பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

கல்வெட்டில் தேவார மூவர்


ஆசிரியர்‌ அறிமுகம்‌

பேராசிரியர்‌ கா. ம. வேங்கடராமையா

வளமான வாழ்வின்‌ சுருக்கம்‌

தமிழறிஞர்‌ கா. ம. வேங்கடராமையா அவர்கள்‌ சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த காராம்பாக்கம்‌ என்னும்‌ சிற்றூரில்‌ 4. 4. 1911இல்‌ பிறந்தார்‌. இவரின்‌ தாயார்‌ பெயர்‌ வேங்கட சுப்பம்மா; தந்தையாரின்‌ பெயர்‌ கிருஷ்ணையா; தாய்மொழி தெலுங்கு.

சென்னை இலயோலாக்‌ கல்லூரியில்‌ பி.ஏ., (பொருளாதாரம்‌) படித்த இவர்‌ தமிழ்‌ வித்துவான்‌ தேர்விலும்‌ வென்று செங்கற்பட்டு தூய கொலம்பா உயர்நிலைப்‌ பள்ளியில்‌ தமிழாசிரியராகப்‌ பணிபுரிந்தார்‌. அதுபோது சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பி.ஓ.எல்‌., பட்டமும்‌, எம்‌.ஏ., பட்டமும்‌ வென்று விளங்கினார்‌. திருப்பனந்தாள்‌ ஸ்ரீகாசிமடம்‌ தொடங்கிய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள்‌ தமிழ்க்கல்லூரியின்‌ முதன்‌ முதல்வராகப்‌ பொறுப்பேற்று இருபத்தெட்டாண்டுகள்‌ அரும்பணியாற்றித்‌ தமிழகத்திற்குப்‌ பல்லாயிரம்‌ புலவர்‌ பெருமக்களைப்‌ புலமைக்‌ கொடையாக வழங்கினார்‌. தம்‌ மக்களையும்‌ தமிழ்ப்புலவர்களாக ஆக்கியது இவரின்‌ தனித்தன்மையாகும்‌. இவ்வகைக்கும்‌ இவர்தம்‌ பிற தமிழ்ப்‌ பணிகளுக்கும்‌ உற்சாமூட்டிப்‌ பெருமை சேர்த்தவர்‌ இவர்தம்‌ துணைவியார்‌ அன்னபூரணி என்பதை இங்குக்‌ குறிப்பிட்டாக வேண்டும்‌.

பணி ஓய்வுக்குப்‌ பிறகும்‌ தமிழ்ப்பணிக்கு ஓய்வில்லை என்ற உறுதியுடன்‌, சென்னையில்‌ அன்றைய ஆளுநர்‌ மேதகு கே. கே. ஷா அவர்களின்‌ தனிப்பார்வையில்‌ இயங்கிய தமிழ்‌ சமஸ்கிருதம்‌ மற்றும்‌ பிறமொழிகள்‌ ஆய்வு நிறுவனத்தில்‌ பணிபுரிந்தார்‌. அதுபோது அவரியற்றிய பன்மொழி இலக்கண ஒப்பீட்டாய்வுகள்‌ இன்னமும்‌ வெளியிடப்‌ பெறவில்லை.

பின்னர்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகத்‌ திருக்குறள்‌ இருக்கையில்‌ ஆய்வுப்பணிகள்‌ மேற்கொண்டார்‌. அதன்பின்னர்த்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதற்பேராசிரியராகப்‌ பொறுப்பேற்றார்‌.