பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கல் சிரிக்கிறது

“ஸார்! தர்மராஜன் ஸார்!”

“ரொம்ப சரி. நானே தான்!”

“ஸார், உள்ளே வாங்கோளேன். ஸார், எத்தனை நாளாச்சு!"

சுழல்கள், பிம்பங்கள், கல்லெறிகள், கலைவுகள் மீண்டும் பிம்பங்கள், கால்வாரிகள், கொடிச் சுற்றல்கள். நேற்று கமலாம்பிகை ராப்பசி, இன்று நிறைவு, மனோகர வெய்யில், கண்ணில் கலிக்கம் எல்லாமே இந்தச் சந்திப்பின் விதியை நிறைவேற்றத் தன்னை உந்திச் செலுத்திய படிப்படியான கூம்பல்கள். கோபுரக் கட்டிடம் போல் இது ஏன் இப்படி நேர்கிறது? அது தெரிந்தால் பெரியப்பாவுக்கு முன் கட்டத்துக்கு என் காய் நகர்ந்திருக்குமே! நகர்த்துபவன் எவன்?

ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு மனம் நெகிழ்ந்து மெளனமாய் நின்றனர். கெளன்டருக்கு உள்ளும் வெளியிலும் நாலு பேர் அவர்கள் நிலை கண்டு முறுவலிப்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

“செளக்யமாயிருக்கையா, கோமதி?”

“ஆஹா நீங்கள்?”

“பார்த்தால் எப்படித் தோணறது?”

“அப்படியேதான் இருக்கீங்க ஸார்!”

“நீயும் இன்னும் கோண வகிடை விடவில்லை!"

“விமலா வகிடு ஸார்!” இருவரும் சிரித்தனர். சட்டென எழுந்தாள். “வாங்கோ ஸார், மானேஜருக்குப் பரிச்சயம் பண்ணி விடுகிறேன்.”

“இந்தச் சம்பிரதாய மெல்லாம் ஏதுக்கம்மா? வேண்டாம். அவர் குரலில் சலிப்புத் தொனித்தது.

“உங்களுக்கு வேண்டாட்டாலும் எனக்குப் பெருமை ஸார், வாங்கோ ஸார்-”