பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்மையை எவ்வளவு தூரம் பாதித்து முழுமை பெறாதபடி ஆக்கியிருக்கிறது என்பதை “அறுவடை” இயம்புகிறது. போதும்! திரு க.நா.சு. வரிந்து கட்டிக்கொண்டு, “தமிழில் என்னுடைய ‘பொய்தேவு,’ ஆர். ஷண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்’ ” —என்று தமிழ் நாவல் இலக்கியத்திற்கு ஓர் எல்லைக்கோடு கிழித்து, ‘வீண் ஜம்பம்’ பேச இனி முன்போலத் துணிவு பெறார். ஏனெனில், எல்லைக் கோட்டு விஷயம் போர்க்கோலம் பூண்ட கதையை அவர் அறியமாட்டாரா என்ன?

இந்த நாவலின் கதையம்சமும் கருவும் என்ன கூறுகிறது என்பதை உற்றுப் பார்க்கும்போது, இந்தக் கதைக் கரு, ஒரு நாவலுக்குரியதாகவே அமையக் காணோம்! அவர் பிறப்பித்துள்ள கதைக் கருவும், சிருஷ்டித்துக் காட்டியுள்ள மனிதர்களும் ஒரு நாவலுக்குரியவர்களாகவே தோன்றவில்லை. ஒரு சிறு கதைக்குரிய நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு, ‘நாகம்மாள்’ எழுதிய காலத்தில் எழுதிய அதே பழைய உத்திகளோடு இன்று ‘அறுவடை’ யையும் எழுதியிருக்கிறார்.

“எதற்காக எழுதுகிறேன்” என்ற கேள்விக்கு ஆர். ஷண்முகசுந்தரம் கூறும் மறுமொழி “தனி மனிதன், குடும்பம் இவற்றின் மீது பணத்துக்கு உள்ள ஆதிக்கம் குறைந்தால், எதற்காக எழுதுகிறேன் என்ற கேள்விக்கு, நான் தரும் பதில் ஒரு தனிக் காவியமாக இருக்கும்!”

தனி மனிதன், பண ஆதிக்கம்-இவை தான் இவருடைய ஆரம்பகால நாவல்களின் அடிப்படையாக இருந்தன.

109