பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 75

6. திருவாரூர்த் திருக்கோயிலில்

திருவாரூர் மூலஸ்தானமுடையார் (வன்மீகிநாதர்) கோயிலில் இரண்டாம் குலோத்துங்க சோழன், ஆளுடைய பிள்ளையார், திருநாவுக்கரசர், ஆளுடைய நம்பி, பரவை நாச்சியார் ஆகியோர் திருவுருவங்களை எழுந்தருள்வித்தான்.

இரண்டாம் குலோத்துங்கன் தம் ஏழாம் ஆட்சியாண்டில், ஆளுடைய நம்பிக்கும் பரவை நாச்சியாருக்கும் அர்ச்சனபோகமாகக் கெய மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டுத் திருவாதிரை மங்கலம் என்னும் ஊர் 'அனபாயநல்லூர் எனப் புதுப்பெயர் இடப்பெற்றும், 12ஆவது ஆண்டு முதல் தான விநோத நல்லூர் என்னும் ஊரும் தரப்பெற்றன. ஆளுடைய பிள்ளையாருக்கும் திருநாவுக்கரசருக்கும் அர்ச்சனாபோகமாகச் சிவபாத சேகர நல்லூர் தரப்பெற்றது. நித்திய நைமித்திய வழிபாடுகள் நிகழ்ந்தன.

ஆளுடைய நம்பிக்கும் பரவை நாச்சியாருக்கும் நான்கு சந்தியமுது படையலுக்கும், சிறப்புத் திருநாள், திருக்கார்த்திகைத் திருநாள், திருமார்கழித் திருவாதிரைத் திருநாட்களில் சிறப்பமுது படையலுக்கும் ஏற்பாடு செய்தான் இவ்வேந்தன். சுந்தரர் எழுந்தருளும் திருநாட்கள் ஐம்பத்தாறு: அவை வருமாறு:

அமாவாசைத் திருநாள் 12

சங்கராந்தித் திருநாள் 8

விஷவயனத் திருநாள் 4

கிராகணத் திருநாள் 2

திருமார்கழித் திருவாதிரை 1