பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

77


நூற்றல், நெய்தல் போன்ற தொழில்களும் புலத்தின் இயக்கத்திற்குத் துணை செய்பவை. இவ்வாறு காட்சிப் பொருள்களை உணர்தல் கருத்துப் பொருளைத் தெளிவுடன் அறிவதற்கு வாய்ப்பு அளிப்பதாகும். வகுப்பறையில் கற்பிக்கும்பொழுது, படங்கள், துணைக்கருவிகள், கரும்பலகை முதலியவற்றின் துணைகொண்டு பலபுலன்களுக்கு முறையீடு செய்யும் வாய்ப்பு அளிக்கலாம்.

உற்று நோக்கல்

அறிவு புலன்களின் வாயிலாகவே ஏற்படுகின்றது என்பதை மேலே கண்டோம். எனவே, முதன்மைக் கருத்துகள் யாவும் பொருள்களின் நேர்த்தொடர்பு மூலமே உண்டாகின்றன. அஃதாவது, புலன்களின் மூலமே நாம் அறிவினைப் பெறுகின்றோம். புலப்பயிற்சி உற்றுநோக்கலைக் குழந்தைகளிடம் உண்டாக்குவதையே நோக்கமாக உடையது. உற்று நோக்கல் என்பது என்ன? ஒரு பொருளைக் கூர்ந்து நோக்கி அதன் பகுதிகளையும் விவரங்களையும் குறிப்பாகக் கவனித்தலே உற்று நோக்கல் ஆகும்; ஒரு பொருளை நோக்கமற்றுப் பார்த்தல் உற்று நோக்கல் ஆகாது. ஒரு பொருளுக்கும் அதுபோன்ற பிறபொருளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்த்தால் தான் உற்று நோக்கலாகக் கொள்ளப்பெறும்.

உற்றுநோக்கல் என்ன என்பதைச் சில எடுத்துக்காட்டுகள் தெளிவுபடுத்தும். நாம் பொருள்கள் விற்கும் சந்தைக்குச் செல்லுகிறோம். அங்கு, பல்வேறு கடைகளைக் காண்கின்றோம்; இவ்வாறு காண்பது உற்று நோக்கல் ஆகாது. கருணைக்கிழங்கு வாங்க வேண்டும் என்றால் அதை நினைவில் வைத்துக் கொண்டு, தேங்காய்க் கடைகள், தானியக் கடைகள், பழக் கடைகள், இலைக்கடைகள் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, காய்க்கறிக்கடைகளை அடைந்து அவற்றிலும் கிழங்கு வகைகள் விற்கும் இடத்திற்குச் சென்று நமக்கு வேண்டிய கருணைக் கிழங்கு உள்ளதா என்று ஊன்றிக் கவனித்தலே உற்று நோக்கல் ஆகும். உற்று நோக்கலில் ஒரு நோக்கம் இருக்கும்; புலன்களும் மனமும் இயைந்து ஒரு முகப்பட்டுச் செயல் புரியும்; திட்டமாகவும் ஒரு தொடர்புடனும் அவை தொழிற்படும்.

உற்றுநோக்கலில் பயிற்சி தருவது தற்காலக் கல்வியின் முக்கிய நோக்கம் ஆகும். இவ்விடத்தில் நாம் முக்கியமாக மனத்திலிருத்த வேண்டியது என்னவெனில், உற்று நோக்கல் என்பது, ஒருவித தனி மன வன்மை (Faculty) அல்ல. அங்ஙனம்