பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊக்கு நிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

177


இக்குழந்தைக்கு வன்மையான ஊக்கியாக அமைந்தது; பெருக்கல் வாய்ப்பாட்டைக் கற்றதுடன் வேறு பலன்களையும் விளைத்தது. இரண்டு: ஆசிரியரிடமும் அவர் கற்பித்த கணக்குப் பாடத்திட்டத்திலும் வெறுப்பு ஏற்பட்டது. இவை இரண்டும்கூட படிப்பினைகளே. இத்னால்தான் பல உளவியல் அறிஞர்கள் தண்டனைகளைக் கையாளலாகாது என உரைக்கின்றனர். தண்டனைகளால் விளைவதாக அவர்கள் கூறும் பலன்கள் வருமாறு:

(1) தண்டனை தருவோரிடம் வெறுப்பையும்[1] பகைமையையும்[2] உண்டாக்குகின்றன.

(2) பெரும்பாலும் அதிகப்படியான உள்ளக்கிளர்ச்சியின் காரணமாக எந்தவிதமான கற்றலும் குழந்தையிடம் நேரிடாது போகக் காரணமும் உண்டு.

(3) கற்க வேண்டிய பொருளைக் கற்பதிலிருக்கும் ஆர்வத்தைவிட எப்படியாவது தண்டனையிலிருந்து தப்புவதற்காகக் கற்கவேண்டும் என்ற எண்ணமே மீதூர்ந்து நிற்கின்றது.

(4) மனக்கவலையால்[3] விளையும் ஈர்ப்பின் காரணமாக சோர்வு அல்லது களைப்பு[4] அதிகமாக நேரிடுகின்றது.

(5) வகுப்பு அமைதி சிதைகின்றது.

பரிசில் நல்குவதில் நல்ல வேலைக்கும் இன்பத்திற்கும் தொடர்புறுத்தி ஊக்கம் ஏற்படுத்த முயல்கின்றோம்; தண்டனை யில் தவறான வேலைக்கும் துன்பத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி அந்த வேலையை அகற்ற முயலுகின்றோம். தவறான வேலைக்கும் வலிக்குமுள்ள தொடர்பு இயற்கையானதன்று. மாணாக்கன் வலிக்கு ஆயத்தமாயிருந்தால், குறிப்பிட்ட தவறான செயல் அகற்றப்பெறாது. சிலசமயம் தண்டனை பயன்தரலாம்; அதற்கு வாய்ப்பும் உண்டு. ஆனால், பெரும் பாலும் தவறென்பதை உற்றறியாமல் தவறுசெய்வதும், எப்படியாவது கண்டுபிடிக்காமலிருக்க வேண்டும் என்ற நோக்கமும் வந்து விடுகின்றது. ஆகவே, தண்டனை நிலையான பயன் அளிப்பதில்லை.


க. உ. கோ.12

  1. வெறுப்பு-Resentment.
  2. பகைமை-Hostility.
  3. மனக்கவலை-Anxiety.
  4. களைப்பு, சோர்வு.Fatigue.