பக்கம்:கழுமலப்போர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கள நிகழ்ச்சிகளில் கருத்துடையனாய்க் கழுமலக் கோட்டைக்குள் தங்கியிருந்த கணையன், துணைவந்த கொங்குப் படை அழிவுற்றது; படைத் தலைவர் அறுவரும் இறந்துபட்டனர்; சோழர் படை, இறுதியில் கழுமலக் கோட்டையையும் சுற்றி வளைத்துக்கொண்டது என்ற செய்தியைக் கேட்டுக் கலக்கமும் கடுஞ்சினமும் கொண்டு களம் நோக்கிப் புறப்பட்டான். களம் புகுந்தவன், அத்தனை அழிவிற்கும் சோழர் படைத் தலைவன் பழையன் பேராற்றலே காரணமாம் என்பது அறியவே, அவன் சீனமெல்லாம் பழையன் மீது பாய்ந்தது. அகத்துள அவ்வளவு படையையும் அவன்மீது ஏவினான். கொங்கரின் பெரிய படையையும், படைத்தலைவர் அறுவரையும் வென்ற போர் நிகழ்ச்சிகளால் களைத்திருக்கும் அந்நிலையில், சேரனும், அவன் படையும், புதிய பலத்தோடு வந்து தாக்கவே, பழையன் நிலை கலங்கிவிட்டான். அந்நிலையில் வந்து பாய்ந்த ஓர் அம்பு, அந்தோ! அவன் ஆருயிரைப் போக்கிவிட்டது. வெற்றி வீரன் களத்தில் வீழ்ந்துவிட்டான்.

செய்தி கேட்டான் செங்கணான். கொங்கரை வென்று அழிக்கக் கருதிய தன் கனவை நினைவாக்கிய பெருவீரன், சேரன் படைத் தலைவர் அறுவரை ஒருவனாகவே நின்று வென்ற உரம் உடையான் உயிரிழந்தான் என அறிந்து ஆற்றொணாத் துயர் கொண்டான். அத்துயர், மறுகணமே அடங்காச் சினமாய் மாறிற்று. பழையன் உயிர் போக்கிய கணையனைக் கட்டிப் பிடித்துச் சிறையில் அடைத்துச் சீரழியச் செய்வேன் என வஞ்சினம் உரைத்து வாளெடுத்துக் களம் புகுந்தான்.

சோழன் செங்கணானே களம் புகுந்துவிட்டான் என்பதறிந்த சேரனும் பெரிய தேர் ஏறிப் போர்க்களம் புகுந்தான். இருவர்க்கும் இடையே பெரும்போர் நிகழ்ந்தது. ஆனால், இறுதியில் செங்கணான் நினைத்தது நிகழ்ந்துவிட்டது. தன் படைவன்மையால், படைவலி இழந்துபோகத், தேரும் அழிந்துபோகத் தனித்து நின்ற கணைக்கால் இரும்பொறையின் கையில் விலங்கிட்டுக் கைப்பற்றிக்கொண்டான். கழுமலக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/50&oldid=1359887" இலிருந்து மீள்விக்கப்பட்டது