பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றும் அறிந்தோம். ஈண்டு பிறவியிலேயே, குடிவழியாக அமையப் பெற்ற இயல்பூக்கங்களைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம்.

மீன் நீந்துதல், தேனி மதுவைச் சேகரித்தல், குருவி கூடு கட்டுதல், மயில் தோகையை விரித்தாடுதல், பூனை எவியைப் பிடித்தல், குழந்தை மார்புண்ணல்-ஆகியவை போன்றவை இயல்பூக்கச் செயல்கள் ஆகும். ஆனால், இயல்பூக்கம் இன்னதென்று திட்டமாக வரையறுத்துக் கூறுவது அவ்வளவு எளிதன்று, இயல்பூக்கங்களின் தன்மை பற்றியும் எண்ணிக்கை பற்றியும் உளவியல் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் இயல்பூக்கம் என்பதே இல்லை என்பர்; சிலர் இயல்பூக்கம் என்ற சொல்லையே கைவிட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் உந்தல்[1] ஊக்குகிலை[2] போன்ற சொற்களைக் கையாளுவர். உந்தல்கள், ஊக்குநிலைகள் ஆகிய வற்றைக் கீழே காண்போம். பொதுவாகக் கூறுமிடத்து இயல் பூக்கம் என்பது மிகவும் சிக்கலானது; மாறுந் தன்மையுடையது, அஃது ஒரு நோக்கத்தைக் கொண்டது; முழு உயிரியின் வேலையாக இருப்பது.

மனிதனும் இயல்பூக்கமும் : விலங்குகளின் செயல்கள் யாவும் இயல்பூக்கச் செயல்களே. மக்களின் செயல்களில் இயல்பூக்கச் செயல்கள் அவர்களின் சிந்தனையாற்றலால் மாறுதலடைகின்றன. பசி கொண்டவுடன் உணவை விரும்பவும், திகிலடைத்ததும் ஓடவும், ஆராய்வு ஆர்வம் எழுந்ததும் ஆராயவும், நம்முடைய இயல்பூக்கங்கள் தூண்டுகின்றன. ஆனால், இவற்றை நாம் செய்து தீரவேண்டும் என்பதில்லை. நம் இயல்பூக்கங்கள் உள்ளத்தின் ஆட்சிக்குட்பட்டவை; மாறும் தன்மை வாய்ந்தவை. இயல்பூக்கம் இறுதி இலக்கைத் தருகின்றது. ஆனால், அறிதிறன் இவ் இலக்கைப் பெறும் வழிவகைகளை அறுதியிடுகின்றது. ஒரு தாய் தன் குழந்தையின் நலத்தை இயல்பூக்கத்தின் பயனாக விரும்புகின்றான் என்றாலும், அவள் தன் அறிதிறனால் அந்நலத்தை மீனெண்ணெயினாலோ இலேகியத்தினாலோ பெறுகின்றாள். அதிதிறன் இறுதி இலக்கைக்கூட மாற்றி வேறு பயனை நாடச் செய்யும் ஆற்றலுடையது. இதையே உயர் மடைமாற்றம்[3] என்பர். யானை மரங்களைப் பிடுங்கி மனிதர்களைக் கொல்லும், ஆனால், அதன் பலத்தை நல்வழியிற் பழக்கி விட்டால் அரியபெரிது

  1. 89. உந்தில் -Drive
  2. 90. ஊக்குநிலை - Motive.
  3. 91. உயர் மடைமாற்றம் - Sublimation.