருப்பார், அத்துடன் நிற்கவில்லை அவர். சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் பாட்டை தன் கதைகளில் நுழைத்தார், கட்டுரைகளில் நுழைத்தார். பேச்சுக்களில் நுழைத்தார். அப்படிப் பாட்டோடு பாட்டாக, ஷண்முகநாதனோடு ஷண்முகநாதனாக தேவனோடு தேவனாக இணைந்து போனவர்தான் நண்பர் மகாதேவன். அதற்குமுன் ஏதோ ஏனோதானோ என்று இலக்கிய உலகில் நண்பராக இருந்த நாங்கள் இருவரும் அந்த நாள் முதல், அந்நியோன்ய நண்பர்கள் ஆனோம். அது காரணமாகவே அவர் தஞ்சைக்கு வந்து என்னோடு ஒரு வாரம் தங்கி, என்னோடு ஊர் ஊராகச் சுற்றி மூர்த்திகளையெல்லாம் கண்டு தொழுதார். இந்த ஒரு வாரமும் எவ்வளவோ இன்பமாகக் கழிந்தது இருவருக்கும்.

நண்பர் தேவனை நல்ல கதை எழுதுபவர் என்று பல வருஷங்களாகத் தெரியும். ஆனந்தவிகடன் நிர்வாகப் பொறுப்புடைய ஆசிரியர் என்றும் தெரியும். ஆனால் எவ்வளவு குழந்தையுள்ளம் படைத்தவர், பண்பு நிறைந்தவர், சிறந்த நண்பர் என்பதை, அந்த ஒருவாரம் என்னுடன் தங்கி இருந்த போதுதான் தெரிந்து கொண்டேன். அவர் முதல் முதல் எழுதிய மிஸ்டர் ராஜாமணியை அந்த குஞ்சுப் பயல் ராஜமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு ராஜமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம் தமிழே அறியாத துணைவியிடம் அந்த மாமா மொழிபெயர்த்த விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் சிரித்ததை எல்லாம் சொன்னபோது அவர் சொன்னார். ஆம் அந்த மாஸ்டர் ராஜமணி சார்தான் எனக்கு ஆனந்தவிகடனில் வேலை தேடிக் கொடுத்தார். அவர்தான் என்னை ஆசிரியர் கல்கியிடமும், அதிபர் வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தார் என்றார். மேலும் சொன்னார். அந்தக் கட்டுரையைப் படித்த கல்கிக்கு ஒரு சந்தேகம்,