பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

247

அவற்றை முன்னறிவுடன் தொடர்புறவும் செய்கின்றனர். வினாக்களை விடுக்கும் நோக்கம் குழந்தையின் அறிவைச் சோதிப்பதன்று; அவன் சிந்தனையைத் தூண்டி புதிய கூறுகளைப் பார்க்கச் செய்வதே. அவனது விடுப்பூக்கம் கிளர்ந்தெழச் செய்யப்பெறுகின்றது; குழந்தையும் சில விடைகளைப் பெறுகின்றான்; இவை புதிய பிரச்சினைகளைக் கிளப்பி விடுகின்றன; இவை பொருளை மீட்டும் கவனிக்கச் செய்கின்றன.

கவனத்தின் வீச்சு[1] : ஒருவர் ஒரு சமயத்தில் கவனிக்கக் கூடிய பொருள்களின் எண்ணிக்கையே கவனத்தின் வீச்சு என்பது. கடந்த கால ஆராய்ச்சி இந்த எண்ணிக்கையை ஐந்து அல்லது ஆறு என்று நிலை நாட்டியது; இன்று அதனைக் குறித்து சோதனை முடிவுகள் உள்ளன. நாம் ஒரு சமயத்தில் ஒரே பொருளைத்தான் கவனித்தல் இயலும். இது சாதாரண அநுபவத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். படித்தவில் ஒருவர் பல எழுத்துகள் அல்லது சொற்களைக் கவனிக்கலாம். பார்வை பற்றிய கவனத்தின் அகலத்தை கவனவீச்சறிகருவியால் [2] அளக்கலாம். சோதனைக்குட்படுவோரிடம் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள புள்ளிகளின் தொகுதியடங்கிய அட்டை யொன்று கொடுக்கப்பெறுகின்றது. அவர் சுமார் ஐந்து வினாடிக்குள் அதில் எத்தனைப் புள்ளிகள் உள என்று குறிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு எண்ணிக்கையுள்ள புள்ளிகள் அடங்கிய அட்டைகள் கொடுக்கப்பெறும். ஒரு முதிர்ந்தவர் 6 புள்ளிகள் வரை கவனித்தல் கூடும் என்று சோதனைமூலம் கண்டறியப்பெற்றுள்ளது. ஆனால், அப்புள்ளிகள் தனித்தனியாகக் கவனிக்கப் பெறவில்லை; அவை முழுமையாக ஒரே நிகழ்ச்சிபோலவே கவனிக்கப்பெறுகின்றன. பல பொருள்கள் ஒரு சிக்கலான முழுமை அமைப்பில் இருந்தால்தான் நாம் பல பொருள்களைக் கவனித்தல் இயலும். நாம் ஒரு சமயத்தில் கவனிக்கும் பொருள் எளிய பொருளாய் இராவிடினும் ஒற்றைப் பொருள்தான். இந்த ஒருமைப்பாடு அமையாவிடில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் கவனித்தல் முடியாது. பல்வேறுபட்ட செயல்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு செயல் முறையா கின்றது. ஆனால், சாதாரண மக்கள் வேறுபட்ட இரண்டு செயல்முறைகள் ஒரே சமயத்தில் கவனிக்கப்பெறுகின்றன என்று கூறலாம். இதன் விளக்கத்தைக் 'கவனத்தின் பிரிவு' என்பதன் கீழ்க் காண்க.


  1. வீச்சு-Span.
  2. கவனவீச்சறிகருவி-Tachistoscope.